றஞ்சி (சுவிஸ்)
இன்று ஒடுக்கப்படும் மக்களுக்கான நல்ல இலக்கியங்களும் கலைகளும் மேதாவிலாசத்தன்மை காரணமாக ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுழல்கின்றன. ஆனாலும் முற்போக்கு இலக்கியம் இயந்திரத் தன்மையான போக்கு மாறி இன்று கவிதைத்தளத்தை வந்தடைந்துள்ளது என்றே கூறுலாம் அந்த வகையில் பானுபாரதியின் கவிதைகளும் பேசப்படுபவையாக உள்ளன. |
பிரிவின் பெருந்துயர்கள், இடையறாத போரின் பீதிகள், காதலின் ரணங்கள,; ஆன்மாவின் துடிப்புகள் இவைகளைத் தொடர்புகொள்கிற இதயங்களுக்குள் கடத்தி எளிதில் அதிர்வுறச் செய்ய இயலும் என்பது இசைக்கு மாத்திரம் சாத்தியம் என்பதையும் கடந்து கவிதைகளாலும் அதை சாதிக்க முடியும் என கவித்துவத்தினுடாக சில அசாதரண தருணங்களின் அனுபவங்களினால் உணர நேர்கிறது. ஒரு படைப்பென்பது அது உருவாகும் காலம். சூழல் , வாழ்வியல் போக்குகள் இவற்றைத் தன்னகத்தே நேர்மையாகப் பொதிந்து வைத்திருப்பதென்பதும் அவசியமாகிறது.
பிறத்தியாள் என்னும் கவிதைத்தொகுதி வழியாக தானியியங்கிய வாழ்ந்த இடம், புலம்பெயர்ந்த புலத்தின் அவலங்கள் தான் உய்த்துணர்த்த யுத்த உணர்வுகள் கொலை சுமந்த உயிர்களின் பிரிவுப்பாடல்கள் சட்டகங்களின் வேலிக்குள் சிறைப்பட்ட பெண்களின் பேரான்மா கொள்ளும் தவிப்புக்கள் ஆகியவைகளை எளிய சித்திரங்களாக்கித் கவிதைகளாகத் வெளிக்கொணர்ந்துள்ளார் பானுபாரதி
போரின் வன்பாதங்கள் அவர்களது இனிய வசந்தங்கள் மீது கால் பதித்து சிதைக்கின்றன. அந்தப் பதத்தினுடைய கோர நகங்களுடன் கிளைத்த கைகள் அவர்களின் இயல்பு வாழ்வைக் கழித்து சூறையாடுகின்றன.
உயிர் போன பின்
குழியிலிட்டு
உடலை
புதைத்த காலங்கள்
போயின.
இப்போ
உயிரைச் சுமந்து அலைவதே
உடலுக்கு
பெரும் பாரமாகிவிட்டது
அதனால்
அடிக்கடி
உயிரைக் காப்பதற்காக
மண்குழிக்குள்
பதுங்கிக் கொள்றது உடல்
பானுபாரதியின் அநேகக் கவிதைகளுனுடாகப் பயணிக்கையில் அவர் வாழ்ந்த போது ஏற்பட்ட யுத்தமும் புலம் பெயர்ந்த பின்னும் போரின் சோக நிகழ்வுகள் படமாக விரிந்து விரிந்து செல்கின்றன.
பசி,மரணம் அவலம்
துப்பாக்கி,வெடிகுண்டு,சாம்பல்
செத்தவர்கள் போக
மற்றவர்கள்
மறைந்து கொண்டனர்
வெடிச்சத்தங்கள்
ஓய்வெடுக்கும் கணங்களில்
ஓன்றிரண்டு தலைகள்
வீதியில் இறங்கும்
படிமங்களின் குகைக்குள் சிக்கி திசையறியாது தவித்து வெளிவரும் பதட்டத்தில் சிரம் மோதி காயமுறும் அவலங்கள் எதுவும் நேருவதில்லை பானுபாரதியின் கவிதை வெளிகளில் எளிய மனம் கொண்ட இக்கவி பார்த்தவுடன் தெளிவாக விளங்குபடியான அழகான சித்திரங்களை போல தன் கவிதைகள ஆக்கிச் செல்கிறார்.
எங்கள் வீட்டில்
நாங்கள் நான்கு குமர்
பக்கத்து வீடுகளிலிருந்தும்
பத்துக்கும் மேற்பட்ட குமர்கள்
பனிப்புகார் அடங்காத
இளங் காலையின் கீழு
கிராமத்து கோயிலின்
முன்றல்வெளியில் இருத்தப்பட்டோம்
கைக்குண்டு தேடுவதாய்
முலைகளைத் தடவும்
மானங்கெட்ட பிழைப்பு
ச்சே
கைக்குண்டுக்கும் முலைகளுகளுக்கும்
வேறுபாடு தெரியாதவர்களா
இந்தப் பாண்டவர்கள்
போரின் கூர்நகங்கள் பூமியில் ஆறாரணங்களைக் கிளற அதனுள்ளே பொதிந்து மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அபாயங்கள் குறித்த பானுபாரதியின்; உருவகம்
படுகொலைகள் மலிந்த பூமியில்
அதுவே
இலட்சியங்கள் ஆக்கப்பட்டும் விட்டன
இரத்தத்திற்கு இரத்தம்வாங்கப்படுகிறது.
இங்கு யார் யாரோடு எனஆ;பதை
பரிந்து கொள்வதற்குமுன்
மக்கிளின் முதுகில் குறி சுடப்படுகிறது
இங்கு இப்போ
கொலைமொழியே
எல்லாத் தரப்பிலும் பேசப்படும்
பொதுமொழியாகிவிட்டது
அரசகரும மொழியும் அதுவே
ஒரு இனம் தனது விடிவிற்காக மட்டுமன்றி ஒரு இனத்தின் மொழி பண்பாடு போன்றவற்றிற்காகவும் போராடுகிறது என்பதையும் அழகாக கூறுகிறார்பிரிவின் அவலங்களையும் பெண்மையின் வலிகளையும் போரின் காயங்களையும் பற்றிய ஓயாது ஒலிக்கும் துயரப்பாடலாகி அப்புலத்தின் சோக சித்திரங்களை விரித்துச் செல்கின்றன.
ஈழத்துச் போராட்டச் சூழலுடன் தமிழ் கவிதையுலகு புதுக்கவிதைத் தளத்தில் ஆழக்கால் பதித்துள்ளது இதிலும் பெண்களின் கவிதைகள் குறிப்பாக ஈழத்துக் கவிதைகள் புதிய பரிமாணத்தை எட்ட முனைந்துள்ளன. பல பெண்களின் கவிதைகள் -இன்னொரு புதிய பரிமாணம் என்பதை விட புதிய தளத்தில் ஈழத்து பெண்களின் கவிதைகள் பெண்மொழியில் வெளிவருகின்றன.
கவிதை வாழ்பனுபவங்களிலிருந்தும், உணர்வுகளிலிருந்தும் படைக்கபடுகின்ற போது வீச்சம் பெறுகின்றது. வெறுமை, தோல்வி, ஏமாற்றம் போன்ற தன்மைகளும் கூட வீச்சான கவிதைகளை படைக்கும் ஆற்றலை தந்துவிடுகின்றன.
பெண்களின் பிரச்சினைகளை இலக்கியத்தில் துணிவாக எழுதும்போது பெண்ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள் பதியப்படுகின்றன அல்லது ஒலிக்கின்றன எனலாம். காலத்தின் நெருக்கடிகளையும் பெண் என்ற ரீதியில் அனுபவித்த பல இன்னல்களையும்; போர்க்காலங்களில் அதுவும் இந்திய இராணுவம் எம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட ஒடுக்குமுறைகளையும் எம்மக்கள் சுமக்கும் சுமைகளையும் மிகஅழகாக கவிதையாக பிறத்தியாள் என்ற வடிவத்தில் தந்துள்ளார் பானுபாரதி.
இன்று ஒடுக்கப்படும் மக்களுக்கான நல்ல இலக்கியங்களும, கலைகளும் மேதாவிலாசத்தன்மை காரணமாக ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுழல்கின்றன. ஆனாலும் முற்போக்கு இலக்கியம் இயந்திரத் தன்மையான போக்கு மாறி இன்று கவிதைத்தளத்தை வந்தடைந்துள்ளது என்றே கூறுலாம் அந்த வகையில் பானுபாரதியின் கவிதைகளும் பேசப்படுபவையாக உள்ளன.