வீட்டு எஜமானர்களின் துன்புறுத்தல்கள் காரணமாக வேலைசெய்த வீடுகளில் இருந்து தப்பியோடிய தாங்கள் தாய்நாடு சேர முடியாமல் திக்கு தெரியாமல் இருப்பதாக ஜோர்தான் அம்மான் நகரில் வீடொன்றில் மறைந்து வாழும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
சரியான முறையில் ஊதியம் வழங்கப்படாமை, தாக்கப்படுகின்றமை, உணவு வழங்காமை மற்றும் வீட்டு எஜமானர்களின் பாலியல் தொந்தரவுகள் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தாங்கள் வேலைசெய்த வீட்டிலிருந்து தப்பியோடி வாழ்ந்துவருவதாக பெண்கள் நால்வர் பி.பி.சி. சிங்களச் சேவைக்குத் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் பாணதுறை பகுதியிலிருந்து வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக ஜோர்தான் வந்தவர்களாவர்.
வீட்டு பணிப்பெண் வேலைக்காக இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
“ஒரு நாள் வயர் கோர்ட் ஒன்றினால் தாக்கப்பட்டேன் சேர். பலமான தாக்குதல் என்பதால் தலை நீல நிறமாகியது” என மனதில் உள்ள வேதனையை மறைத்துக்கொண்டு பெண்ணொருவர் பேசியதை உரையாடலில் மறுபக்கம் இருந்த என்னால் உணரமுடிந்தது.
நாய் கூட்டை துப்பரவு செய்யும் நபர் வரும்போது எஜமானரின் மனைவி அறையினுள் சென்று கதவை மூடிக்கொள்வதன் மூலம் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதை அனுமதிப்பதாக குறித்த பணிப்பெண் தெரிவிக்கிறார்.
‘நூற்றுக்கணக்கானோர்’
“எனக்கு நிறைய சித்திரவதை செய்தார்கள் சேர். அதன் பிறகு ஒருவனைக் கொண்டு என்னை சித்திரவதை செய்தார்கள். 10 டினார் தருகிறேன், என்னோடு இரு என கூறினான். உன்னுடையஞ்.. இரு என நான் திட்டினேன். அவனை நான் அடித்தேன் சேர்” என கண்ணீருக்கு மத்தியில் அந்தப் பெண் தெரிவிக்கிறார்.
“கத்தியொன்றை என்னுடன் வைத்தே இருந்தேன். மீண்டும் தொல்லை கொடுக்க வந்தால் கழுத்தை வெட்டுவதற்காக.”
ஔிந்து மறைந்து வாழும் தாங்கள் ஒருவேளை பொலிஸாரிடம் சிக்குவோமானால் மீண்டும் முகவர் நிறுவனத்திடம் கைளிக்கப்படுவோம் என்றும் – தற்போது சட்டவிரோதமாக வாழ்வதால் வேறு வேலையும் செய்யமுடியாத ஒரு நிலை காணப்படுகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
“ஒரு நாள் வயர் கோர்ட் ஒன்றினால் தாக்கப்பட்டேன் சேர். பலமான தாக்குதல் என்பதால் தலை நீல நிறமாகியது”
அம்மான் நகரில் சிக்கித்தவிக்கும் பாணதுறையைச் சேர்ந்த பெண்ணொருவர்
தங்களைப்போன்றே இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பணிப்பெண்கள் நிர்க்கதியற்ற நிலையில் காணப்படுகின்றனர் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான பாலியல் தொந்தரவுகள், துன்புறுத்தல்களின் பின்னர் அம்மான் நகரத்தில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயத்துக்கு சென்றதும் அங்குள்ள அதிகாரிகள் தங்களை முகவர் நிறுவனத்திடம் கையளிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதன் பின்னர் தங்களை பெரும்பாலும் வேலைசெய்த வீட்டுக்கே – எஜமானருக்கே கையளிப்பதனால் தங்களது நிலை சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாகிவிடுகிறது என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
‘பொய்க் குற்றச்சாட்டு’
இவர்களின் குற்றச்சாட்டுல் எதுவித உண்மையுமில்லை என தூதுவராலயத்தின் தொழிலாளர்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரி யாப்பா பதிரண பி.பி.சிக்குத் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து வரும்போதே வீட்டு எஜமானர்களினால் பணிப்பெண்ணுக்காக ஒரு தொகை செலுத்தப்படுகிறது என தெரிவிக்கும் அவர், வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்துக்கு செலுத்தும் பணம் உட்பட சுமார் ரூபா 5 லட்சம் எஜமானர் ஒருவரினால் செலவழிக்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
அதனால், பணிப்பெண் ஒருவர் வீட்டைவிட்டு வெளியேறினால், அவருக்கு செலுத்தப்பட்ட தொகை மீள் கிடைக்கும் வரை குறித்த பணிப்பெண்ணுக்கு நாட்டை விட்டு வெளியேறும் வீசா பத்திரம் கிடைக்கப்பெறாது என தூதுவராலயத்தின் இரண்டாவது செயலாளர் யாப்பா பதிரண தெரிவிக்கிறார்.
நாட்டில் காணப்படும் சட்டத்தை மீறி தன்னால் எதுவும் செய்ய முடியாது எனத் தெரிவிக்கும் அவர், ஆனால் பாலியல் தொந்தரவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெறுமிடத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதிரண தெரிவிக்கிறார்.
நன்றி: பி.பி.சி. சிங்களச் சேவை,http://maatram.org/?p=490