வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு.வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி வடக்கு கிழக்கில் செயற்பட்டுவரும் பல்வேறு பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்தோர் இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டனர்.கவனயீர்ப்பு போராட்டத்தின் முடிவில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் கையளித்திருந்தனர்.அண்மையில் இலங்கையில் அட்டுலுகமவை சார்ந்த 09 வயது சிறுமி மனிதத்தன்மையற்று கொலை செய்யப்பட்ட சம்பவமானது அனைத்து மக்களையும், முழு நாட்டையும் ஆட்டி வைத்திருக்கின்றது.இவ்வாறான வன்முறைகளிலிருந்து சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றுவது, பாதுகாப்பது சமூகத்தினதும் அரசினதும் கடமையாகும்.

இலங்கையில் சட்ட ஆட்சி முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதனை சிறுமியின் கொலைச் சம்பவம் காட்டி நிற்கின்றது. இலங்கையில் சட்டங்கள் இருந்தும் லஞ்சம் கொடுத்தல் மற்றும் பாரபட்சமான போக்கு என்பன குற்றவாளிகளை தப்பிக்க வைத்து பாதுகாக்கப்படும் நடைமுறை காணப்படுகின்றது. இதனால் குற்றங்கள் தொடர்ந்தும் இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன. குற்றவாளிகளும் தப்பித்துக்கொண்டே இருகின்றனர்.சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கும், வன்கொடுமைகளுக்கும் பொறுப்பான குற்றவாளிகளுக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகுவது குற்றவாளிகளை வலுப்படுத்துவதாகவே அமையும், அத்துடன் குற்றம் நிறைந்த ஒரு சமூகத்தினை மேலும் வலுவுள்ளதாக்கும்.எனவே சட்டத்தரணிகள் நியாயத்தின் பக்கமே இணைய வேண்டும் எனக் கோருகின்றோம்.

மேலும் சிறுமியின் கொடூரமான கொலையின் உண்மைத் தன்மை வெளிக்கொணரப்பட வேண்டும்.இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நடந்த வன்முறைகள் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நீதிமன்றில் பல வருடங்களாக நிலுவையில் இருந்து, வருகின்றன. எனவே நிலுவையில் உள்ள வழக்குகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக குற்றம் நடந்து 03 மாத காலத்திற்குள் தீர்வு வழங்கும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைய வேண்டும்,அது மட்டுமன்றி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான விசேட நீதி மன்ற விசாரணை முறைமைகள் இலங்கையில் நடைமுறைக்கு வர வேண்டும் எனக் கோருகின்றோம். சிறுமியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் குடும்பத்தாருக்கும் எமது அனுதாபங்களையும், ஆறுதல்களையும் இந்நாளில் தெரிவித்துக் கொள்வதாக கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்த வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியம் தனது மகஜரில் குறிப்பிட்டுள்ளது.ஜனநாயக இளைஞர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களும் இலங்கையில் நடைபெறுகின்ற சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு நீதி கோரிய பேரணியில் கலந்து கொண்டோம்.நன்றிகள்.ஊடகப்பிரிவுஜனநாயக இளைஞர் அமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *