துஷ்யந்தி
விடுகை வருடம், கிழக்குப்பல்கலைக்கழகம்.
“மீன் பாடும் தேன் நாடு” என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு பிரதேசமானது இயற்கை எழிலுடன் மட்டும் நின்று விடாது, இயற்கையுடன் கூடிய பாhரம்பரிய கலைகளையும் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது. இந்தவகையில் இம்மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ளடக்கப்படும் கிராமங்களில் ஒன்றான நாவலடியில் கடந்த, 14.06.2014 அன்று “அர்ச்சுணன் தபசு” எனும் வடமோடிக் கூத்தின் சதங்கை அணிவிழா நடைபெற்றது. இக்கிராமத்தில் பல வருடங்களுக்குப் பின் கூத்தின் உயிர்த்துடிப்பு எழுந்துள்ளது.
இக்கிராமம் இயற்கையின் சீற்றத்தினால் முற்றாக அழிவடைந்து, இங்கு வாழ்ந்த மக்கள் வேறு இடங்களுக்கு மீள் குடியேற்றப்பட்ட போதிலும், இன்று சில குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் சுதேசியத்தை தேடும் நோக்கில் தமது மண்சார் கலையை முன்னெடுக்கும் முயற்சியே இது எனலாம். இச்செயற்பாடு பாராட்டத்தக்கது. இந்தவகையில் இங்கு நடைபெற்ற சதங்கை அணி விழா பற்றி நோக்கும் போது:
தமிழரின் பாரம்பரிய கலையான கூத்தில், பாரம்பரியமாகவே பெண்கள் பார்ப்போர், விமர்சகர்கள் என்ற வரையரைக்குள்ளே நின்று விடுகின்றனர். இந்நிலை பெண்களின் ஆற்றலை மட்டுப்படுத்துகின்றது. இதற்கு எமது சமூக நடத்தைக் கோலங்களும், ஆண் – பெண் என்ற பால்நிலை வேறுபாடும் காரணமாய் அமைந்து விட்டன எனலாம். இதற்கு மாறாக, அண்மைக் காலமாக கலாநிதி.சி.ஜெயசங்கர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டின் கீழ் பல பெண்கள் பாரம்பரியக் கூத்தில், ஆட்டத்தில் பங்கெடுக்கும் கலைஞர்களாக உருவாகியுள்ளனர். இச்செயற்பாட்டிற்குள் சீலாமுனைக் கிராமத்தை அன்டிய பெண்களும், பல்கலைக்கழக மாணவிகளும் உள்ளடக்கப்பட்டனர். இது தவிர பாரம்பரியக் கூத்தில் பெண்கள் ஆடுகின்ற நிலை இன்றி காணப்படுகின்றது. பாடசாலை மட்டத்திலும் பெண் பிள்ளைகள் தமிழ்த்தின போட்டி போன்றவற்றில், போட்டி காரணமாக கூத்து என்ற பெயரில் மேடையில் ஆடப்படு;ம் நடனமாகவே பங்கெடுக்கின்றனர். இந்நிலையில் நாவலடியில் இடம் பெற்ற சதங்கை அணி விழாவில் பெண் பாத்திரத்திற்கு பெண்பள்ளைகளே முன்வந்து, சதங்கை அணிந்து கூத்தாடினர். இச்செயற்பாடு மிகவும் வரவேற்கத்தக்கதாக அமைந்தது. இவ்விழாவில் கலாநிதி.சி.ஜெயசங்கர் அவர்கள் உள்ளிட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தினரும்; பங்கெடுத்து அப்பெண்பிள்ளைகளை ஊக்குவித்தனர்.
இச்சதங்கை அணி விழா நடைபெற்ற கூத்தினை பழக்கியவர், சித்தாண்டியைச் சேர்ந்த அண்ணாவியார்: வேல்முருகு தம்பிமுத்து என்பவரே. இவர் பல கூத்துக்களை பழக்கி அரங்கேற்றியதுடன், ஜெயசங்கர் அவர்களின் வேண்டு கோளிற்கு அமைய பல்கலைக்கழகத்திலும் பெண் மாணவிகள் உட்பட பல மாணவர்களுக்கு கூத்து பழக்கிய அனுபவம் வாய்ந்த சிறந்த அண்ணாவி, இவருடன் இணைந்து இன்னும் சில அண்ணாவிமார் இக்கூத்தில் பங்கு எடுத்து இச்சதங்கை அணிவிழாவை சிறப்பித்தனர். இக்கூத்து, சதங்கை அணிவிழா என்பதால் பாத்திர வேடஉடை ஒப்பனை இன்றி சதங்கை அணிந்து ஆடப்பட்டது. இருப்பினும், பாத்திரப் பொருத்தம் சிறப்பானதாக அமைந்திருந்தது. இதில் ஒரு பெண்பிள்ளை, அர்ச்சுணனை காண வந்த உமாதேவியின் மாற்றுவடிவமான வேடுவிச்சியாகவும், மற்றைய பெண்பிள்ளை அர்ச்சுணனுக்கு வரம் கொடுக்க சிவனோடு வந்த உமாதேவியாகவும், பாத்திரமேற்றனர். இவர்கள் வழக்கமாக கூத்தாடும் கலைஞர்களுடன் இணைந்து மிகவும் சிறப்பாக ஆடினர். இவர்களின் ஆட்டம், பாடல் தொனி என்பன சிறப்பாக அமைந்து இருந்தது. அத்தோடு இவர்களின் பெற்றோர் மிக ஊக்குவிப்பு மிக்கவர்களாகக் காணப்பட்டனர். இக்கூத்தில் வேடுவிச்சி பாத்திரத்தை ஏற்ற பிள்ளையின் பெயர் கிரு~pகா வயது பதின்நான்கு, உமாதேவி பாத்திரமேற்ற பிள்ளையின் பெயர் கா.பிரகாசினி வயது இருபத்தியொன்று இவர்களின் தாய்மார் இருவரும் கூத்தில் ஆர்வமுடையவர்களாகவும், தங்களின் பிள்ளைகள் கூத்தாடுவதில் விருப்பமுடையவர்களாகவும் காணப்பட்டனர். கிரு~pகா கூத்தாடுகையில் அவளின் தாய் தனது கையினால் தாளம் போட்டு மிக விருவிருப்புடன் பார்த்ததை அவதானிக்க முடிந்தது, இன்றைய நவீனம் விரும்பும் உலகில் இவ்வாறான தாய்மாரும் இருக்கின்றனர் என ஆச்சியத்துடன் பார்க்கமுடிந்தது. அத்தோடு கிரு~pகாவின் அம்மம்மாவும் இதற்கு மிகவும் ஊக்கமளித்ததாகவும், கூத்துப்பயிற்சியின் போதும் ஒவ்வொரு தடவையும் இவர்கள் குடும்பத்துடன் வந்து கிரு~pகா கூத்து பழகும் வரைக்கும் இருந்து இவருக்கு ஊக்கமளித்தாகவும் அறிய முடிந்தது.
மேலும் மற்றைய பெண்பிள்ளையான பிரகாசினியிடம் கூத்துப்பழகிய அனுபவம் பற்றி வினவிய போது: “தனக்கு சிறுவயதிலிருந்தே கூத்து ஆடவேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், தனது தந்தை கூத்தாடும் போது நான் மிக ஆர்வமுடன் பார்ப்பேன்”; எனவும் குறிப்பிட்டார். அத்தோடு இக்கூத்திற்கு தானாகவே மிக விருப்பப்பட்டு பங்கெடுத்ததாகவும் குறிப்பிட்டார். பெரும்பாலும் பாடசாலை மாணவிகளும், பல்கலைக்கழக மாணவிகளும் கல்வி நோக்கத்திற்காகவும், திறமைப் போட்டிக்காகவுமே கூத்துப்பழகுகின்றனர். ஆனால் இவர் எந்தவித நோக்கமும், எதிர்பார்ப்பும் இன்றி தானே விரும்பி கூத்தாடியமை இவரின் கலை ஆர்வத்தினை காட்டுகின்றது. அத்தோடு பெண்கள் கூத்தாடக்கூடாது, பெண்கள் ஒடுங்கித்தான் இருக்க வேண்டும் என்று கூறும் எமது சமூகத்தில், இவ்வாறான தற்துணிவும், திறமையும் மிக்க இப்பெண்பிள்ளைகள் பாராட்டிற்குறியவர்களாகவும், ஏனைய பெண்பிள்ளைகளுக்கு முன்னுதாரணங்களாகவும் திகழ்ந்துள்ளனர்.
மேலும் இச்சதங்கை அணி விழாவின் போது கிராம மக்களின் பங்கு இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் கூத்துப்பார்க்க வந்தவர்களை மிகச்சிறந்த முறையில் உபசரித்தனர். அத்தோடு சபைகூடும் இடத்தில் கலவரம் வருவது போன்ற நிலமை இங்கு காணப்படவில்லை. அனைவரும் ஒத்திசைந்து இவ்விழாவை நடாத்தினர். இவ்விழா காலையில் தொடங்கி மதியம் வரை வேலைப்பழு நிறைந்த நேரத்தில் நடைபெற்றிருந்த பொழுதிலும், பலர் குடும்பத்துடன் வந்திருந்து பார்வையிட்டனர். அத்தோடு சிறுவர்கள், முதியோர்கள் என அனைவரும் மகிழ்சியாக பங்கெடுத்தமையை அவதானிக்க முடிந்தது. இவ்விழாவில் கலந்து கொண்டோர் இப்பெண்பிள்ளைகளை விமர்சித்தோ இழிவு படுத்தியோ நோக்காமல் ஊக்கமளித்து வரவேற்றனர். எனவே பெண் ஒடுக்கு முறை இல்லாத இத்தகைய சமூக சூழல் சிறப்பானதாகவும், வரவேற்கத்தக்கதாகவும் அமைந்துள்ளது.
மேலும் பெண்கள் கூத்தாடுவதை வரவேற்று, இக்கூத்தினை முன்னெடுத்து நடாத்திய அழகேந்திரன், சிவராசா, ஈஸ்வரன் போன்றினதும், இவர்களுடன் இணைந்த ஏனையோரினதும் இத்தகைய கூத்து முன்னெடுப்புச் செயற்பாடு மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். இச்செயற்பாடு இதனோடு மாத்திரம் நின்று விடாது, இது ஒரு தொடர்செயற்பாடாக அமைய வேண்டும். ஒரு சமூதாயத்தின் எழுச்சிக்கும், அதன் தனித்துவ அம்சத்தினை நிலை நாட்டுவதற்கும்; கலையின் பங்கு இன்றியமையாததாகும். இந்தவகையில் இவர்கள் தமது கிராமம் அழிவடைந்த போதிலும் தமது தொன்மை மாறாமல் இருக்க தமக்குறித்தான பாரம்பரிய கலையை முன்னெடுத்த செயற்பாடாக இது அமைந்துள்ளது. இத்தகைய நிலை இன்று பல பிரதேங்களில் காணப்படுகிறது. எனவே எமது பண்பாடு, கலாசாரங்களை பிரதிபலிக்கின்ற எமது மண்சார்ந்த கலைகளை அழிவடையாலும், மேற்கத்தேய கலை எம்மை ஆட்கொள்ளாமலும் பாதுகாக்க, நாம் அனைவரும் இத்தகைய செயற்பாட்டை முன்னெடுத்தாலே போதுமானது எனலாம்.