இதழியல் அறிமுகம் –
மாதவி சிவலீலன் தமிழின் ஆதி இலக்கியம் செய்யுள்களும் கவிதைகளும் தானாம். தொல்காப்பியம், புறநாநூறு, நாலடியார், நளவெண்பா, திருக்குறள், தேவாரம், திருவாசகம் என்று எல்லாம் கவிதைகளின் இருப்பிடம் தான். தமிழ் என்றாலே கவிதை தான். கவிதைக்கு தமிழ் அழகு.கவிதையில் காதலின் கனிவை, விஞ்ஞானத்தின் விந்தையை அரசியலின் மாயாஜாலங்களின் பின்னால் உள்ள மெய்ப்பொருளை போரின் துயரத்தை, இயலாமையின் ஆதங்கத்தை, கோபத்தின் சீற்றத்தை என்று எதை வேண்டுமானாலும் சொற்ப வரிகளில் நுட்பமாகவும் மனதில் ஆழத்தில் படியும்படியும் படிமங்கள், உவமான உவமேயங்கள் மூலம் பூடகமாக சொல்லிவிட்டு செல்லலாம். கவிதைகளை எளிமையாக சொல்லாவிட்டால் அதன் நுண் அரசியலை அறிய கவிதை வாசிக்க பயிற்றுவிக்கப்பட்ட சிலருக்கு தான் சாத்தியம்.
இன்றைக்கு எழுதப்படும் சில நவீன கவிதைகள் யாராலும் புரிந்துகொள்ளப்படா கனதியான படிமங்களின் அடுக்குகளால் கட்டமைக்கப்படுகிறது, இதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கருத்துருவாக்கம் செய்து கொள்ளலாம், கவிஞ்ஞர்கள் கூட, “நீங்கள் புரிந்து கொள்வது போல் அந்த கவிதை கருத்து இல்லை ” என்று மறுக்கலாம், படிமங்கள் பின்னால் ஒழிந்து கொண்டு பச்சோந்திதனமாக கருத்து நாடகம் கூட ஆடலாம்; கவிதைகளின் அழகில் பின்னால் இப்படியான அபாயங்களும் உண்டு. புரியா புதிர் போல கட்டமைக்கப்பட்ட கவிதைகளில் நேர்மை குறைபாடு உள்ளதோ என்று கூட சில நேரங்களில் எண்ணத்தோன்றுகிறது. மாதவி சிவலீலனின் கவிதைகள் நேர்மையானவை, சமூக சிந்தனைகளை விஸ்தரிப்பவை மற்றும்அவரின் சொல் வீச்சின் வீரியத்தில் அத்தனை நேர்மையும் எளிமையும் கருத்தின் கனதியும் உண்டு. கவிதை வாசிக்க ஒரு முகமான தியான மனம் ஒன்று வேண்டும்.
சத்தங்களுக்கு நடுவில் அவற்றை வாசித்து விட முடியாது, ஏனெனில் கவிதைகள் பிறக்கும் மனங்களில் அது ஊற்றெடுக்கும் சிந்தனை மனமும் அப்பேர்ப்பட்ட வெளிகளாகத்தான் இருக்க முடியும். மாதவி சிவலீலன் பங்கு கொள்ளும் தமிழ் மொழி , கலை கலாச்சாரம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை பத்து வருடங்களுக்கு மேலாக தீபம் மற்றும் ஐபிசி தொலைக்காட்சியிலும் பார்த்து வருகிறேன், அத்தோடு இவர் அளித்த பல காத்திரமான இலக்கிய விமர்சகர்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன், மாதவி சிவலீலனை ஒரு கவிஞ்ஞராக இந்த கவிதை தொகுப்பு மூலம் காணக்கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி, தன்னை முன்நிலைப்படுத்தி எழுதாமல் சமூக விழிப்புணர்வுடன் எழுதிய இந்த கவிதைத்தொகுப்பை மிக ஆர்வத்துடன்படித்தேன். மாதவி சிவலீலனின் இந்த கவிதைத்தொகுப்பு மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன வாழ்தல்வலி அவதிவாழ்தலில் இரண்டாவது கவிதையாக வாழ்ந்த வீட்டின் தடங்களையும் அதன் சுவடுகளையும் ஒரு மயான அமைதிக்குள் தேடிப்பார்க்கிறார் கவிஞ்ஞர். அந்த கவிதையின் தலைப்பு ” வீடே என் வீடே”. வெறுமையும் ஏமாற்றமும் தோய்ந்து அக்கவிதையில் சில வரிகள் இப்படி சோர்ந்து கண்ணீர்த்துளியாய் உதிர்கின்றன. ” நரம்பறுந்த வீணை தடவுதல் ஒத்ததுவாய் மெல்ல மிக மெல்ல மொட்டைச் சுவர் தடவி நிலை குத்தி நிற்கின்றேன்”.
போர் தந்த காயங்களின் வலிக்கு ஒத்ததாய் உள்ளது வாழ்ந்த தடங்களை இழந்த வீடுகள். வாழ்ந்த வீடுகளின் சுவடுகள் எதுவும் இல்லாமல் எலும்புக்கூடுகளாயும் சாம்பல் மேடாய் போய்விட்ட வீடுகளைப்பார்க்கையில் அத்தனை துயரம் கொள்கிறார் அகதி மனிதராய் அலையும் தமிழர்கள். மனிதர்களின் அசையா சொத்தில் ஒன்று அவர்கள் காவித்திரியும் பிறந்து வளர்ந்த வாழ்ந்த வீட்டின் ஞாபகங்கள். சிறு பராயத்தின் நினைவுகள். போரினால் அவசர அவசரமாக பிறந்த வீட்டிற்கும் ஊருக்கும் பிரியாவிடை சொல்ல அவகாசம் கிடைக்காமல் புலம் பெயர்ந்த மனிதர்களுக்கு பிறந்து வளர்ந்த வீட்டின் ஞாபகங்களைத்தடவிப்பார்ப்பது என்பது பெரும் அலாதி ஆறுதலைக்கொடுக்கும் ஒரு விடயம். வேர்கள் இழந்த மனிதராக இன்று நாம் ஆனதன் சோகத்தை இந்த கவிதையில் தன் சொற்பலம் அத்தனையும் கொண்டு அழுத்தி சொல்லியிருக்கிறார் மாதவி சிவசீலன்.
” அழுது அழுது வாழ்விழந்த பெண் போல எந்தன் மனை என் கனவுகள் காவித் திரிந்த காற்று உலாவிய பரப்பெல்லாம் துர்நாற்றத்தின் வீச்சு” வலி என்ற தொகுதியில் அனைத்து கவிதைகளும் பெண் இனத்தின் மீது இந்த உலகம் அவிழ்த்து விட்டிருக்க கூடிய கொடுமைகள் பற்றிய உள்ளக்குமுறல். அதில் முக்கியமாக ” இசையே என் பிரியமே என்ற கவிதை”. ” கோரமாய் நீ மாண்ட நிலை கண்டு இரத்தவாடை தனைக் கொண்டு புத்தனும் அவன் வழிவந்தோரும் வெட்கி தலை கவிழ்ந்தாரோ” என்று ஒரு அகோரக்கொலையைப்பார்த்ததில், சக மனுஷியாய் அதை அனுபவித்த உணர்வில் நிலை குலைந்து ஆறாத ரணத்தை ஒரு ஒப்பாரிப்பாடலாய் ஒப்புவித்து ஓய்த்திருக்கிறார் மாதவி என்ற சக பெண்; இது ஆயிரமாயிரம் மனங்களின் கூட்டு ஒப்பாரி தான்; இதன் மூலம் குற்றவாளிகள் நிம்மதியில்லா இரவுகள் மேலும் அலைவுறுமோ இல்லை அமைதி கொள்ளுமோ ? அவர்கள் மட்டும் தான் அறிவர். ஆனால் இந்த ஒப்பாரி இசை பல யுகம் யுகமாக இந்த பிரபஞ்சத்தை பிரியாமல் இது போன்ற கவிஞ்ஞர்களின் வரிகள் மூலம் ஒலிக்கத்தான் போகிறது. இந்த வரலாற்று துரோகத்தை இனி வரப்போகும் அவர்கள் வழி வந்த நூறு சந்ததிகள் குற்றம் இழைத்தவர்களாய் குறுகி மனம் சோர்ந்து மாளட்டும் என்பது போலத்தான் இக்கவிதை சாபமிடுகிறது.
அவதி என்ற தொகுதியில் “அவதியுறும் இரவுகள்” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கவிதையை கண்ணீரால் எழுதியிருக்கிறார் கவிஞர் மாதவி; இதை வாசிக்கையில் பாறங்கல் ஒன்று தொண்டையில் அடைத்து கொள்ளும் உணர்வு. முள்ளிவாய்க்கால் துயரை அதை கையாலாகாத்தனத்தனத்துடன் வேடிக்கை பார்த்து வெந்து செத்த உணர்வை சொல்கிறது . அதோடு நில்லாமல் இந்தக்கவிதை மாய்ந்து மாய்ந்து அத்தனை துரோகிகளையும் சாபமிட்டு தூற்றி ஓய்கிறது”எம் இரவுகள் பொல்லாதவைஉங்களுக்கு மட்டுமல்லஎங்களுக்கும் இரவுகள் பொல்லாதவைஅவதியுறட்டும் அவதியுறட்டும்என் இரவுகள் அவதியுறட்டும்என் மண் எனக்காக ஆகுமட்டும்என் இரவுகள் அவதியுறட்டும்”வலி என்ற தொகுதியில் ” முள்ளிவாய்க்கால்” என்று தலைப்பிட்ட கவிதைமுள்ளிவாய்க்கால் என் நெஞ்சில் முள்ளாக……என்று தொடங்கி இப்படி முடிகிறது” மனம் பிறழ்ந்து தடுமாறும் கண்களோடும் உறுப்பிழந்து சிதைவடைந்த உடலோடும் சொத்திழந்த வறியவராய் உறவிழந்து கையறுந்து ஏதிலியாய் எம் மக்கள்அள்ளுண்டு அழுத நிலை சிங்களத்திற்கு வெற்றி விழா தந்ததுவோஎம் குருதியில் வெற்றிக் கனியுண்டனரோ நூற்றாண்டு கேவலம் இது”! உணர்ச்சிபூர்வமான நேர்மையான சமூக பிரக்ஞையுள்ள கவிதைகளை எழுதும் மாதவி சிவலீலனுக்கு மனம் கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்