(ஊடறு இணையத்தள ஆசிரியர் குழுவிற்கு நான் அண்மையில் எனது வேலை நிமித்தமாக முல்லைத்தீவு,வவுனியா, புளியங்குளம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட பல விடயங்களை இங்கு மனமுவந்து கூறமுடியாத நிலையில் உள்ளேன். அத்துடன் நான் சென்ற அமைப்பின் கட்டுப்பாடுகளுக்கு அமையவும் அவர்களின் அனுமதியுடனும் உங்களுக்கு இதை அனுப்பி வைத்துள்ளேன். இது கட்டுரை அல்ல நிஜம் நான் அங்கிருந்த 3 வாரமும் பார்த்து அனுபவித்தவைகளில் சில தான் இவைகள். இதை பிரசுரிக்க முடிந்தால் நன்றி. இதை எனது புனைபெயரிலேயே வெளியிடுக…)
அன்ன பூரணி
அண்மையில் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களான முல்லைத்தீவு, வவுனியா, புளியங்குளம் கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு சென்று 350 குடும்பங்களை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருந்தோம். |
அண்மையில் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களான முல்லைத்தீவு, வவுனியா, புளியங்குளம் கிளிநொச்சி ஆகிய இடங்களுக்கு சென்று 350 குடும்பங்களை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருந்தோம். அவர்களில் ஒரு சிலருக்கு இரண்டு கண்ணும் இல்லை, ஒரு சிலருக்கு ஒரு கண், மற்றும் இரண்டு கால்கள் ஒருகால் போன்றவைகளை இழந்தோராக இருக்கின்றனர். ஒரு சிலர் எழுந்து நடக்க முடியாதளவு உள்ளனர். சிலருக்கு செல் துண்டுகள் இன்னும் உடம்பின் பாகங்களில் உள்ளன. சிலருக்கு துப்பாக்கி குண்டுகள் அவர்களது உடல் பாகங்களில் உள்ளன. சிலர் மன உளவியல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அதைவிட 9000 கணவனையிழந்த பெண்கள் இந்த மூன்று இடங்களிலும் உள்ளனர். அதில் 30 வயதுக்கு கீழானவர்கள் 3000 பேர். ஆயிரக்கணக்கான பிள்ளைகள் பெற்றோரை இழந்தவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் எந்த விதமான வருமானமும் இல்லை. இவர்கள் தமிழ்ச் சமூகத்தை நம்பியவர்கள் ஆனால் அவர்களை கைவிட்ட நிலையில் அவர்கள் இந்த தமிழ்ச் சமூகத்தையே நொந்து கொள்கிறார்கள்
இந்த கேடுகெட்ட தமிழ்ச்சமூகத்திற்காகவா நாம் பேராட சென்றோம் என கண்ணீர் விடும் புலிப் போராளிகள் பலரை சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. உளவியற் பாதிப்பு அல்லது உளத்தாக்கம் என்பது சாதாரணமாக அமைவதில்லை. இவர்களைப் பொறுத்தவரை தாம் வஞ்சிக்கப்பட்டதாகவும் ஏமாற்றப்பட்டதாகவும் இப்போது உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். இதை இவர்களில் பலரும் வாய் விட்டே சொல்கிறார்கள். இந்தச் சமூகத்துக்காகவா போராட வந்தோம்? என்று இவர்கள் கவலையடைந்திருக்கிறார்கள். வெட்கப்படுகிறார்கள்.
போராளியாகச் செயற்பட்டவர்கள் இப்பொழுது நாளாந்த வாழ்க்கையை வாழ்வதற்கே வழியற்று வக்கற்றிருக்கிறார்கள். பலர் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே வந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். இன்னொரு சாரார் வெளியே வரவில்லை. எப்போ வெளியே விடுவார்கள் என காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியே வந்தாலும் அவர்களுக்கும் இதே நிலைமை தான்.
ஒப்பற்ற தியாகிகளாகக் கருதப்பட்டவர்கள், பெரும் வீரர்களாக மதிக்கப்பட்டவர்கள், வரலாற்றை உருவாக்கக்கூடிய வீரர்கள் என்று புகழப்பட்டவர்கள் எல்லாம் இன்று தெருவிலே கவனிப்பாரில்லாமல் திரிகிறார்கள். இந்தப் போராளிகளை வேண்டாதவர்களாக தமிழ்ச்சமூகம் ஒதுக்கி வைத்து பார்ப்பதனால்தான் அவர்கள் மனம் உடைந்து போகிறார்கள். முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்கள், புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், எவ்வாறான பிரச்சினைகளை எல்லாம் எதிர் நோக்குகின்றார்கள் என்பது இன்று மிகவும் சோகமான நிஜ கதைகளாக உள்ளன. தமிழ்ச் சமூகம் இவர்களை கைவிட்ட நிலையில் வேறு வழியின்றி இராணுவத்தோடு சேர்கிறார்கள் தமது உயிரைக் காப்பதற்காக. ஒரு நேரச் சோத்துக்காக ஏன் தங்களது வயிற்றுப் பிழைப்புக்காக…
இது தனியே விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்கு மட்டும் இன்று ஏற்பட்ட முக்கிய பிரச்சினை இல்லை. இதற்கு முன்னரும் இந்தப் பிரச்சினை இருந்திருக்கிறது. முன்னர் மக்களுக்காகத் தீவிரமாகச் செயற்பட்ட பலரை புலிகளும் இந்தச் சமூகமும் கைவிட்டது. பின்னர், பல இயக்கங்களிலிருந்து மக்களுக்கு மனிதநேயத்தோடும் பணிசெய்த பல ஆயிரக்கணக்கானவர்களைப் உயிரோடு புலிகள் கொன்ற போது ஏன் ஒரிசாவரை கலைத்தபோது அவர்கள் பற்றிய நினைவே இந்தச் சமூகத்துக்கு இல்லாமற் போய்விட்டது. ஆனால், இந்த வகையில்தான் இப்போது புலிகளின் போராளிகளையும் கைவிட்டிருக்கிறது .புலிகளுக்காக வேலை செய்தவர்கள் ஆதரித்தவர்கள் கூட இன்று இப்போராளிகள் பற்றி கதைப்பதில்லை. அவர்கள் எல்லாம் வேண்டாதவர்களாகவே உள்ளார்கள். அதுவும் பெண் பேராளிகள் படும் கஸ்டம் மிகக் கொடுமை அவர்கள் பாலியல் துன்பங்களையும் அனுபவித்து வருகின்றார்கள். இப் பெண் பேராளிகளை அவர்களின் உறவினர்களே ஏற்க மறுக்கிறார்கள் சில கணவன்மார் தமது மனைவியை சந்தேகப்படுவதாகவும் பிரிந்து போகும்படியும் கூறுவதாக ஒரு இளம் பெண் போராளி கூறி அழுதார்.
முதலில் எமது தமிழ் சமூகத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய விரிவான பார்வை அவசியமானது இது ஒரு பெரிய அரசியல் பிரச்சினையும் கூட ஒரு இனம் ஒடுக்கப்படும் போது அவ்வினத்தின் கிளர்ச்சி,வீழ்ச்சி தவிர்க்கமுடியாதது. அரசியல் ரீதியாகவும் வாழ்க்கை மற்றும் சமூக நிலையிலும் நம்முடைய தமிழ்ச் சமூகம் எவ்வளவு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ்ச சமூகம் எவ்வளவு சிதைவுக்குள்ளாகியிருக்கிறது என்று பார்க்க தவறிவிட்டோம்
ஈழப் போராட்டத்தில் பல்வேறு தரப்பினர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். பல இயக்கங்களிலும் அவர்கள் பங்காற்றியிருக்கிறார்கள். முன்னர் மற்றைய இயக்கங்களை விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டபோது ஒரு சாரார் கொல்லப்பட்டனர். இன்னொரு சாரார் புலிகளால் கைது செய்யப்பட்டனர். இதிலிருந்து மீண்டு பலர் வெளிநாடுகளுக்கு தம் உயிரை பாதுகாப்பதற்காக புலம் பெயர்ந்தனர். சிலர் அரச எடுபிடிகளாகவும் ஆதரவாளர்களாகவும் ஆகினர்.
இயக்கமோதல்களால் பாதிக்கப்பட்டவர்களிலும் இயக்க மோதல்களுக்குப் பின்னர் போக்கிடமின்றி, ஆதரவின்றி, எதிர்காலத்தை எப்படி ஒழுங்குபடுத்துவது என்று தெரியாதிருந்தவர்களிலும் அதிகமானவர்கள் அடிநிலைச் தலித் சமூகங்களையும் மலையகத்திலிருந்து குடியேறியவர்களுமே ஆவர்..இவர்களால் அருகில் உள்ள இந்தியாவுக்கு கூட புலம்பெயர முடியவில்லை.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். தங்களை ஒறுத்து வாழ்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள், தங்களை முழுமையாக அர்ப்பணித்து தமிழரின் வாழ்விற்காய் போராடியவர்கள். தங்கள் உயிரையே தமிழ் மக்களுக்காக துறந்தவர்கள் அப்படிப்பட்டவர்களை விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இன்று தமிழ் சமூகம் புறக்கணித்திருப்பதும் இவர்கள் பற்றிய அக்கறையின்றி பாரா முகமாகவும் இருப்பது இப்போரளிகளுக்கு பெரிய ஏமாற்றத்தையும் உளத்தாக்கத்தையுமே ஏற்படுத்தியுள்ளது.
இப்புறக்கணிப்பு இவர்களிடையே வன்ம உணர்வை உண்டாக்கியுள்ளது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உளவியல் பாதிப்பு அல்லது உளத்தாக்கம் போராட்டத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, தம் வாழ்க்கையையே தொலைத்து விட்டோம் என்ற வெறுப்பு, வாழ நாதியின்மை என்பவை சாதாரணமானவை அல்ல. அவர்களைப் பொறுத்தவரை தாம் வஞ்சிக்கப்பட்டதாகவும் ஏமாற்றப்பட்டதாகவும் இப்போது உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். இதை இவர்களில் பலரும் வாய் விட்டே எம்மிடம் சொல்கிறார்கள். இந்தச் சமூகத்துக்காகவா போராட வந்தோம்? என்று இவர்கள் கவலையும் வெறுப்பும் கொண்டுள்ளார்கள்.
இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது என்னவெனில் அரசியல் பேதங்களை மறந்து இப்போரளிகளயின் வாழ்விற்கு உந்து சக்தியாக இருந்து அவர்கள் தங்களுக்கென ஒருவாழ்வை வாழ வழி அமைத்துக் கொடுப்பதே ஆகும். இது எமது தலையாய கடமையாகும்
இல்லையேல் இன்று ஈபிடிபிகுழு கருணாகுழு, பிள்ளையான்குழு, புளொட்குழு, ஈபிஆர்எல்எவ குழு என ஆரம்பித்து இன்று அவர்களால் படும் துன்ப துயரங்கள் போல் இன்னொரு குழு தோன்றி அதைவிட மோசமான துன்பங்களை அனுபவிக்க நேரிடும் அதன் பின்னர் அவர்களை துரோகிகள் என்றழைப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. அவர்களை துரோகிகள் ஆக்கியது நாமே அதற்கு முழப்பொறுப்பையும் இந்த தமிழ்ச சமூகம்; ஏற்க வேண்டும்.
🙁