ச.விசயலட்சுமி ( தமிழ் நாடு ,இந்தியா)
மீன் வண்டியோடு ஓட்டமாக நடைபோட்ட காளியின் இடுப்பிலிருந்த சூர்யாவின் கிடுக்கிப்பிடி மூச்சு முட்டச் செய்தது.அட சனியனே இப்படி ஏண்டா என் உயிர எடுக்கற ….பட்டென அறைந்தாள்.இன்னும் வேகமாக அவள் முடியைப்பிடித்து இழுத்த சூர்யாவை ஒரு துணிமூட்டையை விட்டெறிவது போல பொதுக்கென பிளாட்பாரத்திற்கு விட்டெறிந்தாள் |
இந்த சனியன பெத்ததிலிருந்து இந்தபாடுபடறனே எந்தலையெழுத்து இப்படின்னு விதிச்சிட்டான் சொல்லிக்கொண்டே ஆத்திரம் தீரும் மட்டுக்குக்கு அடிக்கத்துவங்கினாள்.ஆவின் பால் பூத்திற்கு பக்கத்திலிருந்த நீலநிற பிளாஸ்டிக் கொட்டாயிலிருந்து ஓடிவந்த ஸ்டீபன் அக்கா அடிக்காதக்கா உனக்கென்ன பைத்தியம் பிடிச்சுக்கிடக்குதா ந்க்கோத்தா சொல்லிட்டே இருக்கன் நிறுத்தமாட்டியா அவனது பேச்சைக்கேட்டதும் இன்னும் வெறிபிடித்தவளாக உனக்கென்ன மசுரு சொல்லிடுவ இவனுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கறதே பொழப்பாப் போட்சு த பாரு ஸ்டீபனு காலங்காத்தால எழுந்தாதா என் பொழப்பு ஓடும் இல்லன்னா இந்தப்பய பசின்னு உயிரெடுத்தா நா என்ன எழவ கொடுக்க முடியும் .இங்கியே படுத்து கெடன்னு சொன்னாலும் ப்பிரியாம எங்கூடவே எழுந்து மல்லு குடுக்குது.கழுத்த நெறிக்கறது தலைமுடிய பிடிச்சி இழுக்கறது கடிக்கறது இப்படி வெறிபுடுச்சாப்புல கிடக்கிறத வச்சிட்டு ஒருவேல பாக்க முடியல…
ய்க்கோ காத்தால ஆரம்பிச்சிட்டியா அவன் அப்படித்தான்னு தெரிஞ்சும் பேசிக்கிட்டிருக்க பாரு உன்னிய எத்தன தபா சொன்னாலும் திருத்த முடியாதுக்கா அவன உங்கூட கூட்டிப்போவாத இங்கயே உட்டுட்டு போ சும்மா பச்ச மண்ண அடிக்கிற கத்தற எல்லாம் போதும் நிப்பாட்டிக்க…லுங்கியை தூக்கி சொருகிக்கொண்டு ஆவின் பக்கத்திலிருந்த கொட்டாய்க்குள் சென்று படுத்துக்கொண்டான். காளியையும் ஸ்டீபனையும் மாறிமாறி பார்த்த சூர்யா அங்கிருந்த ரோட்டிற்குள் இறங்கினான்.தடுமாறி விழுந்து விடுவதுபோல வேகமாக நடந்தான்.ஸ்டீபனிடம் பேசிவிட்டு பின்னால் திரும்பிய காளி இவன் நடந்து போவதைப்பார்த்ததும் ஆத்திரம் பிடுங்கித்தித்தள்ள அவனை இழுத்துவந்து அருகிருந்த பிளாட்பார அம்மன் கோவிலுக்கு முன்னாள் கட்டிப்போட்டாள்.சூர்யா நீ இங்கியே இரு நா வேலமேல போயிட்டு வரேன் .வரும்போது நாஷ்டா வாங்கியாரேன் .இட்லி வடகறி வாங்கியாறட்டா இவள் கத்திப்பேசுவதைப்பார்க்காமல் ரோட்டில் வரிசையாக போய்க்கொண்டிந்த வண்டிகளை பார்த்துக்கொண்டிருண்டிருந்தான்.அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லி முடித்த திருப்தியோடு எறா ஷெட் பக்கமாக போனாள்.அங்கிருந்த பெட்டிகளில் ஓட்டல்களுக்கு ஏற்றமாதிரி பார்சல் செய்து ஐஸ் பெட்டிகளுக்குள் வைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
சூர்யாவிற்கு அம்மா விட்டுவிட்டு வேலைக்குப்போனதோ தன்னைத்திட்டியதோ பொருட்டாக வில்லை .அவன் கையில் கிடைத்த பொருட்களை தட்டி வினோதமான ஒலியெழுப்பிக்கொண்டு விளையாடினான்.
அவன் சட்டை பட்டன் இல்லாமல் ஆங்காங்கே கிழிந்திருந்தது.தலைமுடி ஒட்ட வெட்டப்பட்டு ஆங்காங்கே சில தழும்புகளோடிருந்தான்.அவனுக்கு பிடித்தது என எதையும் சொல்லமுடியவில்லை.எப்போதாவது காரணம் தெரியாமல் கத்திக்கொண்டிருந்தால் அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சமாதானப்படுத்தினாலும் அடங்க மாட்டான்.காளி ஓடிவந்து மடியில் போட்டு தடவிக்கொடுத்தால் தூங்கிவிடுவான்.இவனுக்கு அம்மா வாசனை மட்டும் நல்லா தெரியுதென சொல்லிக்கொண்டிருக்கும் அன்னம்மா அக்கா.சூர்யாவுக்கு பசிக்குமென தான் சாப்பிட வைத்திருக்கும் பொருளில் ஒரு பங்கை எடுத்துவைத்து கொடுப்பாள் அன்னம்மா.கூடையில் கொஞ்சம் கருவாட்டினை வைத்துக்கொண்டு மார்க்கெட் ஓரத்தில் உட்கார்ந்திருப்பாள்.காளியைப்போல அன்றாடம் வேலை பார்த்தாக வேண்டியதில்லை.நாள்கிழமை காலங்களில் பெரிதாய் வியாபாரமிருக்காதென கடைபோடமாட்டாள்.
ஆடிமாதமென்றால் விற்பனை அதிகம்.முன் கூட்டியே சொல்லிவைத்து வாங்கிச்செல்வார்கள்.அன்னம்மா சூர்யாவை பார்த்துக்கொள்ளுவது காளிக்கு கொஞ்சம் ஆறுதலான விஷயம்.சூர்யா படமென்றால் காளிக்கு ரொம்ப பிடிக்கும் குழந்தை பிறப்பதற்கு முன்னாலெயே ஆண்பிள்ளை என்றால் சூர்யான்னு பேர்வைப்பதாக சொல்லிக்கொண்டிருந்தாள்.சூர்யா நடித்த பட போஸ்டர்களை கீழேவிரித்து படுத்துக்கொள்வாள்.
சூர்யாவை கோவிலுக்கு முன்னால் கட்டிப்போட்டுவிட்டு வந்திருக்கிறோம் .சீக்கிரம் போகவேண்டுமென்று காலையில் அனுப்பவேண்டிய லோட் ஏற்றி வண்டிகிளம்பியதும் அண்ணே பையனுக்கு நாஷ்டா குடுத்துட்டு வந்திடறேன்னு கிளம்பினாள்.வடகறியோடு இட்டலி வாங்கிக்கொண்டு பம்பிங் ஸ்டேஷன் குழாயில் பாட்டிலில் தண்ணீர்பிடித்துக்கொண்டு கோவில் பக்கம் சென்றாள்.கோவிலின் முன்பாக இப்படியும் அப்படியுமாக வேகவேகமாக நடந்துகொண்டிருந்த சூர்யாவைப்பார்த்து பதறினாள்.பிள்ளைக்கு வெறிவந்திருச்சு போலருக்கே தாயி காப்பாத்தும்மா என சொல்லி முடிப்பதற்குள் அவன் வேகமாக நடந்து சுவரில் பச்சக்கென மோதிக்கொண்டான். அலறத்துவங்கிவிட்டவனின் தலையிலிருந்து சிவப்பாக வழிந்ததை உற்றுப்பார்த்துக்கொண்டே சாலையைக்கடக்க முயன்றாள்.
காலையில் வாங்கிய இட்டலிப்பொட்டலத்தை பத்திரமாக வைத்திருந்த ஸ்டீபன் அக்கா இந்த இட்டலிய துண்ணுக்கா அவனுக்கு சரியாப்போவும் டென்சன் படாத என்று அவளது தோளில் கைவைத்ததும் காத்திருந்தவள் போல உடைந்து அழத்துவங்கினாள்.ய்க்கா இன்னாக்கா நீபோயி இப்பிடி இருக்கலாமா எம்மாந் தகிரியமா இருப்ப இப்பிடி அழுவாதக்கா மனசு கஸ்டமாகீதென துடித்தான்.இவன் இப்பிடி ஒரு மண்ணும் தெரியாம இருக்கான் இவன எப்பிடி காப்பாத்தபோறேன்னு தெரியலயே ஸ்டீபனு. அவன் இப்பிடி ரத்தமா கிடக்கிறத பாக்க தெம்பில்ல .இன்னா பொயப்பு வாய்தொறந்து கேக்க தெறியல.எதித்தாபோல செவுறு இருக்கறது தெறியல போய் மோதி மண்ட உடச்சிக்கிறான்.கைகால் உடச்சிக்கிறான்.த இவன் விளையாடினுகிறான் வேகமா நடக்கறான்னு பாத்த உடனியே அல்லு தூக்கி போட்டுச்சு ஏதோ பன்னிக்க போறான்னு நினச்சேன்.அடுத்த நிமிசமே இப்பிடி உடச்சிக்கினு கத்தறான் .பன்னண்டு தையல் போட்றுக்கு இது ஆறங்காட்டியும் இவங்கூட மல்லு கிடக்கணுமே…இதுக்கு எவ்ளோ வலிக்கும் .
இவனப்போல புள்ளைங்க பள்ளிக்கூடத்துல சேந்துட்டது இவன சேக்க மாட்டேங்குறாங்க.கடைசி தெரு நெட்டச்சி மகன் மூல கலங்கினவனாயிருந்தாலும் பள்ளிக்கூடத்துல சேத்துகிட்டாங்களாம் .யாருக்கும் தொந்தரவு குடுக்கிற தில்ல .சொன்ன இடத்துல மணிக்கணக்கா உக்காந்திக்கினு இருக்காம்.ஒரு எழுத்து கூட எழுத மாட்டானாம்.வெறிக்க பாத்துகிட்டிருக்குமாம்.இவன் அப்பிடி வேடிக்க பாத்துகினு இருக்கமாட்டான் அதுக்குன்னா திடீர்னு கைல கிடச்சத தூக்கிபோட்டு அடிச்சி போடுறான்.அந்த பையனபோல எங்கியும் சேத்துகிட்டா நல்லாயிருக்கும் கூட இருக்க புள்ளைங்க கூட நல்லது கெட்டது கத்துக்கும்.அழுகையை விட்டுவிட்டு இவனுக்கு அடுத்து செய்ய வேண்டியது குறித்து யோசிக்கத்தொடங்கினாள்.
சூர்யா நெற்றியில் தையல் போடப்பட்டு முகம் வீங்கிக் கிடந்தான்.அரசுமருத்துவமனையில் படுக்கைக்கு இடமில்லாமல் தரையில் பாய் விரித்து படுக்கவைத்திருந்தார்கள்.அவ்வப்போது கேஸ் வருவதும் டிஸ்ஜார்ஜ் ஆகி வெளியேறுகிறதாக பரபரப்போடு இருந்த குழந்தைகள் பிரிவில் காலையில் பாலும் பிரட்டும் கொடுத்திருப்பார்கள்.இந்த பையன் நாஷ்டாவ வாயிலியே வாங்காம துப்புது.ஸ்டீபனு ஒரு பன்னு வாங்கியாடா குடுத்துபாப்பம் என்றாள்.பாதி பன்னை டீயில் தொட்டு ஊட்டி மாத்திரைகளை விழுங்கச்செய்தாள்.
சூர்யாவிற்கு ஆர்வம் அதிகமானால் இப்படித்தான் கண் மண் தெரியாமல் இடித்துக் கொள்வான்.தலையெங்கும் ஆங்காங்கே வெட்டுக்காயங்கள்.சூர்யா கண் திறந்து பார்த்தது.வாய்திறந்து பேசியது.குரல் வெளியே எழவில்லை.வாயிலிருந்து வழிந்த ஜொல் அவனுக்கு பிடிக்க வில்லை போல கைவைத்து துடைத்துக்கொண்டவன் கையை மீண்டும் மீண்டும் உதறினான்.முகத்தை சுளிக்க முயன்றதும் வலி அதிகமானதில் அமைதியாகி சுவரை வெறித்துக் கொண்டிருந்தான்.
காளிக்கு களைப்பு அழுத்தியது .பாவிமனுசன் நிம்மதியா போயிட்டியே .திட்டிக்கொண்டே பாயின் ஓரத்தில் பையனைப்படுக்க வைத்துவிட்டு அவனோடு படுத்துக்கொண்டாள். காளி வேலைபார்த்த எறா ஷெட்டில் புதுசா வேலைக்கு வந்து சேர்ந்த பாலா .புதுப்பேட்டையிலிருந்து வந்திருந்தான்.வேலை நேரத்தில் சிரிக்க சிரிக்க பேசும் அழகு யாருக்கும் வராது.அவன் செட்டில் இருப்பதை அங்கிருக்கிற எல்லார் முகங்களிலும் தெரிகிற சந்தோஷத்தில் தெரிந்து கொள்ளமுடியும்.கருப்பா இருந்தாலும் களையானவன்.காளிக்கும் பாலாவுக்கும் எப்படி பற்றிக்கொண்ட தென தெரியவில்லை.பாலாதான் கட்டிப்பமா காளின்னு ஆரம்பிச்சான்.காளிக்கு ஆசையிருந்தாலும் தயக்கமும் பயமும் இருந்தது.பாலா அப்பா அம்மாவோடு சொந்த குடிசையில் இருப்பவன் காளிக்கென யாருமில்லை.
இப்படியே ரோட்டோரம் படுப்பதும் அங்கே இருக்கும் அக்காக்களோடு வேலைக்கு போவது சாப்பிட என அக்காக்களோடு இருந்தவள்.அன்னம்மா அக்கா பாலாவ கட்டிக்கிட்டா நல்லாயிருப்படீ சீக்கிரமா கட்டிக்க இந்த பிளாட்பாரத்தில் இருந்தது போதும் என்று பச்சைக்கொடி காட்டினாள்.பாலா வீட்டில் கடும் எதிர்ப்பு எதுவுமில்லாத பிளாட்பாரத்திற்கு பட்டுகுஞ்சமா இதெல்லாம் சரிபடாதுடா போறதுன்னா ஒரேயடியா போயிடு இந்தப்பக்கம் அப்பன் ஆத்தான்னு சொல்லிக்கிட்டு வந்திடாத என இறுதியாக சொன்ன நாளில் வீட்டை விட்டு வந்தவன்.ஆத்தோரம் குடிசை ஒன்றை வாடகைக்குப் பிடித்துவிட்டு காளியைப்பார்க்க வந்தான்.அன்னம்மாக்காவும் பாலாவும் சேர்ந்து கோவிலில் கல்யாணம் ஏற்பாடு செய்தார்கள்.காளியை இனி வேலைக்கு போகவேணாம் என்று நிறுத்திவிட்டான்.எறா ஷெட்டில் இருந்தவர்கள் அவர்கள் குடும்பக்கல்யாணம் போல கவனித்து பார்த்துக்கொண்டார்கள்.குடிசை முன்னால் தடுப்புக்கு துணிகட்டி லைட்போட்டு ஸ்பீக்கரில் குத்துப்பாட்டாக போட்டு களைகட்டினாலும் பாலாவின் அம்மா அப்பா வரவேயில்லை.அவர்கள் வராததை ஒட்டி சிலர்கேட்கவும் செய்தார்கள்.பெத்தவங்களுக்கு புடிக்கலன்னு சொல்லியும் கட்டியிருக்கன்னா இவ கிட்ட அப்படி இன்னா கண்டுகினேன்னு தெரியல இப்படி கேட்டவர்களுக்கு பிரத்யேகமாக பதில் சொல்லாமல் அப்படி ஏதும் இல்லாம இப்படி முடிவெடுப்பமா என்று பேசி நகர்ந்துவிடுவான்.
காளிமீதான அவனது கொள்ளைப்பிரியத்திற்கு அளவில்லை.அதற்கு காரணம் கேட்டால் அவணுக்கு தெரியாது.காளி காளியென சதா அவள் நினைப்பு .வேலை முடிந்ததும் ஆல்பர்ட் தியேட்டருக்கு போவது பீச்சுக்கு போவதென அவளை அழைத்துக்கொண்டு சந்தோஷமாக கிளம்பிவிடுவான்.அவனது பெற்றவர்களைப் பார்க்கவேண்டுமென காளி சொன்ன போது பெரிதாக ஆர்வம் காட்டாத பாலாவை ந்ச்சரித்தாள்.உண்மையி அம்மா அப்பா குடும் பம் பாசம் இவற்றின் மீது மிகுந்த விருப்பங்கொண்டவளாயிருந்தாள்.அவங்க அன்பு செலுத்தி இருந்தா பாலா எதுக்கு கட்டிக்கிறேன்னு என்னாண்ட வந்திருக்கப்போகுதென சில சமயம் இவளுக்குத் தோன்றினாலும் எதும் தெரியாம யோசிக்கக் கூடாது நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாம்னு கேள்விப்பட்டுக்கினு இருக்கேன் என நினைப்பு பல திசைகளில் போனாலும் அவர்களை பார்த்துவிடத்துடித்தாள்.பாலா அவளை காலையிலேயே போய் வந்திடலாம் செட்டுக்கு போவனும் ஒரு கல்யாண பார்ட்டிக்காவேண்டி எக்ஸ்டா லோடு வருதாம் என அவளைத்துரிதப்படுத்தினான்.அவனது குடிசைக்குமுன் காளியை நிப்பாட்டி இங்கயே நில்லு பாக்கறேன் என்று அம்மா அம்மா என்றான்.இதுவரை இவன் செத்தானா பிழைத்தானா என தேடிப்பார்க்காத அம்மாவின்மீது பீறிட்ட கோவத்தை அடக்கிக்கொண்டான்.
அம்மா அப்பா இரண்டுபேரும் வெளியே வந்து பார்த்து ஒருவார்த்தையும் பேச வில்லை.அவன் அம்மா மட்டும் அந்த காலையிலும் வெற்றிலைப்போட்டிருந்தாள்.பச்சக்கென துப்பினாள்.அத்தனை கோவத்தோடு துப்பியவளை பயத்தோடு பார்த்தாள் காளி.காளிக்கு பயமென்றாள் என்னவென்றே தெரியாது .சொந்தம் பாசம் என்று வந்தா கூடவே பயமும் வந்திடும் போலருக்கே சுதாரித்துக்கொண்டு அத்தை என்றாள்.அடியெஞ்சிருக்கி யாருக்கு யாரு அத்தை நல்லாயிருந்த குடும்பத்த பிரிச்சுபிட்டு அத்தையாம் அத்தை தே ..அவள கூட்டிகினு நடடா உலகத்திலில்லாத அழகிய கூட்டினு வந்துட்டான்.மீண்டும் காறி உமிழ்ந்தாள்.பாலாவால் பொறுக்க முடியவில்லை அம்மா அவ மாசமாகிறா அஞ்சு மாசம்மா எங்குளுக்கு உன்னிய உட்டா யாரும்மா பழச மனசில வச்சுக்காத மன்னிச்சிடுமா நா உன்ன கஷ்ட படுத்திகினேன்னு தெரியிது அவள கதலிச்சிட்டேன் இன்னாங்கிற . பிள்ளை பேசப்பேச சமாதானமடையாமல் திட்டிய அம்மாவையும் அவளுக்கு பணிந்ததுபோல் காலையிலேயே மப்பிலிருந்த அப்பாவையும் மன்னிக்க முடியாதவனானான்.இவன் குழந்தையை நாசமா போவட்டுமென அம்மா மண்ணை வாரித்தூற்றினாள்.
அம்மா சண்டைக்காரிதான் என்றாலும் பாலாவிற்கு எப்போதும் அன்பைமட்டுமே தந்தவள்.என்ராசா …என்மவராசன்…சக்கிரபத்தி..இப்படி சொல்லிக்கூப்பிடுவதுதான் பிடிக்கும்.அப்படியே மகனுக்கு தேவையானதை இல்லைன்னு சொல்லாம எல்லாம் பார்த்துபார்த்து செய்தவள்.எட்டாவதுக்குமேல பள்ளிக்கூடம் போவமாட்டேன்னு நின்றவனை அடித்த அன்றுதான் அம்மாவின் ஆத்திரத்தைப்பார்த்தான்.காளி பிளாட்பாரத்தில் வளர்ந்தாலும் அம்மா அப்பா இல்லாதபோதும் அங்கிருப்பவர்களை அண்ணே அக்கான்னு பேசிக்கொண்டு தான் உண்டு வேலையுண்டுன்னு இருப்பாள்.யாருக்கும் பயப்படாத ரோசக்காரி அம்மாவைப்போலவே வீம்பு இப்படி அம்மாவைப்போல அடிக்கடி நினைவு எழுந்ததன் பின்னாலில்தான் இவளைக்கட்டிக்கிட்டா தகிரியமான பொண்ணு என முடிவெடுத்தான்.காளியின் முகம் களையாய் இருக்கும் மட்டான கலர் என்றாலும் கன்னம் பூவாட்டம் மெத்துன்னு பாக்க ஆசையாயிருக்கும்..
இன்று அம்மா இப்படி சொல்லிட்டா வராமலே இருந்திருக்கலாம் போல .இவளை வீட்டில் விட்டுவிட்டு லோடு பின்னாலேயே கூட்டாளியோடு வண்டியின் பின்னால் உக்கார்ந்து சென்றவன் அத்தனை வருத்தத்தில் இருந்தான்.எப்போதும் சந்தோஷமாயிருக்கும் இவனைதேற்றமுடியாமல் பேசிக்கொண்டேவந்த நண்பன். ஸ்பீட்பிரேக்கரைக் கடக்கும் சமயத்தில் குறுக்கே வந்த நாய்மீது மோதிவிடப்போகிறோமென பிரேக்போட ஓரத்திலிருந்த முருங்கை மரத்தின் பின்னாலிருந்து வந்த வண்டியோடு நேருக்கு நேர்மோத வண்டி ஓட்டியவன் இடித்தவனை திட்டிவிட்டு பாலாவைப்பார்த்தான்.கீழே விழுந்து பின்மண்டையைத்தேய்த்தான்.தண்ணீர்வாங்கி கொடுத்துவிட்டு பாலாவை வீட்டில் விடுவதாக சொன்னவனிடம் அடம்பிடித்து லோடு பாத்துட்டு வந்திடலாமென சென்றுவிட்டு திரும்பியதும் குடோன்பூட்டி ஓனரிடம் சாவிகொடுத்தான்.வீட்டிற்கு சென்றவனுக்கு சாப்பிடப்பிடிக்கவில்லை.நம்மைப்போல அவனுக்கும் மனக்கஷ்ட்டமென சாப்பிடகூப்பிட்டுப்பார்த்தவள் அவன் வராததால் தூங்கி எழுந்தா மனசு லேசாப்போயிடும் சொந்தபந்தம் இல்லாத நமக்கே இப்படி பீலிங் இருக்கும்போது இவனுக்கு இன்னும் அதிகமிருக்குமென விட்டுவிட்டாள்.அடுத்தநாள் எவ்வளவு கூப்பாடுபோட்டும் எழாதவனை அவனது நண்பர்களும் முதலாளியும் அள்ளிக்கொண்டு ஜி.எச்சுக்கு கூட்டிப்போனார்கள்.காளிக்கு எதுவுமே புரியவில்லை.
காளி சூர்யாவை அமைதிப்படுத்தி தூங்க வைத்தாள்.அவன் போக்கில் அங்கிருக்கும் நோயாளிகளுடன் நடப்பது குதிப்பது என்று பெரும் சேட்டைகளை நிகழ்த்திக்கொ ந்டிருந்தான்.அவனுக்கு கோவம் வந்து உய்ய்யென கத்த ஆரம்பித்தால் அந்த வார்டு முழுவதும் அவனை சமாதானப்படுத்த கூடிவிடும்.அவன் அழக்காரணம் புரியாமல் திணரும் சமயங்களில் மற்ற குழந்தைக்கும் அம்மாவுக்குமான பேச்சும் சிரிப்பும் இவளுக்கு ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.மனச்சோர்வு அதிகரித்துக்கொண்டே போன இந்தநாட்களின் பிடியிலிருந்து மீண்டுவிட நினைத்து டிஸ்ச்சார்ஜ் செய்ய சொல்வோமா எழுந்த நினைப்பை சில நொடிகளில் மாற்றிக்கொள்வாள்.அங்க போலிஸ் ஸ்டேசன் மரத்தடி நிழல்லதா இவன வச்சிருக்கனும் அதுக்கு இதுவே பரவால்ல.ரோட்டோரம் தூசி டிரஸ்சிங் பண்ண ஓபி க்கு வரணும் இதுக்கு நிம்மதியா இங்கியே பாத்துக்கலாம் .முதலாளி பாவப்பட்டு வச்சிருக்கதால முடியுது இல்லாங்காட்டி பொயப்பு நாறிடும் .இவனப்பெத்ததிலருந்து இப்படியிருக்கேனே .இரவு கனவில் பாலா வந்தான்; இவள் வயிற்றிலிருந்த ஐந்துமாத குழந்தையுடன் பேசினான்; குழந்தையை எப்படி வளர்க்கவேண்டுமென்ற அவனது ஆசைகளைக்கூறி அவன் அம்மாவை நினைத்து கலங்கினான்.கலங்கிய கண்கள் அவளை பார்த்துக்கொண்டிருக்கும்போதே அம்மா என அலறிக்கொண்டே மறைந்தான்.
உடல் சில்லிட திடுக்கிட்டு எழுந்தாள்.சிலமாதங்களுக்குள் அற்புதமான வாழ்க்கையொன்றை கொடுத்து பறித்துக்கொண்டதன் இயலாமை அவளை அவ்வப்போது கலங்க வைத்தது.ருசியறியாத காலத்தில் சுய பச்சாதாபம் தோன்றியதே இல்லை.ருசித்தவாழ்க்கை அவ்வப்போது நியாபகத்திற்கு வந்து இடையூறு செய்தது.பாவம் பிள்ளை அவன் வியர்வையை துடைத்துவிட்டாள்.மத்த குழந்தையெல்லாம் வளந்திடும் எம்புள்ள எப்பவும் எனக்கு குழந்தையா இருக்கும் யாரு என்ன நினச்சாநமக்கென்ன நம்ம புள்ளய நாமே சீன்னு சொல்லிடகூடாது அது எங்க போவும் அவனுக்கு எல்லாமே நாந்தான்.மனசு பாரம் குறைந்து லேசாக தெரிந்தது.வராண்டாவுக்கு வந்தவள் நின்றிருந்த நர்சிடம் பையனைப்பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஐசியு பக்கம் போனாள்.
அங்கு இரண்டாம் நம்பர் பெட்டை கண்ணாடி வழியே எட்டிப்பார்த்தாள்.அதோ அந்த பெட்டில்தான் பாலா கொஞ்சநாள் படுத்துகிடந்து இவளுக்கென பிரத்யேகமாக எந்தவார்த்தையும் சொல்லாமல் பிரிந்தான் .அவன் அம்மா ஆஸ்பத்திரியிக்கு வந்து வண்டை வண்டையாக பேசினாள்.அவன் இறந்தபின் அவன் உடலை இவளுக்கு உரிமையில்லைன்னு சொல்லி கொண்டுபோய் தடபுடலாக செலவுசெய்து போஸ்டர் ஒட்டி வழியனுப்பினாள்.அவன் செத்ததுக்கு காளிதான் காரணமென பார்ப்பவ்ர்களிடமெல்லாம் சொல்லித்தீர்த்தாள்.ஒருநாள் பாலா வேலை செய்த எறா ஷெட்டில்தான் இவள் வேலை செய்கிறாள் என்பது தெரிந்து பேச்சோடு பேச்சாக ஷெட்டின் சுவரெங்கும் துப்பிவிட்டு போனாள்.
பாலா குட்டியாகி கையில்தவழ்ந்து கொண்டிருந்தான். அவனைப்பார்க்கும் போதெல்லாம் குழைந்து மென்மையாக மாறிவிட்டதாக உடலும் மனசும் இருக்கும்.உறவென்று யாரையும் தெரியாமல் சுற்றியிருக்கிற சிலரை உறவுகளாக அழைக்கத்தொடங்கிய வாழ்வில் புதிதாய் முளைத்திருக்கிற உறவு.காலத்துக்கும் நீ தனியாக இல்லை உனக்கொரு துணையிருக்கென பாலா கொடுத்த உறவு.பிளாட்பாரத்தில் பிழைக்கிற வாழ்க்கை நெருப்பில் நிற்பதுபோல அன்றாடம் சமாளிக்கவேண்டிய வாழ்க்கை.பாலாவைப்போல பொம்பளைகளை டீசண்ட்டா பாக்கதெரியாதவங்களுக்கு இடையில் இவ்வளவு அற்புதமான கனவாக நின்ற வாழ்க்கை.கண் கலங்கியது.டிஸ்சார்ஜ் ஆகி இவளது பிளாட்பாரத்திற்கு ஆட்டோவில் வந்திறங்கினாள்.ஸ்டீபன் அவனது கொட்டாயில் படுக்கவைக்க சொன்னான்.இனிமே இவன இங்க விட்டுட்டு போ வெளிய வெயில்ல போட்டுட்டு போவாத இந்த வெயில்லயே பையன் மூளைகலங்கிடும்…உரிமையாக சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த ரஸ்னாபாக்கெட்டை கொடுத்தான்.சூர்யா அந்த பாக்கெட்டைத்தொடும் போதெல்லாம் தலையை ஆட்டி ஆட்டி சிரித்தான்…