-பெண்ணியா-
ஒவ்வொரு நாளிலும்
கர்ப்பிணிகளைத் தேடுகிறேன்,
வீதி நெடுகிலும் போக்குவரத்து நெரிசலுக்குள்ளும்.
பேச்சு
கர்ப்பமடைதல் பற்றிஅதிகரிக்கத் தொடங்கிய பின்
ஒவ்வொரு நாளிலும்
கர்ப்பிணிகளைத் தேடுகிறேன்.
பார்வையில் படும்
பெண்கள் எல்லோரும்
கர்ப்பமடைந்தவர்கள் தான்.
ஓவ்வொரு நாளிலும்
பெண்கள் கர்ப்பமடைகின்றனர்
எல்லா நேரங்களிலும்
குழந்தைகள் பிறக்கின்றன.
நிறைமாதக் கர்ப்பிணிகளின் கண்களில்
முழுமையடைந்த எதையோ பார்க்கிறேன்
கர்ப்பமடைதல் பற்றி
அதிகமாய் யோசிக்க பேச
ஆட்களைத் தேடுகிறேன்.
சில நேரங்களில்
நானறியாமல்
எனது கர்ப்பப்பை
எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி
தன் வாயைத் திறந்து வைத்துக் கொள்கிறது.
எனது சூல் முட்டைகள்
எதையோ எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது.
கர்ப்பப்பை ஆவலை மீறி
அதிகமாய்ச் சுருங்கி விரியும் போது
புரிதலும் தெளிவும் இன்றிய
மானுடக் காமத்தினூடாக பரவும்
எல்லா விந்துக்களும்
கசப்பான நஞ்சைப்போல்
உடலெங்கும் பரவி
கர்பத்திற்கான அத்தனை கதவுகளையும்
இறுக்கமாய் மூடிக்கொள்கிறது,
மீளவும் ஆவல் எழாத படி.
அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.
மிக்க அன்புடன்,
லறீனா அப்துல் ஹக்