ரதன்
பெண் மொழியைப் பேசும் இப் படம் உலகில் உள்ள அனைத்து பெண் போராளிகளையும் பிரதிநிதிப்படுத்தியுள்ளது. அனைத்து பெண்களும் பொதுவாக ஒரே மாதிரி பிரச்சினைகளையே சந்திக்கின்றனர். அவ் வகையில் இப் படம் நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க படமாகும். |
ஒரு மாலைப் பொழுது. தனது குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவற்றை செய்து கொண்டிருக்கும் பொழுது கணவன் உள்ளே வருகின்றான். “எனது உடுப்புக்களை எடுத்து வை” வெளிய+ர் செல்ல வேண்டும்”, அதற்கான வேலைகளை அப் பெண் செய்து கொண்டிருக்கும் பொழுது கணவன் பிள்ளைகளுடன் விளையாடுகின்றான். கணவன் சாப்பிடும் பொழுது “நீங்கள் எங்கு என்னத்துக்கு செல்கின்றீர்கள்? என அறிந்து கொள்ளலாமா?” எனக் கேட்கின்றார்;. இவர்களுக்கான உரையாடலில் ஒரு அந்நியத் தன்மையை வெளிப்படுத்துகின்றது. இது ஈரானில் ஒரு மத்திய வர்க்கத்து குடும்பத்தில் நடைபெற்ற உரையாடல்.ஈரானில் பெண்கள் மிக மோசமாகவே நடாத்தப்படுகின்றார்கள். ஈரான் ஆண்களின் உலகம். இப் பெண்மணி ஒரு படித்த பெண். அதே போல் கணவனும் ஒரு புத்திஜீவி. இவ்வாறான தம்பதிகளிடம் உரையாடலின் போது ஒரு அந்நியத் தன்மையிருந்தாலும் அகத்தில் ஒரு நெருக்கம் இருக்கும். கணவனும் மனையவியின் கேள்விக்கு மதிப்பளித்து பதிலளிக்கின்றான். “ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு. சிறையிலிருக்கும் ஒரு பெண்மணியை விசாரித்து உடனடியாக தண்டனை வழங்கவேண்டும், இதற்காகவே செல்கின்றேன்”. ஏற்கனவே கணவனின் பெட்டியில் உடுப்புக்களை அடுக்கும் பொழுது விசாரிக்கப்படவுள்ள பெண்மணியின் விபரங்களை வாசித்தமையினால், ஒரு விடயத்தை மட்டும் கணவனிடம் கூறுகின்றார். “தயவு செய்து எனக்காக, அப் பெண்ணின் பக்க கதையையும் கேளுங்கள்”. இதுவே மனைவி கூறியது.
ஹோட்டல் குளியறையில் குளித்து விட்டு உடுப்பை எடுக்க பெட்டியை திறந்த பொழுது ஒரு கடிதம் பெட்டியின் உள் மேல் பக்கத்தில் இருக்கின்றது. அது அவரின் மனைவியிடமிருந்து என்பதை முதலில் கையெழுத்தில் அடையாளம் கண்டு கொள்கின்றார். “அன்புடையவரே, இக் கடிதம் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கலாம். நீங்கள் ஒரு பெண்மனியை விசாரிக்கவுள்ளீர்கள். அப் பெண்மணிக்கு நீதி தவறிழைக்கக் கூடாது. அப் பலி என் அன்புக்குரியவருக்கு வந்துவிடக் கூடாது. அதனால் நீங்கள் அறிந்திருதாத எனது கதையை கூறுகின்றேன். இதனைப் படித்த பின் நீங்கள்; என்னை வெறுக்கலாம். ஆனால் எனக்கு உங்கள் மீதான அன்பும் மரியாதையும் அவ்வாறே இருக்கும். எனது விருப்பம் அப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே” இவ்வாறு அக் கடிதம் தொடர்கின்றது. அதன் பின்னர் மனைவியான Fereshtehன் கதை தொடருகின்றது.
20 வருடங்களுக்கு முன்பு அதாவது 1978களில் பல்கலைக் கழகத்தில் படித்த போது ஷாவுக்கு எதிராக புரட்சி வெடிக்கின்றது. மார்க்சிசம் இஸ்லாத்தை அழிக்கும் என ஷா கருதினார். கார்ல் மார்க்ஸ் மதம் மக்களை அடிமைப்படுத்தும் ஒரு போதை மருந்து ((the opiate of the masses) ) எனக் குறிப்பிட்டிருந்தார். இடது சாரிகள் பல்கலைக்கழகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். Tudeh வின underground அமைப்பான Tudehயில் இளைஞர்கள் இணைகின்றனர். ஷா இடது சாரிகளை தனது பிரதான எதிரியாக கருதினார். ஈரானின் இடது சாரிக் கட்சியான Tudeh க்கு எதிராக ஷாவின் உளவுப்படையான SAVAK வன்முறைகளை பிரயோகிக்கின்றது.
Fereshteh க்கும் இடது சாரியினருடன் உறவு ஏற்படுகின்றது. துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பது போன்ற பல போராட்டங்களில் இவர்கள் ஈடுபடுகின்றார்கள். இதன் விளைவு தலைமறைவு வாழ்க்கையை வாழ நிப்பந்திக்கப்படுகின்றார்கள். பலர் வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். ஒரு வயது முதிர்ந்த இலக்கிய சஞ்சிகை ஆசிரியர் Fereshteh ஐ தெஹரான் பல் கலைக்கழகத்தில் சந்தித்துள்ளார். அவர் Fereshteh க்கு தஞ்சம் கொடுக்க முன்வருகின்றார். அத்துடன் இலண்டனில் Fereshteh வாழ ஏற்பாடு செய்வதாகவும் கூறுகின்றார். அங்கு வந்து Fereshteh வுடன் வாழவிரும்புகின்றார் என்பது Fereshteh க்கு தெரியாது. ஏற்கனவே இவருக்கு திருமணமாகி விட்டதும் தெரியாது. அதே சமயம் Fereshteh க்கு இவரின் திறமை மீது ஒரு மரியாதையே இருந்தது. இவரின் மீது காதல் இருக்கவில்லை. Fereshtehவிரும்பியவன் தலைமறவாகி விடுகின்றான். இலக்கிய சஞ்சிகை ஆசிரியர் மனைவி Fereshteh ஐ சந்தித்து உண்மையைக் கூறுகின்றாள். அத்துடன Fereshteh இலக்கிய சஞ்சிகை ஆசிரியரை சந்திப்பதை தவிhத்து விடுகின்றார். அதன் பின்னரே நீதிபதிக்கும் Fereshteh க்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தின் பின்னரும் இலக்கிய சஞ்சிகை ஆசிரியருக்கு Fereshteh ன் மீதிருந்த காதல் மாறவில்லை. இதுவே Fereshteh ன் கதை. இக் கதையை நீதிபதி வாசிப்பதன் மூலம் தன்னைப் போல் ஏழையாக இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மறு வாழ்வு கிடைக்கும் என நம்புகின்றார். கடிதத்தை வாசித்து முடித்த நீதிபதி எந்த வித மாற்றங்களையும் வெளிப்படுத்தவில்லை.
மறு நாள் நீதிபதியும் சகாவும் விசாரணைக்கு செல்கின்றனர். பெண்மணி அழைத்து வரப்படுகின்றாள். சகா எதுவும் விசாரிக்காமல் தண்டனையை உறுதி செய்யவே விரும்புகின்றார். நீதிபதி அவரை வெளியில் அனுப்பி விட்டு அங்கிருந்த கதிரையில் அப் பெண்மணியை அமரும் படி கூறுகின்றார். “உமது கதையைக் கூறும்”எனக் கூறிவிட்டு பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றார். “நான் மிகவும் கஸ்ரமான குடும்பத்தில் பிறந்தேன” என பதில் ஆரம்பமாவதுடன் படமுடிவடைகின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் “ஒரே கடல்”என்ற மலையாளப் படத்தைப் பார்த்தேன். இப் படமும் ஒரு பெண்ணைப் பற்றியது. இதன் பின்னர் ஒரு நிகழ்வில் ஒரு பெண்ணிடம் ஒரே கடல் பற்றி கதைத்த போது “ஒரு பெண் இப் படத்தை இயக்கியருந்தால் முடிவு மாறியிருக்கலாம்”என்றார். ஒரே கடல் ஆண் மொழியில் படைக்கப்பட்ட பெண்பற்றிய படம்.
அண்மையில் பிரான்சைச் சேர்ந்த பாஸ்கர் “தீராத நதி” என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை வெளியிட்டார். இது பரிஸ், லண்டன், ரொரன்ரோ போன்ற பல நகரங்களில் திரையிடப்பட்டது. படம் விசா இன்மை, குழு வன்முறை இவற்றுடன் இலங்கை இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குட்பட்ட பெண்களைப் பற்றியும் பதிவு செய்துள்ளது. படத்தில் நாயகனுக்கு உதவி செய்யும் நாயகியை நாயகன் விரும்புகின்றார். தனது காதலை நாயகியிடம் கூறிய போது நாயகி தனது வாழ் அவலங்களை கூறுகின்றார். தான் இராணுவத்தால் பலாத்காரப்படுத்தப்பட்டதையும், இதன் பின்னர் நடைபெற்ற திருமணத்தின் பின் முதலிரவில் கணவனிடம் இதைக் கூறியபோது கணவன் தன்னை விட்டு விட்டு சென்றதாகவும் கூறுகின்றார். நாயகனோ “நீ தான் என் மனைவி, உனது பதிலுக்காக காத்திருப்பேன்” எனக் கூறிச் செல்கின்றார். தனது அறைக்குத் திரும்பயிவர் அங்கிருந்த நண்பணிடம் நடந்ததை கூறுகின்றார். நண்பன் அழுகின்றான். நண்பனின் தமக்கையாரையும் இராணுவம் பலாத்காரம் செய்துள்ளது. சம்பவத்தின் படங்கள் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளன. இதனால் தமக்கைக்கு 40 வயதாகியும் இன்னமும் திருமணமாகவில்லை. இதனை நண்பன் கூறி அழுகின்றார். போராளி என்றால் அது ஆண் என்றே பொதுவாக கருதப்படுகின்றது.
பொதுவாகவே போரில் பெண்களுக்குத் தான் பாதிப்பு அதிகம். துன்பங்களையும் அதிகம் அனுபவிப்பவர்கள் பெண்களே. தீராதநதியில் நாயகன் தன்னை ஒரு தியாகியாகவே கருதுகின்றார். பாலியல் பலாத்காரம் பெண்கள் மனதில் பெரும் வலியை ஏற்படுத்துகின்றது. இதன் பெரும் பகுதி சமூகத்தால் ஏற்படுத்தப்படுகின்றது. கற்பென்ற கற்பிதங்களால் இதனை ஒரு உடல் காயமாக கருதாமல் சமூக ஒழுக்காறாக கருதுகின்றார்கள். இதனால் தான் நாயகனும் வாழ்வு கொடுத்தல் என்ற தியாக நிலையை அடைகின்றார். இவரது மனதில் இந்த கற்பின் அழுத்தம் பதிந்துள்ளது. அதனால் தான் இதனை தனது நண்பனிடம் கூறுகின்றார். நண்பன் கூறிய விடயம் படத்தில் வலிந்து திணிக்கப்பட்டாலும் அனைத்து ஊடகங்களும் இவ் விடயத்தில் தங்களது தார்மீகக் கடமையைச் சிந்திப்பது நல்லது. தீராதநதியில் இவ் விடயத்தில் மேலெழுந்து நிற்பது நாயகனின் தியாகமே. இப் படத்தையும் குறிப்பாக இவ் விடயத்தை ஒரு பெண் இயக்குனர் இயக்கியிருப்பின் கூறப்படும் தன்மையும் அதன் வெளிப்பாடுகளும் வித்தியாசமாகவே இருக்கும்.
ஆனால் HIDDEN HALF ஒரு பெண் இயக்குனரின் படம். அதனால் தான் பல இடங்களின் பெண்களின் வாழ்வியல் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு புத்திஜீவி படித்த பெண்ணாக இருந்தாலும் கணவனுடன் சமமாக கதைக்கவே முடியாது. தள்ளி நிற்றல் என்பதே இங்கு பொருந்துகின்றது. ஒரு பெண்ணினால் தான் மற்றொரு பெண்ணின் வலியை புரிந்து கொள்ள முடியும். தனது வாழ்வைப் பற்றி கவலைப்படாமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வுக்காக போராடும் போராளியாக Fereshtehஉள்ளார். அவ்வளவு தூரத்திற்கு வாழ்வில் வலிகளை சுமந்து வலம் வருகின்றார். அதே சமயம் இறுதியில் துணிச்சலாக தனது காதல் இடது சாரி வாழ்க்கை போராட்டங்கள் என்பவற்றை துணிந்து கூறுகின்றார். இவர் இங்கு திறந்த மனதுடன் போராடுவது மற்றொரு பெண்ணின் வாழ்வைக் காப்பாற்றுகின்றது.
படம் முழுவதும் பெண்களின் வலிகளை இயக்குனர் இயல்பாக யதார்த்தமாக வெளிப்படுத்துகின்றார். புத்திஜீவி சஞ்சிகை ஆசிரியர் மனைவி இருக்க, மற்றொரு பெண்ணை அவரின் விருப்பின்றியே அடைய முயல்தல் என ஒவ்வொரு காட்சியிலும் பெண்கள் எவ்வாறு சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தப்;பட்டுள்ளார்கள் என்பதை தெரியப்படுத்தியுள்ளார்.
இப் படத்தை இயக்கியிருப்பவர் Tahmineh Milani. தெகரான் பல்கலைக் கழகத்தில் கட்டிடக் கலைஞர் பட்டப்படிப்பை 1986 ல் முடித்துவிட்டு சிறிது காலம் கட்டிடக் கரைஞராக வேலை பார்த்தார். பின்னர் சில காலம் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு 1989 ல் தனது முதலாவது படத்தை இயக்கினார். 1960 ல் பிறந்த இவர், 1979ல் திரைக் கதை பயிற்சியினை முடித்தார். இவர் பல படங்களுக்கு திரைக்கதையாசிரயராகவும் பணிபுரிந்துள்ளார். The Fifth Reaction என்ற இவரது படத்துக்கு ஈரானிய “இஸ்லாமிய கலாச்சார வழிகாட்டி”( Ministry of Culture and Islamic Guidance) அமைச்சு அனுமதி கொடுத்த பின்னரே படம் தயாரிக்கப்பட்டது. படம் வெளியான பின்னர் எழுந்த எதிர்ப்பால் இவரை 26 ஆவணி 2001 ல் சிறையில் தள்ளிவிட்டார்கள். 2005 ல் மீண்டும் இவரது ருறெயவெநன றுழஅநn என்ற படம் இவரை சர்ச்சையில் தள்ளிவிட்டது. 1996 ல் இவரது படமான Kakadoக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. இப் படத்தில் எட்டு வயது சிறுமி முக்காடு போடாமல் படத்தில் தோன்றியமையே இதற்கு காரணம். ஈரானிய தேசிய தொலைக்காட்சி நிறுவனம் இப்படத்திற்கு விளம்பரங்கள் அளிக்க மறுத்து விட்டன. மதத்தலைவர்களும் தங்களது எதிhப்பை வெளிப்படையாக தெரிவித்தனர்.
ஈரானில் பெண்கள் கிஜாப் (முக்காடு) இல்லாமல் திரையில் தோன்ற முடியாது. ஆண்களை தொட்டு நடிக்கவும் முடியாது.
HIDDEN HALF(மறைக்கப்பட்ட மறுபாதி) படத்தை இயக்கியமைக்காக இவர் சிறையிலடைக்கப்பட்டார். இயக்குனர் இப் படத்தை இயக்கியமைக்காக கைது செய்யப்பட்டார். இவர் மீது புரட்சிகர இஸ்லாமிய நீதிமன்றம் பின்வரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. கடவுளுக்கு எதிராக போரை முன்னெடுத்தல், கலையை அரசுக்கெதிராக பிரயோகிப்பது ஆகிய குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டன. நிரூபிக்கப்பட்டால் தண்டனை தூக்கு. இயக்குனர் அளித்த செவ்வி ஒன்றில் பின்வருமாறு கூறுகின்றார். “எமது பெண்கள் தங்களது விருப்பு வெறுப்புக்களை, கருத்துக்களை, சிந்தனைகளை வெளிப்படுத்துவதில்லை. பெண்கள் தொடர்ந்து அமைதியாக இருக்கும் வரை அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் அப்படியே இருக்கும். மாற்றம் வேண்டுமெனில் அவர்கள் பேசவேண்டும். உரத்த குரலில் கூறவேண்டும்”. “பெண்கள் வீட்டுக்குள் ஒரு வெளியிலும், வெளியில் மற்றொரு வெளியிலும் வாழ்கின்றனர். ஒன்று வெளியில் ஆண்களின் அரசினால் ஏற்படுத்தப்பட்டது. மற்றையது வீட்டினுள் ஆண்களால் ஏற்படுத்தப்பட்டது”.
ஈரானிய சினிமாவும் பெண்ணிலைவாதமும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையில் “பெண்கள் இன்று வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இந் நிலை அதிகமாக காணப்படுகின்றது. இங்கு பெண்களின் பிரச்சினைகள்; கவனிப்பாரற்று உள்ளது. இப் பெண்கள் புத்திசாலிகள், தங்களது தேவைகளை புரிந்து கொண்டவர்கள். ஆனால் இவர்களுக்கு தங்களது இலக்கை எவ்வாறு அடைவது என்பது தெரியாது.” “ஈரானிய சினிமாவில் பெண்ணிலைவாதம் முறையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. எனது “இரு பெண்கள்” என்ற படம் முடிந்து 7 வருடங்களின் பின்னரே திரையிட அனுமதி கிடைத்தது. படத்தில் ஆண்களுக்கான உரிமைகள் விமர்சிக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சித் தொடர்கள் பெண்களை ஆண்களின் நிலையில் இருந்தே பார்க்கின்றன. சமைத்துக் கொண்டும், தேநீர்க் கோப்பைகளை காவிக் கொண்டும், உடுப்புக்களை அயன் பண்ணிக்கொண்டும் இக் காட்சிகளை பார்க்கின்றனர். பல பெண்ணிலைவாத படங்களில் கிராமிய பெண்களை விஞ்ஞான ரீதியாகவே ஆய்வுக்குட்படுத்துகின்றன. மாற்றங்களை ஒரு இரவில் கொண்டு வர முடியாது. முறையான திட்டமிடல் அவசியம்”. என தனது உரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
பெண் மொழியைப் பேசும் இப் படம் உலகில் உள்ள அனைத்து பெண் போராளிகளையும் பிரதிநிதிப்படுத்தியுள்ளது. அனைத்து பெண்களும் பொதுவாக ஒரே மாதிரி பிரச்சினைகளையே சந்திக்கின்றனர். அவ் வகையில் இப் படம் நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க படமாகும்.
மிகச் சிறப்பான பதிவு. அற்புதமான படம். ஒரு துளி விரசம் கலவாமல், இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் அவ்வளவு அழகாய் கதை நகர்த்தப்பட்டுள்ளது!
அரிய பல கலைப்படங்களை, குறிப்பாகப் பெண்களின் படைப்புக்களை/பெண்கள் பற்றிய படைப்புக்களை அறிமுகப்படுத்திவரும் “ஊடறு”வின் பணி போற்றத்தக்கதே! வாழ்த்துக்கள்!
மிக்க அன்புடன்,
லறீனா அப்துல் ஹக்.
(இலங்கை)