வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு
கண்ணெதிரே மரணித்துக் கொண்டிருந்த இரத்த உறவுகளின் உடல்களைத் தாண்டி ஓடுகின்ற சக்தி அந்த வேளையில் அவர்களுக்கு இருந்த போதிலும், இன்று தமது சொந்த இடங்களை நாடிச் செல்லும் போது மீண்டும் தாம் அனுபவித்து வந்த துயரத்தின் மன உளைச்சலைத் தாங்க முடியாது திணறுகின்ற சூழ்நிலை நிலவுகின்றது. .
|
கடந்த காலத்தில் உள்நாட்டு யுத்தம், உள்நாட்டு இடப்பெயர்வு, அதனோடு இணைந்த முகாம் வாழ்க்கை, மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு மீளத்திரும்பிய மக்கள் அவர்கள் வாழ்வில் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் மற்றும் தேவைகள் தொடர்பாக பலதரப்பினரும் பேசிக் கொள்கின்ற போதும் விசேடமாக சிறுவர்கள் மற்றும் தனித்துவிடப்பட்ட பெண்கள் தொடர்பான அக்கறை எவ்வளவு தூரம் கவனத்தில் கொள்ளப்படுகின்றது என்பது கேள்விக்குரியதாக இருக்கின்றது
ஏனெனில் பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்தோரை அவர்களுக்குரிய சொந்த இடங்களுக்கு மீளத் திருப்பி அனுப்புவதால் மட்டும் அவர்கள் அனுபவித்த யுத்தத்தின் கோரம் குறைந்துவிடுவதில்லை. வன்னிப் பகுதியில் பாதிப்படைந்தவர்களில் அதிகமான அளவில் தாக்கத்திற்கு உள்ளானோர் பெண்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
உறவுகளின் இழப்பு மற்றும் அங்கவீனத்துடனான எதிர்கால வாழ்க்கை, சொத்திழப்பு, வாழ்விடங்கள் அழிப்பு, காணாமல் போன உறவுகளின் சிந்தனை என குடும்ப வாழ்வின் அடிப்படையில் பெண்கள் இன்றுவரை அனுபவிக்கும் துயரத்தை சொல்வது அவ்வளவு இலகுவானதல்ல. அண்மைக் காலமாக மீளத் திரும்பிய பெண்கள் வாழ்வில் அவர்கள் யுத்த காலத்தில் அனுபவித்த போரின் அகோரத் தன்மையானது மனதளவில் இருந்து இன்னமும் மாற்றம் காணாது தாக்கம் செலுத்துவதாகவே காணப்படுகின்றது.
கண்ணெதிரே மரணித்துக் கொண்டிருந்த இரத்த உறவுகளின் உடல்களைத் தாண்டி ஓடுகின்ற சக்தி அந்த வேளையில் அவர்களுக்கு இருந்த போதிலும், இன்று தமது சொந்த இடங்களை நாடிச் செல்லும் போது மீண்டும் தாம் அனுபவித்து வந்த துயரத்தின் மன உளைச்சலைத் தாங்க முடியாது திணறுகின்ற சூழ்நிலை நிலவுகின்றது. இதன் வெளிப்பாடாக வாழ்க்கை மீது விரக்தி, இனி வாழ்வதால் என்ன பயன்? தொடர்ந்து வாழ்க்கையைக் கொண்டு செல்லக் கூடிய பொருளாதார பலனின்மை போன்ற காரணங்களால் தற்கொலை முயற்சிகள் மேற்கொள்கின்ற நிலையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பெற்றோரை இழந்த சிறுவர்கள் மற்றும் பிள்ளைகளையும் தமது கணவரையும் இழந்த பெண்கள் நாளாந்தம் தமது துயரத்தை மீட்டிப் பார்க்கும் போது அதனை தாங்கிக் கொள்ளும் வலு வற்றவர்களாக தற்கொலை முயற்சிக்குத் துணிந்த நிலை மீளத் திரும்பிய பகுதிகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. போர் நடைபெற்றுக் கொண்ட வேளையில் தமது உயிரைப் பாதுகாப்பதற்கு ஓடிய இவர்களால் இன்று தாம் இழந்த உறவுகளின் நினைவினையும், அவ்வுயிர்களின் பெறுமதியினையும் சிந்திக்கும் போது விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்படுகின்றனர். மேற்கூறப்பட்டவாறு மனச் சிக்கலுக்கு இலக்கான பலர் இன்னமும் தமது நாளாந்த வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது திண்டாடுவது கவனிக்கப்படாதுள்ளது.
பெண்கள் தமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றிற்கு மேற்பட்டதான பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இவ்வாறான பெண்கள் மீது சுமத்தப்படுகின்ற பன்மைச் சுமையானது போரின் பின்னர் இன்னும் அதிகமாக பல்வேறு வடிவங்களில் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன. உறவுகளின் இழப்புகள் மாத்திரமன்றி வாழ்வாதாரத் தேவைகள் பூர்த்தி செய்ய முடியாத பொருளாதார சிக்கல் மேலோங்கி உள்ளமை மற்றும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் மற்றும் மாற்றுத் தேவை உள்ளோர் அதிகளவில் இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். கணவன் தடுப்பில் இருக்கும் போது கைக் குழந்தையுடன் வருவாயின்றி இருக்கும் பெண்கள், கணவன் உயிரோடு இருக்கின்றாரா? அல்லது இல்லையா? எனத் தெரியாது அவதியுறும் பெண்கள் என பலவாறான வகைப்பாட்டுக்குள் சிக்கித் தவிக்கும் தனித்துவிடப்பட்ட பெண்கள் தொடர்பாக எமது கவனத்தை திருப்புதல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட விசுவமடுப் பகுதியில் முகாமிலிருந்து சென்ற ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபா மாத்திரமே வழங்கப்பட்டதோடு குடிசை வீடுகளை வைத்திருந்தோருக்கு மாத்திரமே 12 கூரைத் தகடுகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலமாக முகாம் வாழ்வை மேற்கொண்டு தமது உடைமைகள் அனைத்தையும் இழந்து செல்கின்ற மக்களால் நிவாரணப் பொருட்களை நம்பி மட்டும் எவ்வாறு எதிர்காலம் பற்றி சிந்திக்க முடியும்?
தற்காலத்தில் வன்னிப் பகுதியில் தோன்றியுள்ள மற்றோர் முக்கியமான பிரச்சினையாக வெளித்தெரிவது குடும்பக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிதைவு நிலையாகும். இதற்கு ஓர் முக்கிய காரணமாக வன்னிப் பகுதியில் தற்போது மேலோங்கிச் செல்கின்ற சட்ட விரோத மதுபானமான கசிப்பு உற்பத்தியாகும். தினமும் கசிப்புத் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வருவது இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். குடும்பங்களில் தோன்றியுள்ள பொருளாதார சிக்கலை காரணம் கூறி கசிப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் சிலரால் நாளாந்தம் வேறு பல குடும்பங்களில் வீட்டு வன்முறை மற்றும் உறவுகளுக்குள்ளான பிளவுகள் தோன்றக் காரணமாகின்றது. ஏனைய மதுபானங்களின் விலை உயர்வு மற்றும் உடனடியாகப் பணம் கொடுத்துப் பெற வேண்டியநிலை உள்ளதால் இச்சட்ட விரோத மதுவான கசிப்பை பலர் நாடுவதாக அறிய முடிகின்றது. நாளாந்தம் பொலிசார் கசிப்பு உற்பத்தி தொடர்பான வழக்குகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வருகின்ற போதிலும் கசிப்பு உற்பத்தி இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான மதுப்பாவனை காரணமாக ஏற்கனவே சிக்கல்களை அனுபவித்துக் கொண்டிருந்த குடும்ப உறவுகளில் பிரிவினைகள் தோன்றுவதும் அதனால் பெண்கள் தனித்துத் தம் பிள்ளைகளோடு வாழ வேண்டியுள்ள நிலை தற்காலத்தில் பெண்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
அநேகமாக போர் முடிவடைந்த பகுதிகளில் வாழ்வாதரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமலும் அதற்கான வருவாயைப் பெறும் பொருட்டு சிறுதொழில்கள் மேற்கொள்ள முடியாதபோது வேறு வழியின்றி வலுக்கட்டாயமாக உடலையும் மனதையும் வருத்தி செயற்படும் நிலையானது காணப்படுகின்றது. அவ்வாறான வேளைகளில் மேற்குறிப்பிட்டது போன்று சட்டரீதியற்ற வகையில் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் மீளத்திரும்பியோர் இடத்தில் தோன்றுகின்றமையானது அவதானத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இவற்றினது வளர்ச்சி நிலையானது நாட் செல்லச் செல்ல பாரதூரமான சமூகச் சிக்கலை மீளத்திரும்பியோரிடத்தில் தோற்றுவிக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
குடும்ப அமைப்பில் அதிகம் காணப்படுகின்ற மற்றோர் முக்கிய விடயம் போர்க்காலத்தில் திருமணம் செய்து கொண்டு அதனைச் சட்ட ரீதியில் பதிவு செய்யாது வாழ்ந்த இளம் பெண்கள் இன்று தமது கணவனால் கைவிடப்பட்டதோடு தமக்குத் திருமணம் நடந்த சூழலை சட்டபூர்வமான முறையில் நிரூபிக்க முடியாமலும் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் 18 வயதிற்குக் குறைந்த வயதில் திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான இளவயதுத் திருமணங்களின் பதிவுகள் சரிவர மேற்கொள்ளப்படாத காரணத்தால் அவர்களுக்கும் பிறந்த பிள்ளைகளுக்குக் கூட பிறப்பு சான்றிதல்கள் பெறமுடியாத சிக்கலில் பலர் வாழ்கின்றனர்.
இளவயதில் திருமணம் செய்த குடும்பங்களில் சரியான புரிந்துணர்வு இன்மை, விட்டுக்கொடுப்பின்மை, குடும்பப் பொறுப்பினை உணராமை போன்றன காரணமாகவும் பெரும்பாலான பிரச்சினைகள் தோன்றுகின்றன. இவற்றின் பெறுபேறுகளாக கடைசியில் பெண்கள் தனித்துவிடப்படுவதோடும் கணவன் வேறு பெண்ணைத் தேடிச் செல்வதோடும் முடிகின்றது. இறுதியில் தாயும் குழந்தையும் தனித்து வாழ்கின்ற துயரம் ஏற்படுகின்றது. ஆகவே போர், இடப்பெயர்வு, மீளத்திரும்பல், போருக்குப் பின்னரான வாழ்க்கை என ஒவ்வோர் படிநிலையிலும் குடும்பங்களில் பெண்கள் மீதான வறுமைச்சுமை, வன்முறை, எதிர்காலந் தொடர்பான சவால்கள், மன உளைச்சல் போன்றவாறான பன்மைச் சுமைகள் மாறி மாறி தொடர்ந்தவாறாக உள்ளதோடு அவற்றிற்கான தீர்வுகள் அல்லது தேவைகள் நிறைவேற்றப்படாமலே காலம் கடத்திச் செல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.