நன்றி- 4தமிழ்மீடியாவிற்காக: மாதுமை, ஸாரா, நாகன்.
இதோ; எகிப்தின் கெய்ரோவிலிருந்து, யேமனின் சானா நகர் நோக்கி ஊடகங்களின் கவனம் திரும்புகிறது. ஆம்! யேமனின் அடக்குமுறை ஆட்சியாளருக்கு எதிராக,அந்நாட்டு மக்கள் அணி திரள்கின்றார்கள்… எகிப்திய மக்களின் எழுச்சியை முன்னுதாரணமாய் நிறுத்தி…ஆம்! இது ஒரு இணைய புரட்சி. இணையமே இதனைச் சாத்தியமாக்கியது. ஒவ்வொருவரும் தெருக்களில் இறங்கிய போது எனக்கு பெருமையாக இருந்தது. |
அன்மைக்காலத்தில் நடத்திருக்கும் மிகப்பெரிய மக்கள் ஆர்ப்பாட்டமென அமைந்த எகிப்திய மக்கள் போராட்டம், முப்பது ஆண்டு காலமாக, அந்நாட்டின் அரசியலில் ஆதிக்கம்செலுத்திய அதிபர் முபாராக் பதவி விலகுவதாக அறிவித்து, மக்களால் ஜனநாயகரீதியில் மற்றுமொரு தேர்தல் நடாத்தப்படும் வரை எகிப்தின் இடைக்கால அரசை இராணுவம் கொண்டு நடத்தும் என்ற அறிவிப்பில் வந்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு அல்லற்பட்டுக் கொண்டிருந்த எகிப்திய மக்களுக்கு ஓரளவுக்கு ஆறுதல் அளித்தாலும், அப்படி ஒரு தருணம் மலரும் வரை, அது குறித்த ஐயங்கள் உள்ள வண்ணமாகவே இருக்கின்றது என்பதை, தாம் எதிர்பாத்திருக்கும் ஒரு நிலை தோன்றும் வரை, தமது அழுத்தங்களை நிறுத்தப்போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அறிவித்திருப்பதில் இருந்து அறிய முடிகிறது.
திரண்டெழுந்த பெரும் மக்கள் கூட்டத்தை முபாராக்கின் பதவி விலகல் அறிவிப்பின் மூலம், அவர்களது நிலைகளுக்கு மீளத் திருப்பிவிட்டு, அதிகார பீடங்கள் இராணுவத்தின் துணைகொண்டு, மீண்டும் தனது அடக்குமுறைகளைப் படிபடியாகத் தொடங்குமா..? அல்லது இடைக்கால இராணுவ அரசு, மக்கள் விரும்பும் நீதியான தேர்தல் ஒன்றை நிறைவேற்றுமா..? இந்த ஆர்ப்பாட்டத்தின் அடிநாதமாக இருக்கக் கூடிய இளைய தலைமுறையினர், இந்தத் தேர்தல்களில் உள்வாங்கப்படுவார்களா..? எனும் கேள்விகள் எழுந்த வண்ணமே இருகின்றது. இவ்வாறான கேள்விகள் எழுவதற்கு வலுவான காரணங்களும் உள்ளன.
கெய்ரோவில் தாரிஹ் சதுக்கத்தில் கூடியிருக்கும் மக்களை அகற்றுவதில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் கைகலப்புக்கள் ஏற்படுள்ளன என அல்சஜீராவின் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தொடர்ந்தும் தாரிர்ஹ் சதுக்கத்தில் கூடியிருப்பதாகவும் தமது கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படும் வரையில் நகரப்போவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இராணுவம் எகிப்தின் முதுகுகெலும்பு எனவும், அவர்கள் எமது எதிரிகளல்ல எனவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட குழுக்கள் சிலவற்றின் தலைவர்கள் இணைந்து ஓர் சபையை உருவாக்கியுள்ளனர். இவர்கள் இராணுவத்தினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும், சீர்திருத்த நடவடிக்கைகளான அரசாங்கம் கலைக்கப்பட வேண்டும், அமைச்சரவை மாற்றப்பட வேண்டும், அவசரகாலச்சட்டம் நீக்கப்பட வேண்டும், என்பன போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளது.
அதேவேளை நாடு மெல்ல மெல்ல சுமூகமான நிலைமைக்குத் திரும்புவதாகவும் வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு வாகனப் போக்குவரத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது முபாரக் பதவி விலகி விட்டார் எனவே நாட்டின் ஸ்திர நிலைமை மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் இராணுவம் தீவிரமாக இருப்பதாகவும், ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களோ இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் ஒரு சிவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் வரை தமது போராட்டம் சதுக்கத்தில் தொடரும் எனக் கூறுகின்றனர். மறு சீரமைப்பிற்கான தமது கோரிக்கைகளை தற்போதுள்ள இராணுவகவுன்சில் ஏற்றுக் கொள்ள மறுக்கும் பட்சத்தில் மேலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் தொடரும் என எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்தும் அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இராணுவக் கவுன்சில் பொறுப்புபேற்ற பின் விடுத்த உத்தியோகபூர்வ அறிக்கையில் எகிப்து சர்வதேச நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் எவற்றிலும் மாற்றங்கள் எதையுமே ஏற்படுத்தப்படுத்தப் போவதில்லை எனவும் இதில் 1979 இல் இஸ்ரேலுடனான சமாதான ஒப்பந்தமும் அடங்கும் எனவும் இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.ஆக மொத்தத்தில் எகிப்து மக்களின் போராட்டம் முபாரக்கை பதவி விலக்குவதுடன் நின்று விடுமா என்ற கேள்வி இங்கு தொக்கி நிக்கிறது.
அமெரிக்காபூமிக்கிரகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான திட்டத்தின் மூலைகல்லாக பயன்படுத்துவது எகிப்தையே. தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்து எகிப்து விடுபடுவதற்கு அமெரிக்கா ஒரு போதும் சம்மதிக்கப் போவதில்லை. இந்நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் தனது செல்லப்பிள்ளையான இஸ்ரேலின் பாலஸ்தீனம் மீதான அத்துமீறல்களும், வரையறையற்ற குடியேற்றங்களும் பாதிக்கப்படலாம். மற்றும் இன்னும் பல நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுக்க நேரலாம், எனச் சிந்திக்கக் கூடிய நிலையில், எகிப்தின் தலைமையில் மாற்றம் ஏற்படுவதை அமெரிக்கா ஆதரிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வீதிகளில் இறங்கிப் போராடும் எகிப்திய மக்களின் போராட்டத்தை அமெரிக்கா ஆதரிப்பது போன்று, எகிப்திய மக்கள் தமது கருத்தை தெரிவித்துக் கொள்வதாகச் சொல்கின்றன அமெரிக்கத்தலைமைகள். அங்கு ஜனநாயகம் நிலவ வேண்டுமானால் முபாரக் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதையும் ஒபாமா வலியுறுத்தியிருந்தார். இராணுவத்தின் புலனாய்வுத்துறைக்குப் பொறுப்பு வகித்த ஓமார் சுலைமானை உப ஜனாதிபதியாக தெரிவு செய்தமை அமெரிக்காவின் ஏற்பாடாக இருக்கலாம் என அவதானிகள் சிலர் சந்தேகம் கொள்கின்றனர்.
இராணுவத்தினருக்கோ தாம் தமது மக்களின் போராட்ட உணர்வுகளை மதித்து தற்போது சமூகத்தில் நிலவும் சமத்துவமற்ற நிலைமைகளை மாற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபடுவதா அல்லது தமது அதிகாரத் தோற்றத்தை தக்க வைப்பதா என்பது தொடர்பான தடுமாற்றம் காணப்படுவதாகத் தெரிகிறது. தற்போதுள்ள நிலைமையில் எகிப்திய மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தினை வழிநடத்தும் தலைமைகளாக யார் இருக்கப்போகிறார்கள் என்பதும் மிகுந்த குழப்பமாகவே இருக்கிறது.
முகமட் எல் பரடேயை எடுத்துக் கொண்டால் இவர் எகிப்திற்கு வெளியே நன்கறியப்பட்டவரேயன்றி எகிப்திய மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் அல்ல. அத்தோடு எல் பரடே ” தாராளவாத” போக்கை கொண்டவர் எனப் பார்க்கப்படலாம். நாட்டில் காணப்படும் சமூக நிலைமைகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு பொருத்தமான தீர்வுகளை முன் வைப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது. இவர் பெரும்பாலும் மோசடிகளற்ற தேர்தல் நடைபெற வேண்டும், சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட வேண்டும், கைதுகள் சித்திரவதைகள் நடைபெறுவது நிறுத்தப்பட வேண்டும் என்பது போன்ற மேலெழுந்த ரீதியிலான நடைமுறைகளைக் கோருவதுடன் திருப்தியடைந்து விடுபவர் போலக் காணப்படுகிறார்.
” மோசடிகளற்ற” தேர்தல் நடைபெறும் பட்சத்தில் முஸ்லீம்கள் சகோதரத்துவ அமைப்பு கணிசமான பலத்தைப் பெறலாம் என நம்பப்படுகிறது. இதனையே அமெரிக்காவும் விரும்புவதாக ஊகங்கள் வெளிப்படுகின்றன. இது அமெரிக்காவின் தந்திரோபாயப் போக்காகவும் இருக்கலாம். தற்போது ஆட்சியிலிருந்த வகுப்பைச் சார்ந்தவர்களே இந்த முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பும் எனக் கூறப்படுகிறது. உழைக்கும் மக்கள் வேலை நிறுத்தத்திலும் மற்றும் விவசாயிகள் தமது உரிமைப்போராட்டத்தை முன்னெடுத்த வேளைகளில் நிலங்களின் மீது தமது உரிமையைப் பேணுவதற்காக இம்மக்களின் போராட்டத்தை இவர்கள் கடுமையாக எதிர்த்தவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எகிப்து தொடர்பாக அமெரிக்கா வைத்திருக்கும் திட்டம் பாகிஸ்தான் மாதிரியை ஒத்தது என மாற்றுக்க கருத்துக்களுக்கான ஊடகங்களின் கருத்தாகும். அதாவது பாகிஸ்தானில் காணப்படுவது போன்ற இஸ்லாமிய அரசு – இராணுவபலத்தை அநுசரித்த போக்கும் என்னும் அமைப்பு. இந்த மாதிரியை இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் உதவியுடன் சாத்தியமாக்கினால் அமெரிக்கா தொடர்ந்தும் மத்திய கிழக்கில் தனது இலாபங்களுக்கு ஏற்ப நாடுகளைச் சுரண்டவும் தேவை ஏற்படும் பட்சத்தில் தலைமையை மாற்றவும் வாய்ப்புக்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கலாம்.
இந்த மக்கள் எழுச்சி குறித்து, முற்றுப் பெறாத முடிவுகளும், முடிவற்ற சந்தேகங்களுமாகத் தொடரும் இந் நிலையில், மேற்குலக நாடுகள் பலவற்றின் அரசியற்தலைவரகள் கள்ளமெளனம் காட்டுகின்றனர். ஆனால் இலங்கையிலும், இந்தியாவிலும், அரசியற் தலைவர்கள் பலர், வெற்றி பெற்ற எகிப்திய மக்கள் புரட்சியின் வழியில், தங்கள் நாடுகளிலும் புரட்சி வெடிக்கும் எனப் பேசத் தொடங்கிவிட்டார்கள். மக்கள் புரட்சி வெடிப்பது ஒருபுறம் இருக்கட்டும், முதலில் எகிப்திய மக்கள் எழுச்சியில் காணப்பட்ட சில முக்கிய கூறுகளை உள்வாங்கிக் கொள்வதே மாற்றம் விரும்புவர்களுக்கு உகந்ததாக இருக்கும்.
உலக கவனம் பெற்றிருக்கும் எகிப்து மக்கள் புரட்சியை இரண்டு வாரங்களுக்கு முன் ஒற்றை மனிதர்களாக தொடங்கியவர்களில் முக்கிய பங்கு வகித்தவர் வேல் கோனிம் (wael.ghonim) என்ற முப்பது வயது இளைஞர். முபாராக் பதவி விலகுவதாக அறிவித்த கணங்களில், இந்த எழுச்சியில் இறந்த நூற்றுக் கணக்கானவர்களுக்காக, அவர்களின் இறப்பில் தானும் ஏதோ ஒரு வகையில் காரணமாய் இருப்பதாகக் கண்கலங்கி நின்றார்.
எகிப்தின் கூகுள் நிறுவன மார்க்கெட்டிங் செயற்குழு தலைவராக பதவி வகித்த இவர், எகிப்தில் மக்கள் புரட்சி ஒன்றின் மூலமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என திடமாக நம்பினார். இதற்காக மில்லியன் கணக்கான மக்களை ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் எவ்வித அசௌகரியமும் இன்றி ஒன்றிணைக்க வேண்டும் என திட்டமிட்டார். எகிப்து மக்கள் புரட்சியை நடத்துவதற்கு அவர் கையில் எடுத்த ஆயுதம் துப்பாக்கியும் அல்ல! உண்ணாவிரதமும் அல்ல! லேப்டொப் கணனியும் ‘பேஸ்புக்’ சோஷியல் நெட்வேர்க்கிங் எனப்படும் சமூகவலைத் தளமும் தான்.
போராட்டம், தொடங்கப்பட்ட போது, அவர் எதிர்பார்த்தபடியே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். சில நாட்களின் பின் விடுதலையாகியவர், மக்கள் எழுச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த முக்கியமான தருணத்தில் சி.என்.என் செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்த கருத்துக்கள் கவனிக்கத் தக்கவை.
இப்புரட்சி திட்டமிடப்பட்டதா?
ஆம்.
என்ன திட்டம் அது?
ஒவ்வொருவரையும் தெருவிற்கு கொண்டுவருவது.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு (Muslim Brotherhood) கொடுத்து வரும் ஆதரவு பற்றி ?
அவர்கள் எம்முடன் உத்தியோகபூர்வமாக இணையவில்லை. அவர்கள் இதில் இணைந்துகொள்ள போவதில்லை என அறிவித்திருந்தனர். இளைஞர்களை வைத்தே இதை கொண்டு நடத்துங்கள் என்று தான் அவர்கள் சொன்னார்கள். உங்களுக்கு ஆதரவு வேண்டுமாயின், முடிந்தால் நீங்களே திரட்டிக் கொள்ளுங்கள் என அவர்கள் கூறினார்கள். நாம் இணையத்தை பயன்படுத்தி அவ் இளைஞர்களை திரட்டினோம்.
( வீடியோவில் 20 வது செக்கனில் இது பற்றி வருகிறது )
உங்கள் அணி திரட்டலுக்கு இணையம் கை கொடுத்ததா?
ஆம்! இது ஒரு இணைய புரட்சி. இணையமே இதனைச் சாத்தியமாக்கியது. ஒவ்வொருவரும் தெருக்களில் இறங்கிய போது எனக்கு பெருமையாக இருந்தது.
இணையத்தின் மூலம் புரட்சி தொடங்கப்பட்டதன் வரிசையில், முதலில் துனிசியா, இப்போது எகிப்து, இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இதற்கு காரணம் ‘பேஸ்புக்’ . எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பேர்க்கை நேரடியாக சந்திக்க வேண்டும். அவருக்கு எனது நன்றிகளை தெரிவிக்க வேண்டும். இப்புரட்சி ஜூன் 2010 இல் பேஸ்புக் வழியே தான் ஆரம்பித்தது. நாம் முதன் முதலாக பதிவு செய்த ஒரு வீடியோ, சில மணி நேரங்களில் 60,000 மக்களுக்கு சென்றடைந்தது பேஸ்புக்கில் தான். மக்கள் அதிர்ச்சி அடைந்ததும் இதனால் தான்.
நான் உங்களுக்கு சொல்வதும் அது தான். உங்களுடைய சமூகமும், ஓர் வல்லாதிக்கத்திடமிருந்து விடுதலையாக வேண்டும் என்றால் இணையத்தை நாடுங்கள். சமூகவழி இணையத்தளங்களை நாடுங்கள். 79,89 இல் எங்களால் இப்புரட்சியை நடத்தியிருக்க முடியாது. இப்போது முடிந்திருக்கிறது. காரணம் இணையம். இணைய ஊடகம்…! நான் இந்த நடவடிக்கையை Mission 2.0 என அழைக்கிறேன்.! காரணம் இது ஒரு இணையப்புரட்சி
முபாரக் பதவியிலிருந்து இறங்க வேண்டும். அவர் தொடர்ந்து பதவியிலிருப்பது ஒரு தேசக்குற்றம். நான் உயிரை விட தயாராக இருக்கிறேன்! நான் உலகின் ஒரு தலைசிறந்த நிறுவனத்திற்காக (கூகுள்) வேலை புரிகிறேன். ஆனால் இப்போது வேலைக்கு சமூகமளிக்க தவறியதால் அங்கிருந்து வெளியேற நேர்ந்துள்ளது. எனக்கு சிறந்த ஒரு மனைவி இருக்கிறார். எனது குழந்தைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இவையெல்லாவற்றையும் இப்போது இழக்க தயாரகியுள்ளேன். எனது கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக. யாராலும் எமது அர்ப்பணிக்களையும், அபிலாஷைகளையும் தடுக்கவோ எதிர்க்கவோ முடியாது. யாராலும் முடியாது!!!!
நான் இப்போது சொல்வதை, ஒமர் சுலைமானும் (துணை அதிபர்) கேட்டுக் கொண்டிருப்பீர்கள்! என்னை கடத்துங்கள்! எனது நண்பர்களை கடத்துங்கள்! எங்களை சிறையில் அடையுங்கள்! கொல்லுங்கள்! எங்களை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்! ஆனால் நாம் எமது நாட்டுக்காக மீண்டெழுவோம். (கண் கலங்கிய படி…) நீங்கள் எங்கள் நாட்டை 30 வருடகாலமாக..30 வருடகாலமாக அழித்துவிட்டீர்கள். போதும்…போதும்…!
வேல் கோனிம்னின் இந்தக் கருத்துக்களில், இருந்து கற்றுக்க கொள்ளப்பட வேண்டியவை எவை என்பதை மாற்றம் விரும்புவர்கள் தெரிவுக்கு விட்டு அடுத்த பகுதிக்குச் செல்வோம்.
இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் மட்டும் என்றில்லை. மக்களின் அத்தனை பிரிவினரும் எண்ணத்தில் ஒன்றிணைந்திருந்தார்கள் என்பது முக்கியமானது. இளைஞர்கள் பெரியவர்கள், பெண்கள், சிறுவர்கள், என அனைத்துத் தரப்பினரும் இணைந்திருந்தார்கள்.
பெப்ரவரி 10ம் திகதி இடம்பெற்ற ஆர்பாட்டங்களின் போது, 11 வயது நிரம்பிய யூஸஸ் இவ் ஆர்ப்பாட்டங்களை பற்றி கூறுகையில்; நான் காலையில் எழுந்ததும், தொழுதுவிட்டு, ஆர்ப்பாட்டங்களில் இணைந்து கொள்வேன். நாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டோம். நானும் தலையில் முரடான தொப்பி அணிந்திருப்பேன். முபாரக் ஆதரவாளர்கள் கற்கள் வீசினால் என் தலையில் பட்டு காயமேற்படுவதை தடுப்பதற்காக!
எங்களது அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரவேண்டும். நாங்கள் இலகுவாக எமது வாழ்க்கையை வாழவில்லை. எனக்கு இந்த கூடாரங்களில் இருப்பது கஷ்ட்டமாக தெரியவில்லை. காரணம் எனக்கு தெரியும். இந்த ஆர்ப்பாட்டத்தை எனது குடும்பத்தவர்கள் நடத்துவது எனது எதிர்காலத்துக்கு தான் – என்றான்.
பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்டிருந்த இந்த மக்கள் எழுச்சியில், கவனிக்கத் தக்க பல்வேறு அம்சங்களில் முக்கியமானது, இப் போராட்டத்தினை அவர்கள் மத ரீதியான போராட்டமாக அடையாளப்படுத்த முனையாததது. போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்களாக இருந்த போதும், போராட்ட களத்திலே வேளை தவறாது தொழுகை நடத்திய முஸ்லீம்களாக இருந்த போதும், போராட்டத்தினை முஸ்லீம்களின் போராட்டமாக அல்லாது, எகிப்தியர்களின் போராட்டமாக வெளிப்படுத்தியிருந்தார்கள். முஸ்லீம்கள் திவிரவாதிகள் எனும் மேற்குலகின் முத்திரை குத்தலில் இருந்து விலகிநின்று, தன்னெழுச்சியான மக்கள் போராட்டமாகக் கட்டமைத்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடியிருந்த சூழலில் ஏற்படக் கூடிய தேவைகளைத் தன்னார்வத் தொண்டர்களாகத் தாமே மாறித் தீர்த்துக் கொண்டதிலும் சரி, பல்வேறு இடங்களில் திரண்டிருந்த போதும், தங்களுக்கிடையிலான தொடர்பாடலை நடைமுறைப்படுத்தியதிலும் சரி, முபாராக்கின் ஆதரவாளர்களினால் பல்வேறு சந்தர்பங்களில் ஆத்திரமூட்டல் சம்பவங்கள் எற்படுத்தப்பட்ட போதும், பெருமளவில் கட்டுக்கோப்புடன் நடந்து கொண்டதும், எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில், சமரசங்களின்றிப் போராட்டத்தில் ஒன்றித்திருந்த மக்கள் என்பன இந்தப் போராட்டத்தின் எண்ண இலக்கு நோக்கி நகரவைத்த காரணிகளில் முக்கியமானவை எனலாம்.
நதிக்கரை நாகரீகத்தில் வளர்ச்சி பெற்று முன்னிலை பெற்றிருந்த எகிப்து, மக்கள் எழுச்சியிலும் முன்னுதாரணமான போராட்டத்தை தொடங்கியிருக்கிறது. இனித் தொடர்பவர்களும், எதிர்ப்பவர்களும், இந்த எழுச்சியில் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே உள்ளது. செய்வார்களா..?