இரோம் ஷர்மிளா கவிதைகள் “அமைதியின் நறுமணம்”.

 

மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரி கடந்த பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் இரோம் ஷர்மிளா. தமிழில் முதன் முதலாக அவரது சில கவிதைகளையும் நேர்காணல்களையும் அம்பையின் மொழியாக்கத்தில் “அமைதியின் நறுமணம் “ என்ற பெயரில் நூலாக வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு பதிப்பகம்.

போராடும் ஒரு பெண்ணின் தனிமையை, காதலை, துயரைப் பேசுகிறது இந்த நூல்.

காதல்

 என்னிடமிருந்து வெகுதூரம் போய்விடு
என் நலன் பற்றி இனி விசாரிக்க வேண்டாம்
எனக்காகக் கவலைப்பட வேண்டாம்
காலப் புயல் என்னை அடித்துச் சென்றால்
அனலில் இடப்பட்ட வாழ்க்கை என்னுடையது
காலமெல்லாம் உடனிருக்கும் நண்பனுக்காக
என் மனம் ஏங்குகிறது
யார் ஏற்றாலும் சரி
ஏற்காவிட்டாலும் சரி
அவன்தான் என் வாழ்க்கையின் சாரம்.
 

ன் விழிகள் நிரந்தரமாக மூடும்போது
என் ஆத்மா வானத்தில் சிறகடிக்கும்போது
எனக்காகக் காத்திரு
என் அன்பே.

 

 பாக்கியவதி

இனிமேல் என்றும் எனக்குச் சொந்தமில்லாத
என் அன்பு
கழிவிரக்கத்துடன் என்முன் வரும்போது
காதல் என் உணர்வுகளைச் சீண்டுகிறது
என் விழிகளால் அவன் விழிகளைச் சந்திக்கும்
ஏக்கம் மூள்கிறது
கட்டுப்பாடுகளின் சுவர்களுக்குள் நான்
அதனால்தான் மனமே இல்லாமல்
பின்வாங்கல்
என்னை மறந்துவிடு என் அன்பே
இன்று நான் வேறு ஒருவனுக்கு
உரிமையானவளாக இருக்கலாம்
அன்று நீ பச்சோந்தியானாய் இப்படித்தான்
நாம் பிரிந்தோம், அன்புடன்
உன்னை நான் ஆராதித்தேன் மனமார
ஆனால் இன்று நீ
பாக்கியம் செய்த இன்னொருத்திக்கு
உரியவன்.

 

 அமைதியின் நறுமணம்

 வாழ்க்கை முடிந்துபோனதும்
உயிரற்ற கூடான என் உடலை
தயவுசெய்து தூக்கிச் சென்று
தந்தை கூப்ரூவின் மலை உச்சியில்
வைத்துவிடுங்கள்.

                                                                                                                  amaithiyin_narumanam-Irom_Sharmila   

வெற்றிபெற்ற புழு

என் செத்த உடல்
கோடரியாலும் மண்வெட்டியாலும்
சிதைக்கப்பட்டு
நெருப்பில் சாம்பலாவதை
நினைத்தால்
மனத்தில் அசூயை பொங்குகிறது
வதங்கப்போகும் சருமம்
பூமியினடியே அழுகட்டும்
வரும் தலைமுறையினருக்கு அது உபயோகப்படட்டும்
உலோகக்கருவாக அது மாறட்டும்
இனி வரும் காலங்களில்
நான் பிறந்த காங்லேயின் வேர்களிலிருந்து
நான் அமைதியின் நறுமணத்தைப் பரப்புவேன்
உலகின் ஒவ்வொரு மூலைக்கும்.

கடவுளுக்கும் புழுவுக்கும் இடையே நடந்த போரில்
புழு கடவுளைக் கொன்றுவிட்டது
நேர்மையான மனிதன்
கடவுளாகப் போற்றப்படுவான்
கடவுளை எதிர்த்து வெற்றிகண்ட பாவிகளை
அசுத்தமான புழுவான நான் வெறுக்கிறேன்
அவர்களுக்கு இருளைத் தவிர
வேறொரு முடிவில்லை.

ிறை உலகை

ன்னால் மறக்க முடியவில்லை
பறவைகள் சிறகடிக்கும்போது
விழிகளில் நீர் பொங்கும்
நடக்க முடியாத இந்தக் கால்கள் எதற்கு
என்னும் கேள்வி எழும்
பார்க்க முடியாத விழிகள் பயனற்றவை
எனக் கூவத் தோன்றும்
என்னைப் போன்றவர்கள்
கண்ணில்படாமல் மறைந்துவிடு ஓ சிறையே!
உன் வலிமையான சங்கிலிகளின் கொடுமையில்
வாழ்க்கைகள் சிதறுண்டன
உன்னால்தான் கடவுளுக்குச் சாபம்
உன்னால்தான் அதிகாரத்தை
நாங்கள் வெறுக்கிறோம்.
  

 சாவை எதிர்கொள்வது பற்றிய கேள்விக்கு சர்மிளா இப்படி பதில் சொல்கிறார். “ நான் இருப்பேனா வாழ்வேனா என்பது பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. நாம் எல்லோரும் சாகத்தான் பிறந்திருக்கிறோம் என்பது உண்மை. என் ஆத்மா கடவுளின் பாதுகாப்பில் இருக்கிறது. நாம் நினைத்தபடி நாம் வாழ முடியாது… நினைத்தபடி சாகவும் முடியாது. எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது. வாழ்வும் சாவும் அவன் கையில் இருக்கிறது. சாவு குறித்து எனக்கு எந்த அச்சமும்இல்லை. இப்போது நான் செய்வதெல்லாம் கடவுளின் விருப்பமும் என் மக்களின் விருப்பமும்தான். ஒரு மனித உயிர் வாழும்போது அவனோ அவளோ பல தவறுகளைச் செய்யலாம். நம் பெற்றோர் நமக்குப் பிறப்பளித்தாலும் அவர்கள் குணங்கள் எல்லாம் நமக்குண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனது தாய் தந்தையிடம் வேண்டாத குணங்கள் உண்டு. அவர்கள் என்னை வளர்த்த போது அவர்கள் சரி என்று கருதிய முறையில் வளர்த்தார்கள். ஆனால் நான் வளர்ந்து பெரியவளாகி எது சரி எது தவறு என்பதை உணர்ந்தபோது அவர்கள் செய்ததில் எது சரி எது தவறு என்பது எனக்குத் தெரிந்தது. அவற்றைத் திருத்தும் ஆசை ஏற்பட்டது. அதுபோலவே என் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.

 

நூல் கிடைக்குமிடம்.
அமைதியில் நறுமணம்.
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில்,
629001

 ன்றி http://www.athirai.blogspot.com/  ன்றி- குங்குமம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *