உலகம் வியக்கும் போராளிப் பெண்கள்

இவள் பாரதி ((நன்றி தடாகம்.கொம்)
show தியாகிகளும், போராட்டக் குணமுள்ள ஆளுமைகளும் தனியே பிறப்பதில்லை. மக்களில் ஒருவராக இருந்து மக்களுக்காக குரல் கொடுத்து சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டு நிற்பவரே போராளிகள். இன்றைய காலகட்டத்தில் நம்முடன் வாழ்ந்துவருகிற, சமகாலத்தில் பேசப்பட்ட சில போராளிகள் குறித்து இக்கட்டுரையில் காணவிருக்கிறோம்.
காலம் மாறும் போது போராட்டத்தின் வடிவங்களும், முறைகளும் மாறலாம். ஆனால் போராட்டக் குணமும், நோக்கமும் மாறுவதில்லை. ஒவ்வொருவரும் தன்னளவில் போராட்டத்திற்கான முன்னெடுப்புகளை செய்திருக்கிறார்கள். செய்யத்தூண்டப் பட்டிருக்கிறார்கள். சாதாரண மக்களுக்கான அனைத்து நியாங்களும் கிடைக்க வேண்டி அசாதாரண வாழ்க்கை முறையை வாழ முன்வருகிறார்கள். அந்த போராட்டத்தின் விளைவாக கிடைக்கக்கூடிய பலனை மக்களுக்கே அளிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் போராட்டத்தின் விளைவாகப் பெற்ற உரிமைகளைத் தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு அடிகோலுகிறார்கள்.

தியாகிகளும், போராட்டக் குணமுள்ள ஆளுமைகளும் தனியே பிறப்பதில்லை. மக்களில் ஒருவராக இருந்து மக்களுக்காக குரல் கொடுத்து சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டு நிற்பவரே போராளிகள். இன்றைய காலகட்டத்தில் நம்முடன் வாழ்ந்துவருகிற, சமகாலத்தில் பேசப்பட்ட சில போராளிகள் குறித்து இக்கட்டுரையில் காணவிருக்கிறோம்.

show

 

வங்காரி மாதாய் – சுற்றுச்சூழல் பாதுகாவலர் :

2004ல் உலக நாடுகள் உற்றுக் கவனித்த பெயர். நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி. நிலைத்த மேம்பாடு மற்றும் அமைதிப் பணிக்காக இவ்வுயரிய விருதைப் பெற்ற மாதாய் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது, கென்யா நாட்டைச் சேர்ந்த இவர் எம்.பியாகவும் இரண்டு வருடங்கள் சேவையாற்றிருக்கிறார்.

நாற்பத்தைந்து பேருடன் பதினைந்து பிரதேசங்களுக்குச் சென்று மண் மற்றும் காலநிலைகளில் நிலைத்த மாற்றங்களை ஏற்படுத்தியவர். பல கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டையும் உருவாக்கிய பெருமை இவரைச் சாரும். முப்பது மில்லியன் மரக்கன்றுகளை நட்டு ஆப்பிரிக்க மண்ணிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் நன்மை செய்திருப்பவர். பூமிக்கு புதிய சுவாசப்பையை நிர்மானித்தவர். சரியான திட்டமிடுதலும், தொலை நோக்குப்பார்வையும், எதிர்ப்புகளை சமாளிக்கும் திறனும் இவரின் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக அமைந்திருக்கின்றன.

உலகமே முட்டாள்கள் தினம் என்று கொண்டாடும் தினத்தில் தான் 1940-ல் பிறந்தார் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இந்த காடுகளின் தாய். தற்போது எழுபது வயதாகும் வங்காரி மாதா தன் செயல்பாடுகளால் தனக்குப் பின்னும் இயங்கக்கூடிய ஒரு வலுவான சூழலை மக்களிடம் விதைத்திருக்கிறார். பெண் பொருளாதாரச் சுதந்திரம் பெறாமல் ஆகப் பெரும் மாற்றங்கள் சாத்தியமில்லை என்பதை இவரது செயல்பாடு தெளிவாக்குகிறது

show

வங்காரி மாதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவருக்குக் காயத்திற்கு பதிலாக இன்னும் உதவேகமாக செயலாற்றும் தன்மையை வழங்கியிருக்கிறது. ”வங்காரி மிகவும் வலிமையான பெண். இவரை என்னால் கட்டுபபடுத்த இயலவில்லை. எனவே எனக்கு விவாகரத்து கொடுக்க வேண்டுகிறேன்” என்று வங்காரியின் கணவர் நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி தனது பெயரை பின்னால் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்றும் வழக்கறிஞர் மூலம் தெரியப்படுத்தியவுடன் Mathai என்ற பெயரில் a சேர்த்து Maathai என்று வைத்துக் கொண்டார். மணவிலக்கு பெற்றபின் எக்கனாமிக் கமிஷனில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த வேலையில் ஆப்பிரிக்க நாடு முழுக்க பயணம் செய்ய வேண்டியிருந்ததால் தனது இரு குழந்தைகளையும் தனது முன்னாள் கணவரிடம் ஐந்து வருடங்கள் ஒப்படைத்துவிட்டு தனது பணியை தொய்வின்றி செய்ய ஆரம்பித்தார்.

 

கென்ய பெண்களின் பிரச்சினைகளைக் கூர்ந்து கவனித்தவர் அம்மக்களிடம் இருக்கும் படைப்பார்வத்தையும், தேவைகளையும் கண்டறிந்து மரக்கன்றுகளை நடுவதென தீர்மானித்து வனத்துறை அதிகாரிகளை நாடியிருக்கிறார். அதிகாரிகள் என்றாலே அகராதியில் காரியவாதிகள் என்று பொருள் போலும். முதலில் மரக்கன்றுகளை இலவசமாக தருவதாக ஒத்துக் கொண்டவர் பின்னர் பணம் கொடுத்து வாங்கச் சொல்லியிருக்கிறார். உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட மக்கள் பணத்தையும், நேரத்தையும் விரயமாக்க விரும்பவில்லை. தாங்களே மரக்கன்று பண்ணைகளை உருவாக்க ஆரம்பித்தனர். இரண்டு மூன்று அடி வளர்ந்ததும் அந்த மரக்கன்றுகளை நட்டு அது பிழைத்தபிறகு பசுமைப்பட்ட இயக்கம் ஒன்றை ஊருவாக்கி அதிலிருந்து சிறு தொகையை அம்மக்களுக்கு வழங்கினர். ஒரு மரக்கன்றுக்குக் கொடுக்கப்படும் தொகை சிறிதுதானெனினும் அது பல மடங்காகப் பெருகும் போது அந்த பணம் பள்ளிக் கூடங்கள் கட்டுவதற்கும், பிள்ளைகளின் கல்விக்கு செலவிடுவதற்கும் பேருதவியாக இருந்தது. இப்படி மக்களை ஈடுபடுத்தி நிலைத்த மாற்றத்திற்கான ஒரு பாதையை ஏற்படுத்தினார்.

இன்று ஆப்பிரிக்க மக்கள் அடைந்திருக்கும் வளர்ச்சி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகக் கிடைத்தவைதானெனினும் இந்த மாற்றத்தை முன்னெடுத்த வங்காரியின் உழைப்பு பெருமைப்படுத்தப்படவும், வணங்கக்கூடியதாகவும் இருக்கிறது.

குடிநீர் இல்லை, சரியான சாலைவசதி இல்லை, கட்டுமானப் பொருட்கள் இல்லை, உணவு இல்லை, மண்வளமில்லை என்று முப்பது வருடங்களுக்கு முன் இருந்த நிலையைத் தலைகீழாக மாற்றியமைத்திருக்கின்றனர் வங்காரி மாதாவின் தலைமையிலான ஆப்பிரிக்க மக்கள். சுற்றுச் சூழலைப் பேணாத சமூகம் அல்லது நாடு எல்லாவற்றிருக்கும் கையேந்தி நிற்கும் நிலைமையைத்தான் பெறக் கூடும். இன்று தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக சாலையோர மரங்களை அழித்தெடுத்துவிட்டு சாலை நடுவினில் அழகுச் செடிகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்ற ஒரு வாகனத்தையும், அலுவலரையும் நியமித்து நாம் சாதித்தது கார்பன் மோனாக்சைடையும், சிறுவிலங்குகளையும், பறவையினங்களையும் அழித்ததுதான்தான்.

மரமின்றி மழையில்லை என்பது முதல் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கே தெரியும். ஒரு மரம் வெட்டப்படுகிறதெனில் அதற்கு பதிலாக ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும் எனும் மனப்பாங்கு நம்மிடையே வளர்ந்திருந்தால் இன்று நமது சாலைகளின் இருமருங்கும் பசுமையின் பயணிப்பு தொடர்ந்திருக்கும். இனி நாம் மழை நீர் சேகரிக்க வெறும் தொட்டிகளைக் கட்டிவிட்டு மழைக்காக காத்திருக்க வேண்டியதுதான். சுற்றுச் சூழலைப் பாதுகாக்க காடுகள் அவசியம். காடுகள் மனிதகுலத்தின் நாகரீகத்தை மேம்படுத்தும் என்பதை உலகம் மெதுவாக உணரத் துவங்கியிருக்கும் வேளையில் அதைச் செயல்முறைப்படுத்தியிருக்கும் வங்காரி மாதாய் வணங்கத்தக்கவர் மற்றும் பின்பற்றப்பட வேண்டியவர்.

இசைப்ரியா – ஊடகவியலாளர்:

உலகத் தமிழர்களிடையேயும், ஊடகத்துறையினரிடமும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஊடகவியலாளர். புலிகளின் பெண் போராளியும், தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளருமான இசைப்ரியா கடைசிக்கட்ட போரில் தனது கணவரையும், ஆறு மாதக் குழந்தையையும் இழந்து சிங்கள இராணுவத்தால் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இதை ஐ.நா.வும் போர்க்குற்ற விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

ஒரு போரளியாக தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்ட இசைப்ரியா குரல்வளமிக்கவராகவும், கலைத்துறைக்குப் பொருத்தமானவராகவும் அறியப்பட்டு செய்திவாசிப்பாளரானார். 2006-ல் கிழக்கு மாகாண கடற்புலிகளின் தளபதியான ஸ்ரீராமைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வேலி என்ற குறும்படத்தில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வாழும் ஒரு பெண்ணாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ‘கட்டுமரம் மேலே ஏறி’ என்ற ஒரு மெல்லிசைப் பாடலிலும் நடித்திருக்கிறார். அந்த பாடலுக்குப் படத்தொகுப்பும் செய்திருக்கிறார். இப்படி பல கலைகளைக் கற்று செயல்படுத்தி வந்தவர்.

பெண்களை இழிவுபடுத்தவேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் சிங்கள ராணுவம் தன் கையில் ஏந்தியிருக்கும் குரூர ஆயுதம் வன்புணர்வு. இந்த ஆயுதத் தாக்குதலுக்கு இசைப்ரியாவும் இரையாகியிருக்கிறார். இதனை செல்ஃபோனில் பதிவுசெய்து வைத்திருக்கிறது சிங்கள ராணுவம். இந்த படுபாதக காட்சியை இங்கிலாந்தின் சேனல் 4 வெளியிட்டது. பார்ப்பவர்களைக் கதற வைக்கும் அளவுக்கு படுகோரமாகவும் மோசமாகவும் சிங்களப் படையினர் இசைப்பிரியாவைச் சீரழித்திருந்தனர். வாழ்க்கையில் இப்படி ஒரு கோரமான நிகழ்வைப் பார்த்ததில்லை என்றும், இந்தக் காட்சியை கண்கொண்டு பார்க்க முடியவில்லை என்றும் சேனல் 4 செய்தியாளரே மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

நெல்லையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் அறிவரசன் இரண்டு வருடங்கள் ஈழத்தில் தமிழ் பணியாற்றியவர். அவர் (2010 ஜனவரி 6) நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் ‘மாலை ஏழு மணிமுதல் இரவு ஒன்பது மணி வரை மட்டுமே புலிகளின் ‘தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இதில் தினமும் செய்தி வாசிப்பார் இசைப்பிரியா. நல்ல கணீர் குரல் மிகச் சரியான தமிழ் உச்சரிப்பு இசைப்பிரியாவிடம் இருந்தது. ஒவ்வொரு நாளும் அவரது செய்தி வாசிப்பை கவனிப்பேன்.

துவக்கத்தில் கடற்பிரிவில் பெண் போராளியாக இருந்துள்ளார். அவரிடமிருந்த கலை மற்றும் இலக்கிய ஆர்வம், குரல் வளம் அறிந்து அவரை அரசியல் துறைக்கு அழைத்துக் கொண்டனர். தமிழீழ வானொலியும் , தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

அதனால் அரசியல் துறைக்கு மாற்றப்பட்ட இசைப்பிரியா, தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டார். வானொலி மற்றும் தொலைக்காட்சி பணியாளர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் ஒருமுறை நான் அங்கு சென்றபோது இசைப்பிரியாவை சந்தித்தேன்.

அப்போது அவரிடம், “இசை சரி… பிரியா என்பது தமிழ்ப் பெயர் இல்லையே…” என்றேன். அதற்கு அவர், ‘இயக்கத்தில் நான் சேர்ந்தபோது இசை அருவி என்றுதான் பெயரிட்டனர், ஆனால் இசைப்பிரியா.. இசைப்பிரியா.. என்று என் தோழிகளும் உறவினர்களும் அழைத்த்தால், அதுவே நிலைத்துவிட்டது’ என்றார்.

இசை அருவி மிக அழகான தமிழ்ப் பெயர், ப்ரியா என்பது தமிழ் கிடையாது என்றேன். மறுநாள் தொலைக்காட்சியில் செய்தியை கவனித்தபோது செய்தி வாசிப்பவர் இசை அருவி என்றே பதிவு செய்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ப்ரியா என்பது தமிழ்ப் பெயர் என்றே நினைத்திருந்தனர். தமிழ்ப் பெயர் அல்ல என்று சொன்னதை ஏற்று உடனே அவர்கள் அதை மாற்றிக் கொண்டது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. துடிப்பான அந்த இளம்பெண் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதை நக்கீரனில் பார்த்து மிகுந்த வேதனைப்பட்டேன் என்றார் அறிவரசன்.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அந்த இனத்தின் மொழியை அழித்தால் போதும் என்ற எண்ணத்தை வளரவிடாமல் செய்பவர்கள் கலைத்துறையினரே. கலை கலைக்காக அல்ல. மக்களுக்காக. என்று செயற்பட்டு வந்த இனப் போராளிகளில் ஒருவரான இசைப்ரியா கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. எத்தனையோ இசைப்ரியாக்கள் வெளியே தெரியாமல் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதையெல்லாம் இன்றும் கண்டும் காணாமல் இருக்கும் இனம் வரலாறு கூறும் பழிச்சொற்களில் இருந்து தப்பமுடியாது என்பது மட்டும் நிதர்சனம். போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். விதைத்தவன் உறங்கலாம். விதைகள் உறங்குவதில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

சோமாலி மாம் – மனித உரிமைச் செயற்பாட்டாளர்:

கம்போடியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் இவர் .

சோமாலியிடம் தான் பிறந்தற்கான எந்த அத்தாட்சிப் பத்திரங்களோ, ஆதரங்களோ இருக்கவில்லை. அவளது நினைவிலும் அது பற்றி தெரியவில்லை அவள் 1970 அல்லது 1971 இல் பிறந்திருக்கலாம் என சொல்லப்படுகின்றது. எழுபதுகளின் நடுப்பகுதிலில் கம்போடியமிது Khmer Rouge கொண்ட பயங்கரவாதம் பல மக்களை கிராமப் புறங்களுக்கு தள்ளியது. அந்த நிலையில் அவள் தன் பெற்றோரை Phnong என்ற கிராமத்தில் அவள் தவற விட்டாள். அநாதை ஆகினாள். ஒரு மனிதன் அவளை அவளது தகப்பனைக் கண்டுபிடித்து தருவேன் என சொல்லி அழைத்துக் செல்லும் வரை அவள் அந்த அநாதை இல்லத்திலேயே வாழ்ந்தாள். அவள் அங்கு அவனின் அடிமை என ஒப்பந்தம் செய்யப்பட்டு அடிமையாக நடத்தப்பட்டாள். அவனை தாத்தா என அழைக்குமாறு பணிக்கப்பட்டாள்.

14 வயதிருக்கும் போது வளர்த்தவராலேயே வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார். வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலுக்கும் தள்ளப்பட்ட சோமாலி யாரோ ஒருவனுக்கு மணம் முடித்துவைக்கப்பட்டார். அவருடைய கணவரிடமும் கொடுமை அனுபவித்த மாம் தினமும் ஆறேழு பேருடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தப்பட்டார். மறுத்தால் பாம்புகளும், தேள்களும் விடப்பட்ட அறையில் அடைக்கப்படுவார். இப்படியான வன்முறைக்குள் வீழ்த்தப்பட்ட சோமாலி தெருவில் நின்று தானே ஆள் கூப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட சரியான சந்தர்ப்பம் பார்த்து அங்கிருந்து தப்பியிருக்கிறார்.

கம்போடியாவிலிருந்து தப்பித்த சோமாலி மாம் 1993ல் ஃபிரான்சுக்கு வந்தார். பின் பாரிஸ் சென்ற அவர் திருமணம் செய்து கொண்டார். அப்போது அங்கு அவர் கண்ட உண்மை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிறைய பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதைக் கண்டு 1996ல் AFESIPஅமைப்பொன்றை உருவாக்கி பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்றினார். தாய்லாந்த், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளிலும் ஹெச்.ஐ.வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதுவரை 4000 பெண்களைக் காப்பாற்றியுள்ளார். 2007ல் சோமாலி மாம் பவுண்டேஷன் ஒன்றை நிறுவி தீவிரமாகச் செயற்பட்டு வருகிறார்.

அந்த வயதில் நடந்த சம்பவங்களை ஒருநாளும் இரவுகளில் நினைக்காமலிருக்க முடியவில்லை. நினைத்துவிட்டால் என்னைக் கத்தியால் குத்துவதைப் போன்ற உணர்வும், கெட்ட கனவுகளும் வரும். இது தினமும் நிகழ்ந்தபடிதான் இருக்கிறது. என்னால் இதிலிருந்து விடுபட இயலவில்லை. பாலியல் அடிமைகளாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய ரணமாக இருக்கும். வாழ்வது பெரும் போராட்டத்திற்குறியதாகவும் இருக்கும். வலிகளோடு இந்த சமூகத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குற்றவுணர்வும், தனிமையும் சூழ்ந்திருக்கும் இந்த வேதனையிலிருந்து அவர்களை மீட்க வேண்டியது அவசியம். யாரும் அவர்களுக்கு உதவி செய்யவோ, அன்பு செலுத்தவோ முன்வர மாட்டார்கள். அவர்களை நேசிக்கவும், தோஹ்வி செய்யவும் முன் வந்து அவர்களுக்கு இந்த உலகை எதிர்கொண்டு வாழும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வழங்குவது என் நோக்கமாக இருக்கிறது. என்னுடைய அம்மா, அப்பா யாரென்று எனக்கு தெரியாது. எனது வயது தெரியாது, சோமாலிதான் எனது பெயரா என்றும் தெரியாது. நான் தெரிந்து கொண்டதெல்லாம் வலி, வேதனை, சோகம். இதைப் போல பாதிக்கப்பட்டவர்களை என்னால் அவர்கள் பேசாமலே புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் இதயத்திலிருந்து சிரிப்பைக் கொண்டு வருவது மிகப் பெரிய சாதனையாக நான் நினைக்கிறேன். என்று சோமாலி நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். ‘The Road of Lost Innocence’ என்ற புத்தகத்தில் தன் வாழ்க்கை வரலாற்றோடு கம்போடிய நாட்டு அடிமைகளைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.

சோமாலி தனது பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் அவரது மிகப்பெரும் சாதனை ஒரு அடிமையான தன்னை மீட்டெடுத்து அதே போல பாதிக்கப்பட்ட பலரையும் மீட்டெடுத்து வருவதுதான்.

சமூகத்தில் புரையோடிப் போன சில விஷயங்களை அழித்தெடுத்து புதிய மாற்றங்களையும், உரிமைகளையும் பெற போராடும் இவர்களைப் போன்றவர்களை பார்த்தாவது, படித்தாவது நமது செயல்பாட்டையும் சமூகத்தில் முன்னெடுத்தோம் எனில் அதுவே மனிதம் இன்னும் இருப்பதற்கான அடையாளமாகும்.

1 Comment on “உலகம் வியக்கும் போராளிப் பெண்கள்”

  1. தொலைக்காட்சியினில் கிடைக்கும் நேரத்தினை தொலைக்கவே விரும்பும் மகளிர் அனைவரும் இப்பதிவினை வாசித்தால் ஒருவேளை மாற்றம் வரலாம். “ஆணுக்குப் பெண் இளைப்பாறில்லை”யென நிருபித்த அனைத்து பெண் போராளிகளுக்கும் வணக்கங்கள்! உலகம் அறிந்த ஊடகவியலாளர் படுகொலையினையும் மாந்தநேயமற்ற சித்ரவதைகளை புரிந்த இலங்கை இராணுவத்தினரையும் இதுவரை முன்னணியில் உள்ள இந்திய தமிழக ஊடகங்கள் பெருங்குரலெடுத்து போராட முன்வராதது வரலாற்றுப் பிழை என விரைவினில் உணர்வர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *