–அமானுல்லா எம். றிஷாத் (http://www.virakesari.lk/article/cinreviews.php?vid=16)
முன்னாள் விடுதலைப் போராளியாக வரும் கதையின் நாயகனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அனைவரையும் கவருகிறது. அளவான பேச்சினால் ஒரு சில இடங்களில் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துவதுடன் தான் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் அருமை… |
இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘இனி அவன்’ இம்முறை கொழும்பில் இடம்பெறும் 2012ஆம் ஆண்டுக்கான ஐரோப்பா திரைப்பட விழாவில் முதல் படமாக காண்பிக்கப்பட்டது. இது தவிர ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழா, டொரொன்டோ திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா போன்றவற்றிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமா என்ற மாயையிலிருந்து விடுபட்டு இப்படத்தினை பொறுத்தளவில் ஒப்பீடு கடந்த பார்வை எம்மவர்களை வளர்க்க உதவும். ஏனெனில் சினிமா தொழில்நுட்பங்களில் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கையில் இவ்வாறானதொரு முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியவை என்பதை மனதில் நிறுத்த முயற்சிப்பது நன்று.
அசோக ஹெந்தகமவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படம், யுத்தத்திற்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிருடன் திரும்பி வந்து தனது ஊரிலேயே சாதாரணமான வாழ்க்கையை தொடரவிரும்பும் ஒரு இளைஞனின் கதை.
பஸ் ஒன்று மெதுவாக யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்திற்குள் நுழைய ஆரம்பிப்பதுடன் படமும் மெதுவாக நகருகிறது. முன்னாள் போராளியான இளைஞனுக்கு (தர்ஷன் தர்மராஜ்) அவனது ஊரில் தாயை அவனது காதலியையும் தவிர ஏனையவர்கள் அவனது மனநிலையை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்கிறார்கள்.
ஆனால் எப்படியாவது தனது குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ போராடுகிறான். இந்நிலையில் நகைக்கடையொன்றில் இவனது வீரத்தின் பரிசாக வேலை ஒன்று கிடைக்கிறது. பின்னர் அக்கடை முதலாளியும் வெளிநாடுகளில் வாழும் இவனது பழைய நண்பர்களும் இணைந்து மீண்டும் ஆயதக்கலாச்சரத்திற்கு நாயகனை தள்ளிவிடுகிறார்கள்.
தொடர்ந்து நாயகன் அதிலிருந்து மீண்டானா? அல்லது துரோகிகளுடன் சேர்ந்து மாண்டானா? என்பதை நேர்த்தியான திரைக்கதை மூலம் சொல்லிமுடித்திருக்கிறார் இயக்குனர்.
படத்தின் பிரதான கதாநாயகனாக மிளிர்கிறது ஒளிப்பதிவு. யாழ்ப்பாணத்தினை காட்டிய விதம் படம் முழுவதிலும் இயற்கையுடன் ஒன்றிப்போகச் செய்கிறது. இதனால் படம் என்ற உணர்வை தாண்டி நிற்பதுடன் மனதையும் கனக்கச்செய்கிறது. இரவு நேர கடற்கரை காட்சி ஒன்றில் இடம்பெற்றுள்ள லைட்டிங் தவிர ஏனையவை சிறப்பு.
அத்துடன் முன்னாள் விடுதலைப் போராளியாக வரும் கதையின் நாயகனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அனைவரையும் கவருகிறது. அளவான பேச்சினால் ஒரு சில இடங்களில் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துவதுடன் தான் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் மற்றும் ஆதங்கங்களை வெளிப்படுத்திய விதமும் அருமை. மீண்டும் தவறுதலாக ஆயுதக் கலாச்சாரத்திற்கு சென்றதை உணர்ந்துகொண்ட போது ஏற்படுகின்ற பரிதவிப்பையும் சிறப்பாக காட்டுகிறார்.
இவர்கள் தவிர ஏனைய கதாபாத்திரங்களும் தேவையானதை செய்து படத்தினை ரசிக்க உதவியிருக்கிறார்கள். குறிப்பாக சுபாஷினி பாலசுப்ரமணியம், நிரஞ்சனி சண்முகராஜா பாத்திரத்தினை உள்வாங்கிருக்கியிருக்கிறார்கள். படத்தின் இசையும் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கில வசனங்களும் சில இடங்களில் படத்துடன் ஒன்றிப்போகவில்லை. திரையரங்கில் ஏற்பட்ட கோளாறு போலவும் தெரிந்தது. இருப்பினும் ஒன் லொக்கேசன் இசை படத்திற்கு உயிரோட்டமாய் அமைகிறது.
வசனங்கள் குறைவு என்றாலும் யதார்த்தமாகவும் அர்த்தம் பொதிந்தவையாகவும் இருக்கிறது. குறிப்பாக பிரபாகரனை கேள்வியா கேட்டிங்க?, பிரபாகரன் வென்றிருக்கலாம் என்ற இடங்கள் பன்ச் ரகமாய் அமைகிறது.
நிறைகள் அதிகமிருந்தபோதிலும் சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனரின் திரைக்கதையிலிருக்கும் நேர்த்தி முதல் அரை மணி நேரத்திற்கு எடிட்டிங்கில் இல்லாமல் போனது திரைக்கதையை மிக மெதுவாக நகரச்செய்வது வருத்தம்.
இதுமட்டுமன்றி ஒப்பனை ஒரு சில இடங்களில் செயற்கை என்பது அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் நிரஞ்சனி சண்முகராஜாவின் மேல் பூசப்பட்டுள்ள கருப்பு சாயம் பட்டும் படாமல் இருக்கிறது. இயல்பான படமொன்றிக்கு ஒப்பனையில் இன்னும் கொஞ்சம் அதிகமாவே உழைத்திருக்கலாம்.
இயக்குனரின் தமிழர்களின் மீதான பார்வை பல இடங்களில் சிறப்பாக பளிச்சிடுகிறது. மோட்டார் சைக்கிள் பழுதடைந்த நிலையில் நாயகனுக்கு உதவ ஒரு சிங்கள வாகன ஓட்டுனர் கேட்க பதிலேதும் இல்லாமல் திருத்த வேலையை தொடர மோட்டார் சைக்கிளின் கோளாறும் திருத்தப்பட்டுவிடும். பின்னர் அந்த சிங்கள நண்பருக்கு நன்றி சொல்லி வழியனுப்புகிறார்கள். இந்த இடத்தில் நாயகனுடன் சேர்த்து தமிழர்களின் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாய் ஒரு உணர்வை ஏற்படுத்தியிப்பது மகிழ்ச்சி.
அத்துடன் ஊசியால் குத்தி இரத்தத்தினால் பொட்டு வைத்து விதவைக்கு வாழ்வளிக்கும் காட்சி என தமிழர்களின் என வீரத்தையும் உணர்வுகளையும் ஒரு சிங்கள இயக்குனராக இருந்தும் அவற்றை கையாண்டுள்ள விதம் வரவேற்கத்தக்கது.
ஆனாலும் தமிழர்கள் அழிவதற்கு அவர்களே காரணமாகின்றனர் என நாசுக்காக காட்டியிருக்கும் இயக்குனர் இறுதியில் மீண்டும் யுத்தத்தை முன்னெடுக்கும் முயற்சிகளை கைவிட்டதாக காட்டாமல் போனது சற்றே நெருடலை ஏற்படுத்துகிறது. மேலும் படத்தின் முடிவில் வரும் எழுத்தோட்டத்தில் இனியவன் என்று சிங்களத்தில் வருவதை கவனத்தில் எடுத்திருக்கலாம்.
மொத்தத்தில் யுத்தத்தினை அனுபவித்தவர்கள் மீண்டுமொரு யுத்தத்தினை விரும்பவில்லை என்பதை உணர்த்தி நாயகன் ஒரு பக்கம் விரைந்து செல்ல கெமரா வானத்தை நோக்கி சென்று ஓங்கி வளர்ந்திருக்கும் பனமரங்களை காட்டியவாறு தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்வார்கள் என்பதை உணரவைத்து இனியவனாய் முடிகிறது இந்த ‘இனி அவன்’.