தர்சிக்காவின் கொலைக்கு எதிராக ஒருமித்துக் குரல் கொடுப்போம்.
– பெண்கள் சந்திப்பு
வேலணை வைத்தியசாலையில் குடும்ப சுகாதார உத்தியோகத்தராகப் பணிபுரிந்து வந்த தர்சிக்கா சரவணை என்பவர் யூலை 10 ம் திகதியன்று தூக்கிலிடப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இவரது கொலைக்கு அவ்வைத்தியசாலைக்கு பொறுப்பாக கடமையாற்றிய சிங்கள வைத்தியரான டாக்டர். பிரியந்த செனிவிரத்ன காரணமென நம்பப்படுகின்றது.. இவ்வைத்தியர் தர்சிக்கா மீது அதிகளவு ஈடுபாடு காட்டிவந்தார். அவருக்கு அவ்வப்போது பரிசுகள் வழங்கியபோதும் தர்சிக்கா அவற்றைப் பெற மறுத்துள்ளார். இறுதியாக ஒரு விலையுயர்ந்ந சேலையோன்றை தரிசிக்காவிற்கு அவ்வ்தியர் பரிசலித்தார். தர்சிக்கா அதைப்பெற்றுக் கொண்டபோதும் அதை உடுத்தவில்லை. அதற்காக அவ்வைத்தியர் தர்சிக்காவை தாறுமாறாகத் திட்டியுள்ளார். இத்தினத்தன்று அவ்வைத்தியசாலையில் பணிபுரியும் வேறொரு உத்தியோகஸ்தர் விடுமுறை எடுத்திருந்ததால் தர்சிக்கா அவருக்காக இரவுவேலையில் ஈடுபட்டிருந்தார். மறுநாள் காலை தூக்கிலிடப்பட்ட நிலையில் தர்சிக்காவின் சடலம் மீட்டெடுக்கப்பட்டது. வைத்திய அறிக்கைகளின் படி அது தற்கொலையென நிருபிக்கப்பட்டபின் அவரது சடலம் புதைக்கப்பட்டது. தர்சிக்காவின் பெற்றோரின் முறைப்பாட்டின் பெயரில் அவரது சடலத்தை மீள்பரிசோதணைக்காக கொழும்பிற்கு அனுப்புமாறு நீதிபதி வசந்தசேனன் கட்டளையிட்டுருந்தார்.. அவரது உடலிருந்து அவரது பாலியல் உறுப்புகள் அகற்றப்பட்டிருந்தன. பிரேத பரிசோதனையில் ஈடுபட்டவர்கள் கைதிசெய்யப்பட்டபின், அகற்றப்பட்ட உறுப்புகள் யூலை 28 ம் திகதி கொட்டடி மாயனத்தில் கண்டெடுக்கப்பட்டு கொழும்பிற்கு அனுப்பப்படடுள்ளது. அகற்றப்பட்ட உறுப்புகள் சிதறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்தின் பெயரில் விசாரனைக்கு அழைக்கப்பட்ட டாக்டர். பிரியந்த செனவிரத்ன யூலை 16ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கிலுமுள்ள பெண்கள் தமது நாளாந்த வாழ்வில் பல்வேறு ஒடுக்குமுறைக்களிற்கு முகம் கொடுக்கிறார்கள். பெண்களிற்குகெதிரான வன்முறை வடிவங்களில் பாலியல் வன்முறை என்பது அவர்கள் மீது இலகுவில் பிரயோகிக்கப்படும் ஒன்றாகவுள்ளது .யுத்தக்காலங்களிலும் அன்றாட வாழ்விலும் பெண்ணின் மீது ஆணாதிக்கத்தின் அத்துமீறலாக பாலியல் வன்முiறையமைகின்றது. பெண்கள் பெரும்பாலும் இராணுவத்தினரால், பொலிஸினரால், வேலைத்தளங்களில் மேலதிகாரிகளால் அல்லது அந்நிய ஆண்களினால் பாலியல் பலாத்காரத்திற்கு ஈடுபடுத்தப்படுகிறார்கள். குழந்தைகளினதும் பெண்களினதும் பாதுகாப்பு அலுவலகத்தின் ( ( Bureau for the protection of children and Women அறிக்கைகளின்படி 2009ம் ஆண்டு பெண்கள் மீதான 714 பாரிய வன்முறைச் சம்பவங்களும், 2,391 சிறிய வன்முறைச்சம்பவங்களும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 2009 ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 175 பாலியல்வன்முறைகள் நடந்துள்ளது.
இவ்வருடம் யூன்மாதம் 30ம் திகதி விஸ்வமடுவில்; 22 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரும் இன்னொரு இளம் தாயும் இராணுவத்தினாரால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பதிவு செய்யப்பட்டவைகள் தவிர்ந்து முகாம்களிலும் நான்கு சுவர்களிற்குள்ளும் பெண்கள் நாளாந்தம் பாலியல் பலாத்காரத்திற்குட்படுகிறார்கள்.
–
– நாம் ஒன்றாக இணைந்து தர்சிக்காவின் கொலையை கண்டிப்போம்.
– குற்றவாளி தண்டிக்கப்படுவதற்கு அழுத்தங்கள் கொடுப்போம்.
– தொடர்ந்தும் இத்தகைய சம்பவங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவோம்.