சந்திரவதனா(ஜேர்மனி) 6.5.2011
ஈழப்போர் பற்றிய எந்தப் பதிவும் பொய்களோடு ஆவணப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பது எந்தளவு அவசியமோ அதையும் விட அதிகளவு அவசியமானது ஈழப்போராளிகள் பற்றிய ஆவணப்படுத்தலில் பொய் கலக்காதிருப்பது. அதை அ.முத்துலிங்கம் போன்ற பெரிய எழுத்தாளர்கள் மறந்து விடக் கூடாது. |
ஒவ்வொரு படைப்புக்குமான வரையறைகளும், வரைமுறைகளும் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டே இருக்கின்றன. எல்லாமே நவீனத்துக்குத் தாவிக் கொண்டிருக்கும் போது இலக்கியம் மட்டும் பழைய பாணியிலேயே இருக்க வேண்டுமென யாரும் எதிர்பார்க்க முடியாது.
என்னைப் பொறுத்த வரையில் எந்த ஒரு படைப்பு வாசகனின் மனதில் சந்தோசமாகவோ அன்றில் துயரமாகவோ தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்தப் படைப்பு நல்ல படைப்பு. அந்த வகையில் வாசித்துப் பல மாதங்களின் பின்னும் என்னுள்ளே மீண்டும் மீண்டுமாய் அசை போட்டுக் கொண்டிருக்கும் அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்புகளை நல்ல படைப்புகள் என்றே நான் கருதுகிறேன்.
தான் இருந்த நாடுகள் பற்றிய, அங்கு வாழ் சமூகம் பற்றிய, நாகரிகம் பற்றிய.. என்று நாமறிந்திராத எத்தனையோ விடயங்களை எள்ளலும், நொள்ளலும் கலந்து அத்தனை சுவாரஸ்யமாகச் சொல்லிவிடுவதில் அவருக்கு நிகர் அவரே.
அவரது ‘எல்லாம் வெல்லும்’ சிறுகதை ஆனந்த விகடனில் வெளியாகி இணையத்துக்கு வந்தபோது அது அ.முத்துலிங்கம் அவர்களின் கதை என்பதாலேயே அவசரமாக வாசித்தேன். ஆனால் வழமையான சந்தோசத்தை அந்தக் கதை எனக்குத் தரவில்லை. மாறாக ஒருவித நெருடலையே அது எனக்குத் தந்தது.
நந்திக்கடல் தாண்டி நான் அங்கு போனபோது துர்க்கா, அலை, கலை… என்ற பெயர்களுடன் பெண் போராளிகள் பலர் கடமையில் இருந்தார்கள். போர் நிறுத்தக் காலமான 2002இல் கூட அவர்கள் தொடர்ந்து 5, 6 நாட்களாக நித்திரையே கொள்ளாதிருந்து போர்க்கப்பலைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கென்று சில இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன.
விடுதலைப்புலிகளின் மகளிர் பொறுப்பாளர் தமிழினியை சில தடவைகள் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது முகத்தில் எப்போதுமே ஒரு இறுக்கம் இருந்தது. கடமையே குறியாகத்தான் அவர் அந்த போர்நிறுத்த வேளையிலும் தெரிந்தார். செஞ்சோலைப் பொறுப்பாளர் ஜனனி மிகவும் பொறுப்பாக எத்தனையோ குழந்தைகளைக் பராமரித்துக் கொண்டிருந்தார்.
எந்த ஒரு ஈழத்துப் பெண்போராளியும் ஆனந்த விகடனில் கதைக்காக வரையப்பட்டிருக்கும் படங்களில் உள்ளது போல தலையை விரித்து வைத்திருக்கவில்லை. அவர்களுக்கென்று சில கட்டாயமான கட்டுப்பாடுகள் இருந்தன. காலையில் எழுந்ததும் குளித்து தலையை இரண்டாகப் பின்னி தலையின் பின்பக்கமாகச் சுற்றி தலையோடு ஒட்டக் கட்டியபடியே இருந்தார்கள். அல்லது தலையை ஒட்ட வெட்டி இருந்தார்கள். குளிக்க முடியாத சந்தர்ப்பங்களைச் சந்திக்கும் வேளையிலும் தலையை ஒட்டக் கட்டியபடியே இருந்தார்கள். போரின் போதும் சரி, தற்பாதுகாப்பின் போதும் சரி தலைமயிர் இடையூறாகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.
இப்படித்தான் நான் சந்தித்த பெண் போராளிகள் இருந்தார்கள். அவர்களை விளையாட்டுத்தனமாக வர்ணிக்கும் படியாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை.
ஆனால் அ.முத்துலிங்கம் அவர்களின் இக்கதை பெண் போராளிகள் பற்றிய ஒரு மாற்றுப் பிம்பத்தை வாசகர்களிடம் கொண்டு செல்கிறது. ஒரு சிறுகதை கண்டிப்பாக உண்மைகளைக் கொண்டுதான் எழுதப்பட வேண்டுமென்ற எந்த நியதியும் இல்லை. ஆனால் பெண் போராளிகளின் உண்மைப் பெயர்களைக் கொண்டு புனையப்பெறும் ஒரு பதிவு முற்றுமுழுதாக உண்மைகளையே தாங்கி இருக்க வேண்டுமென்பது மிகுந்த அவசியமானது. இதை எப்படி கதாசிரியர் மறந்தார் என்பது எனக்குப் புரியவில்லை.
ஈழப்போர் பற்றிய எந்தப் பதிவும் பொய்களோடு ஆவணப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பது எந்தளவு அவசியமோ அதையும் விட அதிகளவு அவசியமானது ஈழப்போராளிகள் பற்றிய ஆவணப்படுத்தலில் பொய் கலக்காதிருப்பது. அதை அ.முத்துலிங்கம் போன்ற பெரிய எழுத்தாளர்கள் மறந்து விடக் கூடாது.
குறிப்பாக அ.முத்துலிங்கம் போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு பல்லாயிரம் வாசகர்கள் இருப்பார்கள். அவர்கள் எதை எழுதினாலும் கண்ணை மூடிக் கொண்டு அப்படியே நம்பியும் விடுவார்கள். அதனால் இப்படியான எழுத்தாளர்கள் கண்டிப்பாக இப்படியான வரலாற்றுத் தவறுகளைத் தவிர்க்க வேண்டும்.
அ. முத்துலிங்கம் அவர்கள், எங்கோ ஓரிடத்தில் உண்மைகளைத்தான் தான் கதையாக எழுதுவதாகவும், அதற்கு கொஞ்சம் புளியும், உப்பும் கலந்து மெருகேற்றுவதாகவும் எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். சாதாரண ஒரு கதைக்கு உப்பும், புளியும் கலக்கும் போது அதை ரசிக்கலாம். எங்கள் ஈழப்போருக்கு அதெல்லாம் தேவைதானா?