“ஆண்மை” அழிந்தால்தான் பெண்விடுதலை சாத்தியம்

ஆர். சந்திரா

periyar  எடுத்துக் காட்டாக, விபச்சாரி, மலடி, ஓடுகாலி, கணவனையிழந்த பெண்கள் என பெண்களுக்குப் பொருந்தக்கூடிய சொற்களுக்கு மாற்றாக ஆண்களை குறிக்க சொற்கள் இல்லை என்பதை நாம் காண்கிறோம். மொழி கூட இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.

ஈ.வெ.ரா. பெரியார் 1934ஆம் ஆண்டு ‘பெண் ஏன் அடிமையானாள்?  என்ற நூலை எழுதினார்.; கடந்த 76 ஆண்டுகளில், ஏராளமானவர்கள் இந்நூலை பலமுறை வாசித்திருப்பார்கள். ஆய்வுகளுக்காக பயன்படுத்தியுள்ளனர். ‘‘பெரியாரிய பெண்ணியம் பலகல்லூரிகளில் மகளிரியல் துறைகளில் பாடமாகவே வைக்கப் பட்டுள்ளது. 64 பக்கங்களைக் கொண்ட இந்த சிறிய நூலில் பெண்ணடிமைத்தனத்தின் வேர்களை அடையாளம் காட்டியுள்ளார். பெரியார் இந்நூலில் கூறியுள்ள கருத்துக்களை மீண்டும், மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

அத்தியாயங்களைக் கொண்ட இந்த சிறிய நூலை ‘கற்பு’ பற்றிய விளக்கத்துடன் துவங்கி, பெண்ணடிமைத்தனத்திற்கான காரணங்களை அலசி, ஆராய்கிறார். ‘கற்பு’ என்பதன் அர்த்தம் சொல் தவறாமை என்று நோக்குகையில், அது இருபாலாருக்கும் பொதுவானதாகத்தானே இருக்க வேண்டும்? பாரதியாரும் இதையேதான் வலியுறுத்துகிறார். நடைமுறையில் கற்பு ஒரு தலைபட்சமாக பெண்ணுக்கு மட்டும் பொருந்தும் வண்ணம் பார்க்கப்படுகிறது. ஆனால், ஆரிய மொழியில் பார்க்கும் பொழுது ‘கற்பு’ என்ற சொல்லுக்கு அடிமை என்ற கருத்து நுழைக்கப்பட்டதாக அவர் கருதுகிறார். அதற்கான வரலாற்று சான்று உள்ளதா என்பதை அவர் குறிப்பிடவில்லை. அதுமட்டுமல்ல. ஆண்கள் கற்புடையவர்கள் என்பதைக் குறிக்க நமது மொழியில் வார்த்தை இல்லை என்கிறார். பெண் குறித்த வேறுசில சொற்களுக்கும் பெரியாரின் இந்த கருத்து பொருந்தும். எடுத்துக் காட்டாக, விபச்சாரி, மலடி, ஓடுகாலி, கணவனையிழந்த பெண்கள் என பெண்களுக்குப் பொருந்தக்கூடிய சொற்களுக்கு மாற்றாக ஆண்களை குறிக்க சொற்கள் இல்லை என்பதை நாம் காண்கிறோம். மொழி கூட இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். பெண்ணடிமைத்தன கருத்துக்களை பெண்களும் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்கிறார்.

‘கற்பு’ பற்றி பெரியார் எழுதியதற்கு மறுப்பு எழுதியவர்க்கு பதிலளிக்கும் விதத்தில், ‘வள்ளுவரும் கற்பும்’ என்ற அத்தியாயத்தை எழுதியுள்ளார். வள்ளுவரின் குறள்களில் பிற்போக்கான, பெண்ணடிமை கருத்துக்களை எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார். இடையே அவ்வையாரின் கருத்துக்களையும் பெரியார் விமர்சிக்கிறார். பெண் ஆணைச் சார்ந்தவள், ஆணைவிட தாழ்ந்தவள் என்பதை அவ்வையாரின் பாடல்களிலும், வள்ளுவரின் குறள்களிலும் காணமுடிகிறது. காலம் காலமாக ஆணுக்கும், பெண்ணுக்குமென பிரத்யேகமான குணங்கள் உள்ளன என்ற கருத்து ஆழமாக வேறூன்றி உள்ளது. (ஆண்-கோபம், வீரம், ஆளும்திறன். பெண் – சாந்தம், அமைதி, பேசும் திறன்) இந்த குணங்கள் ‘‘இருபாலாருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கிறது’’ என்றும் ‘‘ஆண்களின் சுயநலத்தால் மாறுபட்டு வருகிறது’’ என்றும், ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

periyar

‘காதல்’ பற்றிய அத்தியாயத்தில் காதல் புனிதமானது, தனித்தன்மை வாய்ந்தது என்றெல்லாம் கூறப்படுகிறது. காதலுக்கு அன்பு, ஆசை, நட்பு என்ற பொருளைத்தவிர வேறு… தனித்தன்மை இல்லையென்கிறார் பெரியார். ஒருவருக்கு ஒருமுறை காதல் ஏற்பட்டுவிட்டால், அது எந்தக் காலத்திலும் மாறாது என்பதைச் சொல்லி, பெண்கள் விரும்பாவிட்டாலும், கணவனுடன் வாழ நிர்பந்திக்கப்படுகிறாள்.. காதல் முதல் பார்வையில் தோன்றுமா? காதல் உயர்வானதா? காதலும் காமமும் வேறுவேறா? என பல வினாக்களை எழுப்புகிறார். இறுதியில், காதல், காமம் பற்றி பொறுப்பில்லாமல் பேசுவதால், இதைப்பற்றி தான் எழுதியுள்ளதாக கூறுகிறார். அன்பு, ஆசை, நட்பு என எதுவானாலும், அது மன இன்பத்திற்கும், திருப்திக்கும்தான் என்ற தனது கருத்தை அழுத்தமாக வெளிப் படுத்தியுள்ளார்.‘‘கல்யாண விடுதலை’’ என்ற அத்தியாயத்தில், திருமணம் பற்றி பெரியார் எழுதியுள்ள ஒவ்வொரு, வாக்கியமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால் மிகையாகாது. ‘‘பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வதைத் தவிர்’’ நமது திருமணங்களில் எதுவுமில்லை என்றும் இதில் நமது நாட்டில் உள்ளது போன்ற கொடுமை உலகில் வேறெங்கும் இல்லையென்றும் கூறுகிறார்.

சடங்குகளை சாடுகிறார். விருப்பம் இல்லாவிடில் மணமுறிவு செய்து கொள்ளும் உரிமை ஆண் பெண் இருவருக்கும் வேண்டும் என்பதுடன் மறுமணம் தவறல்ல’’ என்ற அத்தியாயத்தில், மனிதவாழ்வில், மதம் ஆற்றும் முக்கியப் பங்கை விளக்குகிறார். மறுமணம் பற்றி எந்த மதத்திலும் ஆட்சேபணை இல்லை என்று கூறுவதுடன், எந்தப் பின்னணியில் மறுமணம் செய்து கொள்ளலாம் என்ற காரணங்களையும் விளக்குகிறார். இந்துக் கடவுள்களையும் முகமது நபியையும் மேற்கோள் காட்டத் தவறவில்லை. 10-12 வயதில் செய்விக்கப்படும் திருமணங்கள் திருமணமாகுமா? என்ற வினாவை எழுப்புகின்றார். அன்பும், ஆசையும் இன்றி இரண்டு பேர் எப்படி இணைந்து வாழ்வது? எதற்காக அப்படி வாழ வேண்டும்? சுயமரியாதைக் கொள்கைப்படி மறுமணம் விவாகரத்து பற்றிய கருத்துக்களையும் எடுத்துரைக்கிறார். திருமணம், மறுமணம், விவாகரத்து ஆகியவற்றில் ஆண்களுக்குரிய அனைத்து சௌகரியங்கள் உரிமைகள் பெண்களுக்கும் உண்டு என்று வாதிடுகிறார்.

‘விபச்சாரம்’ பற்றிய அத்தியாயத்தில், அதன் பொருள் அடிமை என்றுதான் கொள்ள வேண்டும் என்கிறார். இதில் பெண்ணே குற்றவாளியாக பார்க்கப்படுகிறாள். திட்டும்பொழுது கூட விபச்சாரியின் மகன் என்ற வசைவுகள் சாதாரணம். ஆண் இன்றி பெண் விபச்சாரம் செய்வதில்லை. ஆனால் இந்த சொல் பழக்கத்தில் பெண்களை குறிக்கும் சொல்லாகவே உள்ளது. கற்பு என்பதைப் போலவே இதுவும் பெண்களை அடிமை கொள்ள பயன்படுத்தப்படுகிறது. எந்த தொழிலானாலும், மற்றவர்க்கு கெடுதி கொடுக்கும் தொழில் நடக்கக்கூடாது என்பதுடன், இதனால், ஒழுக்கம் கட்டுப்பாடு கூடாது என்று கூற வரவில்லையென்றும் தெளிவுபடுத்துகிறார்.

கணவனையிழந்த பெண்கள் இந்தியாவில் அனுபவிக்கும் கொடுமைகளைப் பெரியார் சாடுகையில், மதம் ஆற்றும் பங்கையும் சுட்டிக்காட்டுகிறார். வுpதவைகள் உடல், மனரீதியில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பெரியாரின் தங்கை மகள் அம்மாயி சிறுவயதில் கணவனையிழந்துவிட்டாள். தனது குடும்பத்திற்குள்ளேயே பலரின் கடுமையான எதிர்ப்பையும் சந்தித்து, அந்த இளம் பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்தார். இச்சமுதாயம், மனைவி இழந்த உடனேயே ஆணுக்கு மறுமணம் செய்வதை ஆதரிக்கிறது. ஆனால், ஒரு பெண் 10-12 வயதில் கணவனையிழந்தால் காலம் முழுவதும் கொடூரமான வாழ்க்கையை வாழ நேரிடுகிறது. பெண் விடுதலை பற்றி பேசுவோர் கூட, தங்கள் வீட்டுப் பெண்களை சிறையிலிட்டு கணவனையிழந்த தன்மையை காப்பாற்றுகின்றனர் என கடுமையாக சாடுகிறார். தவிர 1912ம் ஆண்டு கணக்கின்படி, வயதுவாரியாக
கணவனையிழந்த பெண்கள் எண்ணிக்கையை பெரியார் பட்டியலிட்டுள்ளார். மேலும், கணவனையிழந்த பெண்களின்  மறுமணத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார்.

இந்தியாவில் பெண்ணடிமைத்தனத்திற்கும், பெண்ணின் தாழ்வான அந்தஸ்திற்கும், சொத்துரிமை இல்லாதது ஒரு முக்கிய காரணம் என்கிறார். சில மேலை நாடுகளை மேற்கோள் காண்பித்து, சொத்துரிமை கோரி பெண்கள் போராடுவது அவசியம், அவசரம் என்று கூறுகிறார்.
ஒன்பதாவது அத்தியாயத்தில் பெண் விடுதலைக்கு கர்ப்பத்தடை மிகவும் அவசியம். கர்ப்பம் பெண் விடுதலைக்கு பெரிய எதிரி என்கிறார். கர்ப்பத்தடைக்கான பிரச்சாரத்தை தமிழக சட்டசபைக்குள் சுகாதார மந்திரியே எதிர்த்தார். டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் மந்திரியை ஆதரித்தது ஏமாற்றமளித்தது என்று குறிப்பிடுகிறார். மதுவிலக்கு பிரச்சாரத்தைவிட தொத்து வியாதி ஒழிப்பு பிரச்சாரத்தைவிட கர்ப்பத்தடையை ஆதரித்து பிரச்சாரம் செய்வது மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார்.

ஆண்மை’ அழிந்தால்தான் பெண் விடுதலை சாத்தியம் என இறுதி அத்தியாயத்தில் வலியுறுத்துகிறார்.; ஆண்கள்  பெண் விடுதலைக்கு பாடுபடுவதென்பது சூழ்ச்சி என்று கூறி, பூனைகளால் எலிகளுக்கும், நரிகளால், ஆடு, கோழிகளுக்கும் விடுதலை கிட்டுமா என்று வினவுகிறார். இது முரண்பாடான கருத்து. தமிழகத்தில் பெண் விடுதலைக்கு குரல் கொடுத்த ஆண்கள் பட்டியலில் பெரியாரும். பாரதியாரும் மிகவும் முக்கியமானவர்கள் என்பதை மறுக்க இயலுமா? பெண்களே பெண்விடுதலைக்குத் தடையாக உள்ளனர் என்கிறார். பிறந்தது முதலே பெண்கள் பெண்ணடிமைக் கருத்துக்களை கேட்டு, உள்வாங்கி, வளர்கின்றனர். அதை வலியுறுத்தும் வகையில் மதம், மூட நம்பிக்கைகள் பெண்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்ணடிமை பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் பாதிக்கிறதென ஆண்கள் உணர்வதில்லை என்கிறார் பெரியார்.

எளிமையான நடை, பேசுவது போன்றே எழுதும் போதும் சொற்களை கையாளும் விதம், ‘நச்’ சென அழுத்தமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்துதல் பெரியார் எழுத்தின் சிறப்பம்சங்கள் அவரை வெறும் முற்போக்கு சிந்தனையாளர் என்று மட்டும் கூறினால் போதாது. பெண்ணடிமைத்தனம் வேறூன்றியுள்ள சமுதாயத்தில், பழமையில் ஊறிய சமுதாயத்தில், தைரியமாக தனது கருத்துக்களை கூறியவர். இன்றும் கருச்சிதைவு, கர்ப்பத்தடை போன்ற விஷயங்களை பேசத்தயக்கம் உள்ளது. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில், ஆண்-பெண் சமத்துவம் பற்றி பேசுவதுடன், செயல்படுத்தும் துணிச்சல் பெரியாரிடம் இருந்தது.

2 Comments on ““ஆண்மை” அழிந்தால்தான் பெண்விடுதலை சாத்தியம்”

  1. உண்மை தான்…அதையும் விட முக்கியம்…பெண்களாலேயே பெண்களுக்கு நடக்கும் அவலம்….அதையும் மனதில் கொள்ளவேண்டும்… சக பெண்களை சுயநலத்தோடு பெண் அடிமைத்தனத்துக்கு ஆளாக்கும் பெண்கள்…பெண் சிசு கொலையை லாவகமாக செய்யும் மாமியார்கள், நாத்தனார்கள், அன்பான அக்கறையான மணமகனை விட்டு, பொய்யான கௌரவத்திற்கு வசதியான வீட்டுக்கு தன் மகளை விற்கும் அம்மா மார்கள்..புகுந்த வீட்டில் எல்லோரையும் உண்டு இல்லை என்று ஆட்டிப்படைக்கும் மருமகள்..உறவுகளின் அழகை ரசித்து கொண்ட்டாடாவிட்டாலும் பரவாயில்லை….அதை கசக்கி பிழிந்து நாரடிக்காமல் இருக்கட்டும்…- இவர்கள் முதலில் ஒழிய வேண்டும்….ஆத்திரமாக வருகிறது…ம்ம்ம்ம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *