ஓர் மடல்

மூலம்மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல (சிங்கள மொழியில்)

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

* நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளிகிராமிய ஆடல், பாடல்வகைகள்

பின்குறிப்பு பெரும்பாலானோர் அறிந்திராத மிகவும் அரிதான அனுபவமொன்று இக்கவிதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நகரத்தின் நாட்டியக் குழுவொன்றில் தனது நடிப்புத் திறனை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் இப் பெண் அவளது அன்னைக்கு அனுப்பும் கடிதப் பிரதியொன்றினூடாக அவளது நிஜ வாழ்வு வெளிப்படுகிறது. தொலைத் தொடர்பு சாதனங்களை அலங்கரித்தவாறு பளிச்சிடும் வாழ்வுகளின் பின்னணியில் புதைந்துள்ள அந்தகாரத்தின் நிஜம் மிகவும் முரண்நகையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி

இங்கும் இல்லாமலில்லை – அம்மா

ஆனாலும் அவற்றை மாற்றி மாற்றி

புதிது புதிதாய்ச் செய்கிறார்கள்


விழாக்களும் இப்பொழுது அதிகமென்பதால்

காட்சிகள் தொடர்ந்தபடி உள்ளன

உறக்கமேயில்லாமல் இரவு முழுதும் ஆடுகிறேன்

காலையில் ஒத்திகைக்கு ஓடுகிறேன்


உடலழகு தொலைந்துவிடுமென்று

இரவுணவையும் தருகிறார்களில்லை

இளம்பெண்கள் பத்துப் பேர் நாம்

அவர்களறியாமல் தேனீர் தயாரித்துக் கொள்கிறோம்


பாடல் ஒளிப்பதிவுகளுக்குப் போனால்

ஆயிரம் ரூபாயளவில் கிடைக்கும்

மேலதிகமாக ஆனாலும்

மூட்டுக்களிலும் முதுகெழும்பிலும் வலியெடுக்கும்


புதிய நடனமொன்றின் மெல்லிய ஆடையில்

கவரப்பட்ட செல்வந்தனொருவன்

பரிசுகள் தந்திட அழைக்கிறான்

நான் முடியாதென்றே மறுத்து வருகிறேன்


விழா நாட்களில் எனக்கு எனது

அம்மா சொன்னவை நினைவில் எழுகின்றன

உண்மைதான் சில விழிகளில்

பெரும் அந்நியத்தைக் காண்கிறேன்


ஒன்பது நாட்களுக்குக் காட்சிகள் தொடர்ந்திருக்க

நேற்றென்னை அந்த வருத்தம் பீடித்தது

ஆனாலும் அதனைக் கவனத்தில் கொள்ளாமல்

வீட்டைப் பற்றி எண்ணி எண்ணியே ஆடினேன்


அம்மாவின் மருந்துகளையும்

அப்பாவின் திதிக்கான பொருட்களையும்

வாங்கத் தேவையான பணத்தை இதோ அம்மா

இந்தக் கடிதத்துடனேயே அனுப்பியிருக்கிறேன்


சிகரங்களேறி உலகையே வென்றெடுத்து

எப்பொழுதேனும் மகள் வருவாளென

வேலிக் கம்பில் கைகளை வைத்தபடி அம்மா

பார்த்திருப்பது எனக்குத் தெரிகிறது



















Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *