புதியமாதவி,மும்பை
இரும்புக் கதவுகளில்
அடைப்பட்டுக் கிடந்த
அடிமைப் பெண்கள்
தங்கக் கூண்டில்
பொற்கிளியாய்
பூஜிக்கப்பட்டதை
புரட்சி என்று
சொன்னவர்கள் பலருண்டு.
பெண்ணே..
உன் அலங்கார சாதனங்கள் கூட
உன்னை அடிமைப்படுத்தவே
தயாரிக்கப்படுகின்றன.
அன்று..
மல்லிகைப்பூ
இன்று
ஆப்பிள் ஐபேட்.
என்று காலந்தோறும்
அவர்கள் கொடுக்கும்
பரிசுகள்தான் மாறுகின்றன
எப்போதும்
ஏதாவது
கொடுத்துக்கொண்டே இருப்பதினால்
உன் கையில்
நிரந்தரமாக இருக்கிறது
பிச்சைப்பாத்திரம்
உன் கருப்பைகளை
நிறைத்தப் படி
எப்போதும் ஆட்சி செய்யும்
சிவலிங்கம்.
பெண்ணியம் பேசியவர்கள் பலர். அவர்களில் இருவர் மட்டுமே பெண்ணிய தளத்தில் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். ஒருவர் புத்தர். இன்னொருவர் தந்தை பெரியார்.
பெண் வாழ்வது ஆணுக்காகவும், அவனுடம் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இல்லை. பெண்ணுக்குத் தேவை அனுதாபமில்லை, விடுதலை! தனது வீட்டுக்கு வெளியேயும் உலகம் இருக்கிறது என்ற சிந்தனை வேண்டும். இந்தச் சிந்தனை மட்டும் வந்துவிட்டால் பெண் என்பவள் தாயாகவும் தாரமாகவும் சகோதரியாகவும் மட்டுமே இருந்து ஆணின் நிழலிலும் தயவிலும் வாழும் ஓர் அடிமையாக இருக்க மாட்டாள்-. தேசத்திற்கே வழிகாட்டும் தலைமைத்துவமாக -உயர்ந்து நிற்பாள் என்ற
பிளிறலோடு பெண் விடுதலைக்கான கொடியை முதன் முதலில் பறக்கவிட்டவர் கவுதம புத்தர்.
புத்தர் பெண்களுக்கான சிந்தனையில் செயல்பாட்டில் இச்சையாகவோ அனிச்சையாகவோ ஆணாதிக்க உணர்வுகள் தனக்குள் புகுந்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். ஓர் ஆணின் பார்வையில் நிகழ்த்தப்படும்
எந்தவோர் ஒழுக்கத்தத்துவமும் பொதுத்தத்துவத்தின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க முடியும் என்றார்.
புத்தராக மாறிய சித்தார்த்தன் அந்தக் கடைசிநாளில் அரண்மனையில் தன் மனைவி யசோதரையை மறுமணம் செய்து கொள்ளும்படி அறிவுரை செய்கிறார். மறுத்த யசோதரை சித்தார்த்தனிடம் சொல்லிய காரணங்கள் மிக முக்கியமானவை.
“உலக மக்களின் நன்மைக்காக நீங்கள் துறவறம் மேற்கொள்கிறீர்கள். நானும் துறவியாக விரும்புகிறேன். ஆனால் மகன் ராகுலையும் வயது முதிர்ந்த தங்களின் தாய் தந்தையரையும் அன்புடன் கவனித்துக் கொள்ள, நான் சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சிறிதும் வருத்தப்படாமல் செல்லுங்கள் ” என்பதுதான்.-
அவள் சொன்னதைக் கேட்டு எவ்வித மறுப்புரையும் சொல்லாமல் சித்தார்த்தன்
புத்தனாக தன் பயணத்தை ஆரம்பித்தது பெண்ணிய விடுதலை வரலாற்றின் முதல் அத்தியாயம்.
துறவியாக விருப்பம் இருந்தும் யசோதரை ஏன் சித்தார்த்தனுடன் சேர்ந்து
சமூக வெளிக்குள் வரவில்லை, ஆண் எப்போது வேண்டுமானாலும் இல்லறத்தைவிட்டு வெளியில் வந்து விட முடியும். அச்செயல் எக்காலத்தும்
எவ்விடத்திலும் மிகப் பெரிய குற்றமாக பார்க்கப்படவில்லை. எக்காலத்தும் எவ்விடத்தும் எப்போதும் ஒரு பெண்ணுக்கு மட்டும் அது சாத்தியப்படுவதில்லை. பெண்ணால் முடியாது!
ஏன் பெண்ணால் முடியாது? எது பெண்ணை அவள் விருப்பத்தை நிறைவு செய்ய தடையாக இருக்கிறது? குடும்பம் என்பதும் உறவுகள் என்பதும் கடமை என்பதும் ஏன் பெண் மீது மட்டுமே சுமத்தப்பட்டிருக்கிறது? தாய்மையை முள் கீரிடமாக பெண்களின் தலையில் சுமத்தி அதையும் அவளுக்குரிய பெருமையின் அடையாளமாக காலம் காலமாக சொல்லிச் சொல்லி அவளையும் நம்ப வைத்திருக்கிறோம் என்பதை
முதன் முதலாக சமூக தளத்தில் எழுதியவர் பேசியவர் தந்தை பெரியார் மட்டமே. “உண்மையான பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும். பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர வேறு எந்த வகையிலும் ஆண்மை அழியாது என்பதோடு பெண்களுக்கு விடுதலையும் இல்லை என்கிற முடிவு நமக்குக் கல்லுப்போன்ற உறுதியுடையதாய் இருக்கின்றது ” என்று மிகவும் உறுதியாக தீர்மானிக்கிறார் தந்தை பெரியார். அவருடைய இக்கருத்து இயற்கைக்கு மாறானதாகவும் நடைமுறைக்கு ஒவ்வாததாகவும் இன்றும் பலர் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களாலும் கூட பிள்ளை பெறும் தொல்லை பெண் விடுதலைக்கு எல்லா வகையிலும் இடையூறாக இருப்பதை மறுக்க முடியாது.
குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தாய் தந்தை இருவருக்குமானது; என்பதை இன்றைய சமூகம் ஏற்றுக்கொண்டாலும் அதைக் கடமையாக பெண்ணுக்கு மட்டுமே விதித்திருக்கிறது. குழந்தையின் உடல்நலன் பாதிக்கப்பட்டாலும் குழந்தை தொடர்பான வேறு சிறு சிறு வேலைகளுக்கும் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஒரு பெண்ணுக்கே ஏற்படுகிறது. அதனால்தான் அலுவலகங்களில் பொறுப்புகள் அதிகம் உள்ள உயர்பதவிகளை எட்டுவதுஎன்பது பெண்ணுக்கு சாத்தியமில்லாமல் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால்; பெண்களே கூட அக்கூடுதல் பொறுப்புகளை விலக்கி வைக்கின்ற நிலையைக் காணலாம். ஏனேனில் வேலை பறிபோனாலோ அல்லது வேலையை விட்டுவிட்டாலோ ஆணைச் சார்ந்திருக்க வேண்டிய அவலமும் அதனால் அவனின் மேலாண்மைக்கு அடிமையாகும் நிர்பந்தமும் பெண்ணுக்கு ஏற்பட்டுவிடுகிறது.
The Centre for reproductive rights என்ற அமைப்பு ஐ. நா. சபையின் மனித உரிமை
குழுவிடம் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில் அமெரிக்க அரசு பெண்களின் உடல்நலம் மீதும் வாழ்க்கை மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. குழந்தை பிறப்புக்கு பிறகான உடல்நலம்,குடும்பக்கட்டுப்பாடு, பாதுகாப்பான முறையான கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளில் அமெரிக்க அரசு கடுமையான விதிகளை விதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. . இந்த அறிக்கை பெண்ணியவாதிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் பெண்களின் நிலை கவலை அளிப்பதாக இருப்பதற்கு இன்னொரு ஆதாரம், London school of Economics நிறுவனம் தாக்கல் செய்திருக்கும்
Centre for Economics Performance என்ற அறிக்கைதான். ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை செய்தாலும் அவர்களுக்கு நிகராக சம்பளம் வாங்குவதற்கு இன்னும் 150 வருடங்கள் ஆகும் என்கிறது அந்த அறிக்கை. பெரும்பாலும் குழந்தை பிறப்புக்காக எடுக்கப்படும் விடுப்பும் அதன் பிறகு பெண்கள் பகுதி நேர வேலை பார்ப்பதும் கூட இந்த சம்பள பாகுபாட்டிற்கு காரணம் என்கிறது அந்த அறிக்கை. கடந்த முப்பது வருடங்களில் இந்த சம்பள இடைவெளி குறைந்திருந்தாலும் அது முற்றிலுமாக மறைய இன்னும் 150 ஆண்டுகள் தேவைப்படும் என்கிறது அந்த அறிக்கை. ஒரு கட்டத்தில் தன் குடும்பத்திற்க்காக, குறிப்பாக தன் குழந்தைக்காக வேலையைத் தியாகம் செய்யும் சூழலில் இருக்கும் பெண்களை நமது சமூகம் கடுமையாக தண்டிக்கிறது என்கிறார் இந்த அறிக்கையை தயார் செய்திருக்கும் அலான் மான்னிங்.
பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ என்ற பன்னிரெண்டாம் வகுப்பு அரசு தேர்வுகளில் எப்போதும் பெண்களே முதல் நிலை வகிக்கும் நிலையை நாம் இந்தியாவிலும் தொடர்ந்து பார்க்கிறோம். எனினும் அதிகாரமிக்க பதவிகளிலும் ஐ ஐ எம் போன்ற உயர்படிட்ப்புகளிலும் பெண்களின் விகிதாச்சாரம் மிகக்குறைவாகவே இருப்பதற்கான காரணத்தையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.-. படிப்பு, பதவி, உத்தியோகம் ஆகிய தகுதிகள் கூட இன்றைய சமுதாயத்தில் ஒரு பெண்ணின் கல்யாணத் தகுதிகளாக்கான அடையாளங்களாக மாற்றம் பெற்றிருக்கும் அவலத்தை என்ன வென்று சொல்வது? சாதியம் பெண்ணடிமைத்தனம் என்ற இரண்டு சமூக இழிவுகளையும் துடைக்க பெரியார் காலம் காலமாய் மனித உள்ளத்தில் ஆழமாக இடம் பிடித்திருந்த கடவுள் நம்பிக்கையை உடைக்கவும் சிதைக்கவும் முன்வந்தார். பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட பெரியாரியவாதிகள் கூட பெரியார் முன்வைத்த பெண்விடுதலை குறித்த கோட்பாடுகளில் தீவிரம் காட்டுவதில்லை. பெரியாரின் பெயரைச் சொல்லி இயக்கம் நடத்தும் தோழர்களின் அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பும் பெண்களுக்கான இடமும் என்னவாக இருக்கிறது என்பதை சற்று யோசித்துப் பார்த்தாலே தெரியவரும், பெண்ணியம் குறித்த பெரியாரியம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் உண்மை.-
பெண் விடுதலைக்கு பிள்ளைப்பெறுவது இடையூறாக இருப்பதைச் சுட்டிக்காட்டி –கர்ப்பத்தடையை தமிழ்ச் சமூகத்தின் பொது மேடைகளில்பேசவும் எழுதவும் முன்வந்தார் பெரியார். பெரியார் கர்ப்பத்தடையை ஆதரித்ததற்கும் இன்றைக்கு கர்ப்பத்தடையை அரசு ஆதரிப்பதற்கும் அடிப்படை வேறுபாடுகள் இ-ருக்கின்றன. கர்ப்பத்தடை குறித்த தன் கட்டுரையில் பெரி-யார் இந்த வேறுபாடுகள் குறித்தும் ஏற்கனவே பதிவு செய்திருப்பது நினைவு கூரத்தக்கது.
” கர்ப்பத்தடை குறித்து நாம் கருதும் காரணங்களும் மற்றவர் கருதும் காரணங்களுக்கும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. அதாவது பெண்கள் விடுதலை அடையவும் சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகிறோம். மற்றவர்கள் பெண்கள் உடல்நலத்தை உத்தேசித்தும் நாட்டிந் பொருளாதர நிலையை உத்தேசித்தும் குடும்ப சொத்துக்கு அதிகம் பங்கு ஏற்பட்டுக் குறைந்தும் குலைந்தும் போகாமல் இருக்க வேண்டுமென்பதை
உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள். இதை மேல் நாட்டில் பலர் ஆதரிக்கிறார்கள். ஆனால் நமது கருத்தோ இவைகளைப் பிரதானமாகக் கருதியதன்று” என்கிறார். கர்பத்தடை குறித்து முதன் முதலில் கவிதை எழுதிய புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசனும் கூட கர்ப்பதடைக்கு ஆதரவு கொடுத்திருக்கும் காரணம் பெரியாரின் பெண்விடுதலைக் கருத்தை முன்னிலைப் படுத்தவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். பெரியார் வாழ்ந்த காலத்திலும் பெரியார் பெண்ணிய விடுதலைக் குறித்து பேசிய இக்கருத்துகள் கலகக்குரலாகவும் மேடை வாக்குவாதப் பொருளாகவும் இருந்த அளவுக்கு பெரியாரிக்கவாதிகளின் வாழ்வியலாக மாற்றம் பெறவில்லை. பெரியார் சொன்னார் என்பதற்காக பிள்ளையார் சிலையை உடைக்கத் துணிந்த இயக்கத் தோழர்கள் பெரியார் சொன்னார் என்பதற்காக தங்கள் மனைவிமார்களைப் பிள்ளைப் பெறுவதிலிருந்து விடுவித்தார்களா என்றால் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை ( பதிவுகள் இருந்தால் தெரியப்படுத்தவும்!)
கர்ப்பத்த்டையை ஆதரிக்கும் அரசுகளும் பெண்களுக்கான கர்ப்பத்தடை குறித்து எம்மாதிரி-யான போக்குகளைக் கொண்டிருக்கிறது என்கிற செய்தி மிக-வும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஆண்களுக்குச் செய்கிற கருத்தடை அறுவைச் சிகிச்சையின் (வேஸக்டமி) பின்விளைவுகளைப் பற்றி ஆண்பாலின் உளவியலில் பெரிய கலகக்குரல்கள் உலமெங்கும் ஒலிக்கின்றன. இது லிங்க மையப் போக்கின் வெளிப்பாடுதான். ஆனால் பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகளை உருவாக்கியவர்கள் பெண்பாலின் உளவியல் பற்றி, பின்விளைவுகள் பற்றி அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த மாத்திரைகளை எடுப்பதால் மூன்றில் ஒரு பெண் நிரந்தரமான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றாள். இது பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்ப்பட்டுள்ளது. ஆண்பால் உபகரணத்தின் மீது காட்டப்படும் மிகையான கவனிப்பு இன்றும் பெண்ணின் கருப்பைக்கு கிடைக்கவில்லை.
ஆண்மை என்ற தத்துவம் -அழிக்கப்பட்டால் அல்லது பெண்ணுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. ‘ஆண்மை’ யால் தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்ன பெரியார் ” ப்பெண் விடுதலைபெறுவதற்கு இப்போது ஆண்களை விட பெண்களே பெரிதும் தடையாக இருக்கிறார்கள். ஏனேனில் இன்னமும் பெண்களுக்கு தாங்கள் ஆண்களைப் போல முழு விடுதலை உரியவ-ர்-கள் என்ற எண்ணமே தோன்றவில்லை” என்கிறார். அதாவது ஆண்மை மட்டுமல்ல, ஆண்மைக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் பெண்மை என்ற கருத்தாக்கமும் பெண்ணின் விடுதலைக்கு எதிரானதுதான். பெண்மையின் விளக்கம் காலந்தோறும் சில மேம்போக்கான மாறுதல்களைக் காட்டினாலும் அடிப்படையில் பெண் ஆணுக்காக அவன் ஆண்மைக்காக படைக்கப்பட்டிருக்கும் ஒரு பொம்மையாகவே காலம் காலமாக வலம் வருகிறாள்.
“அழகு பெண்ணின் செங்கோல் என்று குழந்தைப் பருவம் முதற்கொண்டு போதிக்கப்படுகிறது. உடலுக்கு ஏற்றவாறு மனம் தன்னையே வடிவமைக்கிறது. அதன் தங்கமுலாம் பூசிய கூண்டைச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது. கடைசியில் அதன் சிறைக்கூடத்தை அலங்காரம் செய்யப்போகிறது”
என்றார் மேரி உல்ஸ்டோன் கிராப்ட். (A vindication of the Rights of women, in 1792 pg 90). தந்தை பெரியார் சமுதாயம் பெண்ணின் அழகு என்று சுமத்தியிருக்கும் அடையாளங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை வெளிக்கொண்டுவந்தார். பெண்களையும் ஆண்களைப் போல சிகை அலங்காரமும் உடை அலங்காரமும்செ-ய்து கொள்ளுங்கள்_ என்று சொல்லும் அளவுக்கு பெண்ணின் அழகியல் சார்ந்த கோட்பாடுகளை உடைத்தார். கிரேக்கர்களைப் பொருத்தவரை ஆண் பெண் உடல்கள் மாந்த அழகினைக் கொண்டவையாக இருந்தன. அந்த அழகு பாலியல் வகைப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
பண்டைத் தமிழ்ச் சமூகத்திலும் ஆண் பெண் உடல் சார்ந்த அழகியல் இவ்வாறே இருப்பதைக் காண;லாம். பிற்காலத்தில் பேரரசுகளின் உச்சக்கட்டத்தில் பெண்ணின் அழகியல் சார்ந்த பார்வை பெரும்பாலும் அவள்
பாலியல் வகைப்பட்டதாக மாற்றம் பெற்றது. தமிழ்ச் சமூகத்தில் மட்டுமல்லஉலகமெங்கும் இதுவே நடந்திருக்கிறது எனலாம். மடோனா வடிவம் தாயாக மட்டுமின்றி அழகியல் நோக்கில் பெண் என்றும் அறியப்பட்டாள். கும்பலாக வரையப்பட்ட ஓவியங்களில் முதன் முதலாக பெண் நிர்வாணமாக வரையப்பட்டாள். ஆதாம் ஏவாள் காட்சிகளில் நிர்வாணப் பெண்வடிவம் இடம் பெற்றது.. விடுவிக்கப்பட்ட பெண்ணின் அடையாளமாக இடம் பிடித்த மேரிமக்தலேன் மணமான, பெயரற்ற , பரவசமூட்டுகின்ற இளம் பெண்ணாக மார்பளவு ஓவியமாக மாற்றம் அடைந்தாள். இவ்வாறு தீட்டப்பட்ட மார்பளவு ஓவியங்கள் பாலியல் கிளர்ச்சியூட்டும் காரணத்திற்காக தேர்வு செய்யப்பட்டன.குளிக்கும் சோப்பிலிருந்து -சமைக்கும் எண்ணெய்வரை விற்பனை செய்ய உலக அழகிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். அழகியல் என்பது முதலாளித்துவ சமூகத்தில் பெண் என்ற உயிருள்ள ஜீவனைத் தாண்டிய நுகர்ப்பொருளாக ஜடப்பொருளாக மாறிவிட்டது.
ஒரு புத்தம் புதிய காரின் முன்னால் தொடைகள் தெரிய அவள் உட்கார்ந்திருக்-கிறாள்-,- காரின் விற்பனைக்காக. ஓர் ஆணின் பாதங்கள் மீது படுத்து அவனுடைய புத்தம் பிதிய காலுறைகளைச் செல்லமாக தடவலாம், பெட்ரோல்பம்பை சவால் விடுகிற தோரணையில் ப்டித்தபடி நிற்கலாம். புதிய ஒரு ஷாம்பூவின் மகிமையை எடுத்துக் காட்ட மலையருவியில் குளித்துக் கொண்டே உள்ளாடைகள் நனைந்த கோலத்தில் அவள் நடனமாடலாம். அவள் என்ன செய்தாலும் அவளுடைய பிம்பம் விற்பனை ஆகிறது. பெண்ணின் அழகியலை முதலாளித்துவ ஆணுலகம் தீர்மானிக்கிறது. தங்கள் சந்தையில் நுகர்ப்பொருளாக மாற்றி இருக்கிறது. இவை அனைத்துக்கும் எதிராக போராட வேண்டியப் பெண்கள் ஊடக வெளிச்சத்தில் விளம்பர உத்திகளில் மயங்கி நிற்கிறார்கள். பெண் விடுதலைக்கு எதிராக இருக்கும் காரணிகள் அனைத்தையும் பட்டியலிட்டவர் பெரியார். அதனால் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் விளைவுகளையும் உணர வைத்தவர் பெரியார்.
ஆண்கள் பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண் விடுதலை அடைந்துவிடப்போவதில்லை என்பதையும் உறுதியாக சொன்னவரும் பெரியார்தான். எனவே தான் பெண்ணடிமைத் தனம் ஒழிய பாடுபடவேண்டியதும் ஒன்றுபட வேண்டிய பொறுப்பும் பெண்களுக்கே முழுவதும் இருக்கிறது. அவர் சொன்னவை அனைத்தும் இன்றும் அதே விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. இவைகளைக் கடப்பதோ அல்லது சுமப்பதோ எதுவாக இருந்தாலும் அதைத் தீர்மானிக்க வேண்டியதும் செயல்படுத்த வேண்டியதும் பெண்கள் தான்.