தகனம் -ஸர்மிளா ஸெய்யித்

சிறுகதை – நன்றி நீலம் பெப்ரவரி இதழ்


வாப்பாவின் வலது கால் பாதத்தில்  ஆணி ஏறியதிலிருந்து தொடங்கிய நடுக்கம். ஆற்றின் மேற்பரப்பில் மிதக்கும் நீர்வட்டம்போல வீட்டில் உள்ள எல்லார் மனத்திலும் ஒரு பதகளிப்பு. காலில் அணிந்திருந்த பாதணியவையே குத்திக் கிழித்துத் தோலைப் பதம் பார்த்திருந்தது ஆணி. வாப்பா வலி பொறுக்காமல் முனகிக் கொண்டிருந்தார். வாப்பாவின் முனகலையும் மீறி ஒலித்தது மற்ற எல்லாரது புலம்பல்களும். எவ்வளவு சொல்லியும் கேளாமல் வெளியேறிப் போய் காலில் ஆணியைக் குத்திக் கொண்டு வந்துவிட்டதாகப் புலம்பும் உம்மாவின் குரல் கூரையைக் கிழித்துக் கொண்டிருந்தது.

”எல்லாம் அந்த நரகல் பழக்கந்தான் காரணம். ஒரு நாள் சிகரட் இல்லாட்டி என்ன ஆயிடப்போகுது ஹா….”

”குமருப் புள்ளைகள் குழந்தைப் புள்ளைகள் இருக்கிறதைப் பத்திக் கொஞ்சமாவது யோசனை இருக்கா இந்த மனுசனுக்கு…. யாரைப் பத்தியும் ஒரு அக்கறையுமில்ல… தான் மட்டும் சந்தோசமாக இருக்கணும்”

”இப்ப எதுக்குக் கிடந்து கத்துறாய்… நானே நோவு தாங்கேலாமல் கிடக்கேன்….”

”அவ்வளவு சொன்னோமே…. கேட்டீங்களா… பொம்பிளை சொல்லிக் கேட்கிறதா என்டுதானே திமிறாப் போனீங்க…”

”சும்மா போடாப்பா… எவ்வளவு நாளாத்தான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்கிறது….”

”ஓ… இந்தக் கொஞ்ச நாள் வீட்டுக்குள்ள அடைஞ்சி கெடக்கிறதப் பத்திப் பேசறீங்களே… நாங்க வாழ்நாள் முழுக்கவும் அடைஞ்சிதானே கெடக்கிறம்…”

”நீ பொம்பிளை… ஆம்பிளை என்னையும் அப்படி கிடக்கச் சொல்றியோ…”

”ஆ… கொரோனா ஆம்பிளையா பொம்பிளையா என்டு பார்த்துத்தானே தாக்குது….”

”இவளொருத்தி நேரம் காலம் தெரியாமக் கத்துறாள்…. ஆ” என்றபடி கால்களைத் தரையில் ஊன்ற முடியாமல் நொண்டிக்கொண்டு அறைக்குள் போய் மறைந்தார் வாப்பா.

மாடி வீட்டு மோகத்தில் எங்கள் ஊர் மக்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள். தெருவுக்குத் தெரு அங்கங்கு காங்ரீட் பலகைகளைக் கழற்றிக் குவித்துப் கிடப்பது இப்போதெல்லாம் சாதாரண காட்சிகள். நகர சபை குப்பை அள்ளும் மெசின்களும் வாரத்திற்கு ஒன்றோ இரண்டு முறைகள் தான் வரும். அதுவரைக்கும் இப்படித்தான் யார் கால்களையாவது குத்திப் பதம் பார்த்தபடி றோட்டுக்களில் குவிந்து கிடக்கும் காங்ரீட்டிலிருந்து கழற்றிய பலகைகள்.

ஆணி குத்தியதுமே மருத்துவமனைக்குப் போய் மருந்துகட்டிக் கொண்டுதான் வீட்டுக்கு வந்தார்.  காயத்துடன் வீட்டுக்கு வந்தால் எல்லாரும் அவரைக் குதறக்கூடும் என ஊகித்திருப்பார். நான்காயிரத்து ஐநூறு ரூபா செலவில் நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் பாதணியை அவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறோம். முன்பொருமுறை வலது காலின் பெருவிரலில் ஒரு சிறு காயம். எப்படி என்று அவருக்கே தெரியாதபடியாக ஏற்பட்டு வெடித்த மீன் குஞ்சைப் போலக் கால் விரலை  அழுகச் செய்துவிட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கால் விரலை வெட்டி எறியப்போவதாக அறிவித்தார்கள். பதறிடியத்துக் கொண்டு அவரை அங்கிருந்து டிஸ்சார்ஜ் பண்ணிக் கொழும்புக்கு கூட்டிச்சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்துக் கால்நகத்தைக்கூட வெட்டி நீக்காதபடி காப்பாற்றினோம். அரச மருத்துமனைகளிலும் இதேபோன்ற நோயாளிகளின் உச்சபட்ச நலன்களை மதிக்கும் ஒரு சேவையைத் தந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசிக்கச் செய்த தருணங்கள் அவை. சுமார் இரண்டு மாத சம்பளத்தினை முழுமையாக வாப்பாவின் காலுக்குச் சிகிக்கையளிக்கப் பயன்படுத்தியிருந்தேன். இதே சிகிச்சையை அரச மருத்துவமனைகளில் தருவதற்கான அத்தனை வசதிகளும் இருக்கின்றன. நல்ல திறமையான மருத்துவர்களும் உள்ளார்கள். ஆனாலும் தனியார் மருத்துவமனைகள் தானே மருத்துவர்களின் பாக்கட்டுக்களை நிரம்பி வழிய வைக்கின்றன. வங்கிக் கணக்குகளை நிரப்பி சிறிய பெரிய முதலீடுகள் செய்வதற்கான முழுப்பணத்தையும் தருகின்றன.  ஏழை எளிய மக்கள் இறைவனுக்கு அடுத்தபடியாக மருத்துவர்களில்தான் நம்பிக்கை வைக்கிறார்கள்.

 நீரிழிவு நோயாளர்களுக்கு உண்டாகும் காயங்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கும் அந்த மருத்துவமனையில் தான் தற்காப்புப் பாதணிகளை வாங்கித்தந்ததுவும். கொஞ்சம்கூடச் சுய அக்கறையில்லாத மனிதராக இருப்பதில் அப்படியென்ன  திருப்தியோ, அதனைப் போட்டுக்கொள்வதில் அவர் ஆர்வமே காட்டவில்லை. சாதாரண சப்பாத்தைக் கிழித்துக்கொண்டு ஆணி காலைக் குத்தியதுபோன்று அந்தப் பாதுகாப்பான பாதணியை அணிந்திருந்தால் குத்தியிருக்காது.

”அவருக்கு யாரைப் பற்றியும் அக்கறையில்லை” உம்மா அடிக்கடி சொல்கின்ற குற்றச்சாட்டை விட அவருக்கே அவரில் அக்கறையில்லை என்ற குற்றச்சாட்டுத்தான் பொருத்தம் என்பதையே வாப்பா பலமுறை நிரூபித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவல் பற்றிய அறிவித்தல்கள் எப்போது வரத்தொடங்கியதோ அப்போதிருந்தே வீட்டுக்குள் ஓயாத சண்டை தான். வெளியே போகவேண்டாம் என்று உம்மா சொல்வதும், சென்றுவிட்டால் வாசலிலேயே நின்று குளித்து, உடுப்புகளை மாற்றிக்கொள்ளக் கேட்கும்போது வாப்பா மறுப்பதும் என்று ஒரே அமளி. முகக்கவசம், கைகளைச் சுத்தம் செய்வதற்கான சானீட்டைஷர் இதெல்லாம் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு உபயோகிக்காமலேயே வீடு திரும்பும் வாப்பாவைக் காணும்போது உம்மா எரிச்சலின் உச்சத்திற்குப் போனார்.

வயது அறுபத்தைந்து தாண்டினாலும் பிடிவாதம் குறைந்தபாடில்லை. வாழ்ந்து கெட்ட மனிதர் என்ற பெயரைச் சம்பாதித்தது தவிர அவர் சாதனைகள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதே உம்மாவின் வாப்பா பற்றிய அபிப்பிராயம்.

”உங்க வாப்பாட நல்ல காலம் அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். வேறு பொம்பிளை என்டால் எப்பயோ செருப்பால் அடித்துக் கடப்பால் துரத்தியிருப்பாள். அல்லாஹ்வுக்கும் கல்புக்கும் பயந்து பொறுத்துக் கிடந்தே காலம் ஓடிட்டு”

 அடிக்கடி இப்படிச் சொல்லிப் பெருமூச்சுவிடுகின்ற உம்மாவை பச்சாதாபத்தோடு பார்த்துக் கொண்டிருப்போம்.

வாப்பா கடுமையான உழைப்பாளி. மீன் வியாபாரம்தான் அவர் தொழில். ஒரு காலத்தில் கை நிறையச் சம்பாதித்தவர். தனக்குப் பிடித்த சௌகரியமான சொகுசு வாழ்க்கையையே வாழ்ந்தார். வீட்டைக் குடும்பத்தைப் பிள்ளைகளைக் கவனிக்கவில்லை என்று குற்றஞ்சொல்லிக் கொண்டேயிருப்பார் உம்மா. வாப்பாவுக்கு நண்பர்கள் அதிகம். நட்புக்காக எதுவும் செய்வார். உழைப்பில் பெரும்பகுதியை அவர் நண்பர்களுக்கே தந்தார். வாப்பா ஒரு எம்ஜிஆர் ரசிகர். எம்ஜிஆர் நடித்த படங்களை எல்லாவிதப் புதிய திரைகளிலும் ரசிக்க விரும்பி புதிய புதிய டீவிகள் சந்தைக்கு வரும்போது எப்பாடுபட்டாவது வாங்குவார். தர்மம், நியாயம் பற்றியெல்லாம் எம்ஜிஆர் பேசுகின்ற வசனங்கள் எல்லாம் அவருக்கு மனப்பாடம். எந்நேரமும் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களை ஒலிக்கவிட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார். எம்ஜிஆர் நடித்த படப் பாடல்கள் அடங்கிய ஒலிக்கோப்புகளை வாங்கிச் சேர்த்தார். எங்கள் ஊருக்கு முதன் முதலாக மின்சாரம் வந்தபோது, எங்கள் பகுதியில் நம்ம வீட்டில் தான் முதல் மின்குமிழ்கள் எரிந்தன என்பார் உம்மா. முதன் முதலில் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சி, முதன் முதலில் வர்ணத் தொலைக்காட்சி என்று வாப்பாவின் பொருள்முதல்வாத சாதனைகள் நீளும்.

இப்படி எல்லாமே முதன் முதலாகச் செய்து பார்க்கும் சாகச எண்ணம் கொண்ட வாப்பா உம்மா மனத்தில் முதலிடத்தைப் பிடிக்கத் தவறியேவிட்டார்.

 மாரடைப்பு உண்டாகி நோய்கள் பலவும் உடலுக்குள் குடியேறியபிறகு நாங்கள் யாரும் அவர் மீன் பெட்டியை ஏற்றிக் கொண்டு கடலுக்கும் சந்தைக்கும் சவாரி ஓடுவதை விரும்பவில்லை.  அவரது மருத்துவச் செலவுகள் எல்லாவற்றையும் பொறுப்பேற்றோம். கைச்செலவுக்குப் பணம் தந்தோம். என்ன செய்தும் அவர் திருப்தியடைந்தாரில்லை. ”எனக்கென்று நாலு காசு வேணும்” என்று சொல்லிக் கொண்டு தினமும் கடலுக்கும் மீன் சந்தைக்கும் போய் வந்தார். அவர் எவ்வளவு உழைக்கிறார், என்ன செய்கிறார் என்று உம்மாவோ நாங்களோ கேள்வி கேட்பதில்லை. அவரைக் கண்காணிப்பதோ கேள்வி கேட்பதோ அவருக்குப் பிடிக்காது.  ஆனால் மருந்து வாங்கவும் மருத்துவமனைக்குப் போகவும் எங்களிடம் தான் காசு கேட்பார்.

”ஏதோ அரசாங்க உத்தியோகத்தராட்டம் விடிஞ்சதும் எழும்பி ஓடுறீங்களே… ஆபிஸ் சாவி ஒங்களுக்கிட்டயோ”

ஒரு நாள் உம்மா இப்படிக் கேலியாகச் சொல்லப்போய் ஏரியாவுக்கே கேட்க பீறிட்டுக் கத்தினார் வாப்பா.  இந்த சம்பவத்திற்குப் பிறகு  வாப்பாவைக் குறித்து கிட்டத்தட்டப் பேசுவதையே நிறுத்திவிட்டிருந்தார், உம்மா.  

 கொரோனா சமூகத் தொற்று இடம்பெறுவதாக மீன்சந்தைகள் அனைத்தையும் மூடினார்கள்.  செய்திகளையும் அரசாங்க அறிவித்தல்களையும் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் வாப்பா பாட்டுக்கு வெளியே திரிந்து கொண்டிருந்தார். அவரது நண்பர்கள் இருவரைப் பிடித்துக் கொண்டுபோய் தனிமைப்படுத்தியிருப்பதை அறிந்தபோது உம்மா கடுமையாகச் செயற்பட்டுத்தான் வாப்பாவை வீட்டுக்குள் முடக்கிப்போட்டார்.

 ”இஞ்சப்பாருங்க… நீங்க இப்பிடியே தன்னிச்சையாச் சுத்தித் திரிந்தால் நானே பிஎச்ஐக்குக் கோல் பண்ணிச் சொல்லிருவேன்…” 

”வெளிய சுத்தித் திரிவதில் தான் மனச் சந்தோசம் இருக்குதென்டால், வீட்டுக்கே வராதீங்க… வெளியவே சுத்தித் திரிந்திட்டு, றோட்டில படுங்க”

இந்த வார்த்தைகள் எல்லாம் அவ்வளவு சுலபமாக உம்மா வாயிலிருந்து வந்துவிழுந்தன. வாப்பாவை இந்தளவு கட்டுப்படுத்தும் அதிகாரம் உம்மாவின் கைக்கு எப்படி வந்திருக்கும் என்கிற வியப்பில் அகலத் திறந்த கண்கள் இமைக்க மறந்தன.

எங்களுக்குத் தெரிந்து வாப்பாவை உம்மா வெறுத்தார். வாப்பாவுக்கு முதன் முறையாக மாரடைப்பு வந்தபோது, அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்வதற்காக தனது உழைப்பில் சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிப்போட்ட வீட்டை நகைகள் காணிகளை விற்கத் தயாராக இருந்தவர்தான் உம்மா. இந்த இடைவெளி எங்கிருந்து ஆரம்பித்தது என்பதற்கான ஒரு நேர்கோட்டைக் கண்டறிவது அவ்வளவு எளிதில்லை.  இதுவொரு வேரோடிய வெறுப்பு.

வாப்பாவின் விடாப்பிடியான கொள்கைகள் பிடிமானங்கள் பலவும் உம்மாவைத் தொந்தரவு செய்யக்கூடியவையாகவே இருந்தன.   நீரிழிவு, காலஸ்ட்ரால் நோய்கள் பாதிப்புள்ளவர்,வாப்பா. உப்பு, காரம், புளி, இனிப்பு இவை எல்லாவற்றையும்  கவனமாகச் சேர்த்துச் சமைக்கும் உணவு தனது சுய ஆரோக்கியத்திற்காகத்தான் என்பதைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் உப்பில்லை, புளியில்லை என்று சண்டைக்கு நிற்பார்.

”வேறொன்றுமில்லை…. ஆம்பிளைத் திமிர்” என்று முணுமுணுத்துக்கொண்டே மீண்டும் அந்தக் காற்று நுழையாத சமையலறைக்குள் புழுங்கி நின்று அவருக்காக மட்டும் உம்மா சமைத்துக் கொண்டிருப்பதைக் காண அவ்வளவு ஆத்திரம் வரும்.  சுடு தண்ணிகூட வைக்கத் தெரியாத வாப்பா எந்நேரமும் உம்மாவை வேலை சொல்லிக் கொண்டேயிருப்பார். அவர் உடல் நலத்திற்கு எதெல்லாம் கூடாதென்று மருத்துவர்கள் சொல்வார்களோ அதையெல்லாம் தின்றே ஆகணும் என்று பிடிவாதம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

”உனக்கென்ன,  மௌத்திலிருந்து என்னைக் காப்பாத்தவா ஏலும்… போறதுந்தான் போறம் நாவுக்குப் பிடிச்சதைத் தின்டுட்டுப் போக உடேன்”

”நீங்க போறதைப் பத்தி யாருக்கென்ன…. இங்க ஒருத்தரும் கட்டி ஆள வரல்லை… ஓரேயடியாப் போய்ட்டாப் பரவால்லை…. பாயோட பீயோட கிடந்து அழுந்தினா யாருக்குக் கஸ்ட்டம்….”

பழுத்த இலை நிலத்தைச் சேர்வதைப் போல உம்மாவின் சொற்கள் சர்வ நிச்சயமாக ஒலிக்கும். இந்தச் சொற்களுக்காக உம்மா சங்கடப்படவில்லை. இந்தச் சொற்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் பற்றிக்கூட உம்மா தெரிந்துகொள்ள விரும்பவில்லை. அவை உம்மாவுக்குள் இருந்த சொற்கள் தான். எப்போதாவது வெளியே கொட்டப்படுவதற்காகவே காத்திருந்த சொற்கள். இனி அவை திரும்பிச் செல்லாது. அவர்களுக்கு நடுவே உறுதியாக உட்கார்ந்து கொண்டிருந்தன இந்தச் சொற்கள்.   நாற்பது ஆண்டுகள் எப்படித்தான் இவர்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்கிறார்கள் என்று தோன்றுகின்ற ஆச்சரியமான தருணங்களில் அந்தக் கேள்வியை அவர்களிடமே கேட்டுவிடுவோம். உம்மா சலனமே இல்லாமால் சொல்லுகின்ற பதில் இதுதான்.

”குடும்ப வாழ்க்கை என்ன என்று தெரியுறதுக்குள்ளேயே ஒன்றுக்கு ரெண்டு புள்ளைகள் பிறந்திடுது… அதுக்குப் புறவு இந்த நாறிப்போன சமூகத்துக்காக அப்படியே போறதான்… இங்க எல்லாரும் அப்பிடித்தான்…”

நெடுங்காலமாக வாப்பாவை அவர் போக்கிலேயே விட்டுவிட்டுத் தானும் தன் பாடுமாக இருந்தே பழகிப்போனார் உம்மா. நல்ல ஆரோக்கியமாக ஒரு சமையல் செய்துவைத்தால் பூகம்பம் வெடிக்கும் என்று தெரிந்து, நல்லபடியாக எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழிந்துவிட்டுத் தேங்காய்ப்பாலில் மீன் சொதிவைத்தோ, கீரைகளைக்கூடச் சுண்டல் செய்யாமல் தேங்காப்பால்விட்டு ஆணம் காய்ச்சி வைத்தோ வாப்பா வாயை அடைத்துவிடப் பழகிவிட்டிருந்தார் உம்மா. தேக ஆரோக்கியம் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறைப்படமாட்டார், வாப்பா. நாக்கு ருசியில் மட்டுமே அக்கறைப்பட்டார். நாங்கள் அறிந்து வாப்பா எங்கேயும் விருந்துக்குப் போகமாட்டார். உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் வீடுகளில் கல்யாணம், விருந்து என்றாலும் முகத்தைக் காட்டிவிட்டு சாப்பாட்டுக்கு வீட்டுக்கே ஓடிவருவார்.  இதனால் உம்மாவும் கல்யாணம், விருந்துகளுக்கு செல்லமுடிவதில்லை.

உம்மாவும் வாப்பாவும் கலகலப்பாகப் பேசியோ ஒன்றாகச் சேர்ந்து ஒரு பயணம் போயோ நாங்கள் பார்த்ததில்லை. ஊரில் வாப்பா பெரும்பாலும் எல்லாருக்கும் பிடித்த மனிதர். வாக்குத் தவறாத நேர்மையான மனுஷன் என்று எல்லாரும் அவரை மெச்சினாலும், உம்மாவின் மனதை எந்த வகையிலும் கவர முடியாத ஒரு மனிதராகவே அவர் இருந்தார். உம்மாவின் விலகல் வாப்பாவை எந்த வகையிலும் வருத்தியதாகத் தெரிந்ததும் இல்லை.

கடைசித் தங்கைக்கு முப்பது வயதாகிறது. அவள் பிறந்த போதிருந்தே அவர்கள் தனித்தனி அறைகளில் தான் படுத்துக் கொள்கிறார்கள். இந்தச் சிக்கலான உறவு பற்றிப் பலவித குழப்பங்கள். உம்மா வெறும் ஒரு வேலைக்காரியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். சமையல்காரி, துணி துவைக்கிறவள், வீட்டைத் துப்புரவாக்குகிறவள் போன்ற காரியங்களை உம்மா எந்தவித அலுப்புச் சலிப்பும் இல்லாமல் தினமும் செய்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இதுதான் அவர் அன்றாடம் செய்கின்ற பணிகள். அவரது உடல், மனம், பொருள் எல்லாமே இப்படியே வாழப் பழகிவிட்ட ஒரு சக்கரம்போலச் சுழன்றுகொண்டிருக்கும். எங்களுக்கு அவர் மிகச் சிறந்த தாயாகத் தெரிந்தார். வாப்பாவில் இருக்கும் ஏமாற்றம் கோபம் அதிருப்தி போன்ற எதொன்றையும் எங்களில் திணிக்க முயன்றதாகக் கூட நாங்கள் உணர்ந்தது கிடையாது. இந்த ஒழுங்கிற்குள் இவ்வளவு சிறப்பாகத் தன்னை எப்படி உம்மா இணைத்துக் கொண்டிருப்பார் என்று வியப்பாக இருக்கும். உம்மாவின் இந்த நிர்வாகத் திறன் துணிகரம் நிரம்பியது. தனது வாழ்வின் சக்கரத்திலிருந்து மிகத் தெளிவாக வாப்பாவை ஓரங் கட்டிவைக்கும் சாகசத்தைக் கனகச்சிதமாகச் செய்கிறார் உம்மா. சமையல், உடைகள் கழுவுதல், ஒழுங்குபடுத்தல், அறையைக் கூட்டித் துப்புரவாக்குதல் என்று முறைப்பாடுகள் இல்லாமல் பாராட்டையோ கௌரவத்தையோ எதிர்பார்க்காமல் உம்மா செய்கின்ற வேலைகளைக் குறித்து வாப்பா ஒரு நாளும் அக்கறைப்பட்டவரோ மெச்சியவரோ இல்லை. இவை எல்லாம் எப்போது எந்நேரத்தில் நடக்கின்றன என்றுகூடத் தெரியாமல் வாப்பா தனியொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

உலக ஒழுங்கையெல்லாம் குழப்பிப் போட்டு விளையாடும் கொரோனா வைரஸ் எங்கள் வீட்டுக்குள்ளும் புகுந்து பில்டிங் ப்ளாக்ஸ் விளையாடத் தொடங்கியபோது உம்மாவின் கைகளில் வாப்பாவை அடக்கும் அங்குசமே வந்துவிட்டாற்போல ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது.

உம்மாவுக்கு வீசிங் பிரச்சினை. கொரோனா ஐம்பது வயது கடந்த முதியவர்களைத்தான் அதிகம் தாக்குகின்றது என்பதும், மூச்சுத் திணறல் உயிரைப் பறிக்கும் ஒரு விளைவாக இருப்பதாகச் சொல்லப்படுவதும் உம்மாவை பீதி கொள்ளச் செய்திருப்பவற்றில் முதன்மைக் காரணம்.  கொரோனா தொற்றினால் இறந்துபோகும் முஸ்லிம்கள் ஜனாசா கட்டாய எரிப்பு ஏற்படுத்தியிருக்கும் கலக்கங்கள்  இன்னொரு காரணம்.

”மரணம் என்பது விடுதலை. அப்படிப்பட்ட மரணத்திற்குப் பிறகு நம்மை எரித்தாலென்ன புதைத்தாலென்ன” தங்கை இப்படிக் கேட்டதும் உம்மா அழுதேவிட்டார்.

”ஒரு ஜனாசாவைப் பூப்போலத்தான் கையாளணும். சந்தனம் பன்னீர் நல்ல நறுமணம் கலந்த தண்ணீரால் பிறந்த குழந்தையைக் கழுவுவதுபோல மென்மையாகக் குளிப்பாட்டிக் கபனிட்டு, அந்த உடலின் இயல்பான சூடு ஆறுவதற்குள் அடக்கம் பண்றதுதான் நம்மட பண்பாடு. மையத்திற்கு ஒரு எறும்பு கடித்தாற்கூட வலிக்கும். உயிர் பிரிந்தாலும் அந்த உடலின் ஆத்மாவை வேதனைப்படுத்தாமல் சங்கையாக இந்த வாழ்விலிருந்து மறுமை வாழ்வுக்கு அனுப்பிவைக்கவேணும். நம்மட மார்க்க நம்பிக்கைப்படி நெருப்பினால் ஒருவரைச் சுடுவது தண்டனை. நரகத்தில் எந்நேரமும் நெருப்பு எரிந்து கொண்டிருக்குமாம். பாவம் செய்தவர்கள் அந்த நெருப்பில் கிடந்து அலறிக் கொண்டிருப்பார்களாம். அப்படிப்பட்ட தண்டனையை ஒரு ஜனாசாவுக்கு இந்தப் பூமியிலேயே தருவதென்பது மிகப்பெரிய கொடுமை. இந்தக் காலத்தில் எனக்கு மட்டுமில்ல… நம் யாருக்குமே மௌத்து வந்திடாமல் அல்லாஹ் காப்பாத்தணும்… இந்தக் கொடியவர்களின் பாவக் கரங்களில் அகப்பட்டுவிடாமல் கிருபை செய் யாரப்பே….”

உலகத்திலுள்ள அத்தனை நாடுகளும் கொரோனாவை சுகாதாரப் பிரச்சினையாகக் கருதி நிதானமாகக் கையாளும்போது நம்நாட்டில் மட்டும் இனவாதப் பிரச்சினையாகப் பார்ப்பதும் மக்கள் கலவரப்பட்டுப் போய் இருப்பதைப் பற்றியதுமான உரையாடல்கள் வீட்டுக்குள் சர்வசாதாரணமாக இடம்பெறத் தொடங்கின. எந்நேரமும் வீட்டுக்கு வெளியே இருப்பதையே சுதந்திரம் என்றும் தன்னை மகிழ்ச்சிப்படுத்தக் கூடியதென்றும் நம்பியிருந்த வாப்பாவும் மெல்ல மெல்ல எங்கள் உரையாடல்களில் இணைந்து கொள்ளத் தொடங்கினார். கொரோனா தொற்றாளர்கள் வீடுகளுக்கு இராணுவம் செல்கின்ற நடைமுறை எல்லாரையும் அச்சத்தில் பிடித்து வைத்திருப்பதையும் அது பற்றிய வேறு பல அரசியல் கதைகளையும் பேசிக் கொண்டிருந்தபோது வாப்பா சொன்னார்.

”கோத்தபாயவுக்கு ஓட்டுப்போட்ட பௌத்த சிங்களவர்களை சந்தோசப்படுத்தும் நரபலி தான் இது. மௌத்தாப் போன ஒருவரை மண்ணில் அடக்கம் செய்றதுதான் நம்மட பண்பாடு. முஸ்லிம்கள்ட கலாச்சார மத, உரிமையை இப்படிக் கடும்போக்குக் காட்டி அழிப்பதைப் பற்றி ஏனென்று கேட்கவும் நாதியற்ற ஒரு அநாதைச் சமூகம் தான் நாம இப்ப….”

”இருபது நாள் பச்சைப் புள்ளையைப் பத்த வச்சிருக்கானுகளே… மனமெல்லாம் பதறுது… பச்சப் பாலகனை எரித்த பாவம் சும்மா விடுமா….” 

உம்மாவும் வாப்பாவும் இப்படிப் பேசிக் கொண்டிருந்ததைக் காணுகையில் அவ்வளவு ஆறுதலாக இருந்தது. உம்மா தனக்கு இரவில் உறங்க முடியவில்லை என்று புகார் சொல்லிக் கொண்டிருந்தார். கொரோனா எப்போதுதான் நம்மை விடுவிக்குமோ என்று எங்கோ ஒரு திக்கை விறைக்கப் பார்த்தபடி சொன்னார்.

வீட்டுக்கு வெளியில் புறஉலக செய்திகளில் அவ்வளவு அச்சமும் பதட்டமும் குடிகொண்டிருக்கும் ஒரு காலத்தில் வீட்டுக்குள் உள்ளவர்களின் அக உலகில் தென்றல் உருவாகின்றது. மின்மினிப் பூச்சிகள் பறந்து திரியும் வெளிச்சத்தில் சொப்பனப் புன்னகைகள் இடம் மாறுவது நிகழ்கின்றது. வாழ்வின் விநோதங்களை யாரும் எந்த சூழலும் வரையறுக்க முடியாது போன்ற புரிபடாத எண்ணங்களுடன் நித்திரைக்குச் சென்றோம்.

அன்றிரவு, வீடே ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. வாதை நிரம்பிய குரலில் முனகியபடி தான் கதவருகில் நிற்பதை அவள் எப்படி அறிந்தாள் என்று ஆச்சரியப்படுவதற்கு முடியாதபடி வாப்பா எல்லையற்ற வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார்.

வாப்பாவுக்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்று தெரியாமலேயே துக்ககரமான பார்வையுடன் அரைத் தூக்கத்தில் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். உறங்கச் சென்றபோதிருந்த நம்பிக்கைகள் எல்லாம்  உதிர்ந்துவிட்டிருந்தன. அவரது சட்டையணியாத உடலும் முகமும் வியர்வையில் பூத்துப் போயிருந்தது. நெஞ்சைப் பிடித்தபடி முனகிக் கொண்டிருந்தார். வாப்பாவின் முனகல் சத்தம் மெல்ல மெல்லக் கூடியபோது பதறிப்போனோம்.

”ஹாஸ்பிடலுக்குப் போகலாம்” என்ற ஆலோசனையை உம்மாவும் வாப்பாவும் பதறியடித்துக் கொண்டு மறுத்தார்கள்.

”கொரோனாவே இல்லாமல் மௌத்தாப் போன முஸ்லிம்களிட ஜனாசாக்களையும் பத்தவைக்கிறாங்களாம்…”

ஹீனமான குரலில் வாப்பா சொன்னார்.

”வீட்டிலேயே மௌத்தாப் போனாலும் பிஎச்ஐயும் பொலிசும் வந்து மையித்தை எடுத்துப் போய்விடுவார்கள். இதுக்கெல்லாம் பயந்து நோயைக் குணப்படுத்தாமல் இருக்கலாமா…” என்றாள் தங்கை.

என்ன சொல்லியும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு வாப்பா இணங்கவில்லை. இடையிடேயே நுரைநுரையாக வாந்தியெடுக்கவும் ஆரம்பித்தார். இடுப்பைப் பிடித்துக் கொண்டு ஓங்காரக் குரலில் கத்திக்கொண்டு நுரையைக் கக்கினார்.  பயத்தை முதன் முதலில் சந்தித்துவிட்ட ஒரு சிறிய மனிதராக வாப்பா தெரிந்தார்.

உம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை வாப்பா இறந்துவிட்டாரென்றால் என்ன செய்வதென்ற யோசனையை என்ன செய்தும் ஒதுக்க முடியவில்லை. கொரோனா தொற்றில் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக பொதுமக்கள் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் இறுதியாகச் சரணாகதி அடைகின்ற நம்பிக்கை வைக்கின்ற இடம் நீதிமன்றங்கள். நீதிமன்றங்களே நீதியை மறந்தவொரு நூற்றாண்டில் வாழும் வினோத மனிதர்களாக உறைந்து போய் நிற்கின்றோம்.  இன, மத, தேசிய,ஏகாதிபத்திய பாசிஸ்டுகளின் கரங்களில் அதிகாரம் இருக்கின்றபோது எளிய மனிதர்களின் வாழ்வு வெறும் பகடை.

 நீரிழிவு, மாரடைப்புக் காரணங்களால் மௌத்தான முஸ்லிம்களின் ஜனாசாக்களையே ”கொவிட் சந்தேக மரணம்” என்று எரிக்கும் இனவாதப் பேயாட்டத்திலிருந்து வாப்பாவின் மையித்தைக் காப்பாற்ற என்ன வழி என்றே திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த விசித்திரமான எண்ணம் தோன்றியது. வாப்பாவின் உடலை அப்படியே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மூடிவிடலாம். குசினியில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டி நல்ல பெரிது. ஆறு ஆடி உயரமிருக்கும்.

வாப்பாவின் தோள்பட்டையில் அசாதாரணமாக அடர்ந்த ரோமக்கற்றைகளைப் பார்த்தேன். தோள் அருகே மெதுவாக கைகளைக் கொண்டுபோனேன். வாப்பாவின் தோள் ஐஸ் போலச் சில்லென்றிருந்தது. அசாதாரண எண்ணங்களுடன் அவரைச் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

கொஞ்ச நேரத்தில் வாப்பா, சுமாராக உணரத் தொடங்கினார். அவரது மூச்சு  ”உஷ் உஷ்” என்று ஊதித்தள்ளுவது குறைந்தது. கண்களை மூடித் தூங்கத் தொடங்கினார். நாங்கள் ஒவ்வொருவராக அவ்விடம் நீங்கி அறைகளுக்குள் இயந்திரத்தனமாக நகர்ந்தோம். உம்மா மட்டும் அங்கேயே நின்றிருந்தார். அவர் முகத்தில் எந்த அறிகுறிகளும் இல்லை. உறக்கத்திலிருக்கும் வாப்பாவின் முகத்தையே நிச்சலனமாகப் பார்த்தபடி நின்றிருந்தார்.

பொருளற்ற இரவு விடிவதற்கு முன்பே உம்மா என்னை அழைத்தார்.  திடுக்கிட்டு வாறிச் சுருட்டிக்கொண்டு படுக்கையிலிருந்து எழும்பினேன். சுருண்டு கிடந்த தாவணியை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு உம்மாவைப் பார்த்தேன். அவர் முகம் சிவந்துபோய் இருந்தது. அடக்கிவைத்திருக்கும் துக்கத்தின் நிச்சயமான அறிகுறி உம்மாவின் முகத்தில் தெரிந்தது. அவரை எதுவும் கேளாமல் வாப்பாவைப் பார்க்க அவர் அறைக்கு ஓடினேன்.

வாப்பா குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பற்றி எங்களுக்கிருக்கும் அபிப்பிராயங்கள் குறித்த அக்கறையேயில்லாத அஜாக்கிரதையான அவரது முகத்தைக் கூர்ந்து பார்த்தேன்.

உம்மாவிடம் திரும்பி வந்தபோது நேற்றிரவு வாப்பாவை அவ்வளவு வருத்திய நோயின் காரணத்தைத் தான் கண்டறிந்துவிட்டதாகக் கூறினார்.

”அதனை வாங்கித் தந்தால் தான் இந்த ஆளை வீட்டில் பிடித்து வைத்திருக்கலாம். பைத்தியம் பிடித்துத் தெருவுக்கு ஓடி நம் எல்லார் மரியாதையும் காற்றில் பறக்க முதல் அந்த இழவை வாங்கிக் குடுத்திடணும்”

இந்தச் சொற்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பவர் உம்மாவேதானா என்பதை வியப்புடன் பார்த்தேன். என்னுடைய பதில்களைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்தபடியிருந்தார். தலை சுற்றியது.

”வாப்பாவைச் சுய அழிவிலிருந்து காப்பாத்துறது முக்கியமில்லையாம்மா…”

”இல்லை… அது இனிச் சாத்தியமேயில்ல மகள்… அவர் இதிலிருந்து விடுபட மாட்டார்….”

சர்வ நிச்சயமாகச் சொன்னார் உம்மா.

குறட்டைவிட்டுப் படுத்துக்கிடந்த வாப்பா எப்போது எழுந்து அந்த இடத்திற்கு வந்தார் என்று தெரியவில்லை. கதவினருகே திடீரெனத் தோன்றினார்.

”நீ நினைக்கிறாப்போல அது போதை வஸ்து இல்ல மகள்… வலி நீக்குகிற ஒரு மருந்து… வாங்கித் தந்திடு மகள்… நான் வெளியே போய் நாலு காசு தேடினால் உன்னைக் கேட்பேனா… இவ்வளவு காலமும் கேட்டேனா, உடம்பெல்லாம் நடுங்குது மகள்… அது இல்லாட்டி இந்த உடம்பு சரிஞ்சிடும் மகள். பைத்தியம் புடிச்சிடும் ”

வாப்பாவின் இந்தச் சொற்களில் தெரிந்த பாசாங்குத்தனமான ஒரு கலக்கத்தை உணர்ந்து கொண்டு சொன்னேன்.

”இந்த லாக்டவுண் காலத்தில் மக்கள் ஒருவேளை சோத்துக்கு வழியில்லாமல் திண்டாடுறாங்க…. உங்களுக்கு எல்லாம் காலடியில் கிடைத்தும் தலையில் தூக்கிவைக்காத குறையாக நாங்க உங்களைக் கவனித்தும்… கொஞ்சமும் கூச்சமில்லாமல் அபின் வாங்கிக் கேட்கிறீங்க….”

பாசத்தோடும் கொஞ்சம் அவமானத்தோடும் வாப்பா என்னைப் பார்த்தார்.

”இந்தப் பழக்கத்திலிருந்து வெளிய வாறதுக்கு இது நல்ல சந்தர்ப்பம்…. ஒரு நல்ல டாக்டரைப் பார்ப்போம்….”

ஒரு குழந்தைக்குப் போல மென்மையான குரலில் சொன்னேன்.

”நானும் விடத்தான் முயற்சி செய்றன் மகள்…. கொஞ்சம் கொஞ்சமாத்தான் விடணும்…  இப்பல்லாம் முன்னயப்போல எடுக்கிறல்ல….”

எதுவும் பேசாமல் என்ன பேசுவதென்றும் தெரியாமல் அவரையே வெறித்தபடி நின்றேன்.

”இது போதையில்ல மகள். மருந்து… என்ட உடம்புல இருக்கிற எல்லா நோய்க்கும் நல்ல நிவாரணி இது மட்டுந்தான்! நீ டாக்டர்ட கூட்டிப்போனால் செத்திடுவேன், ஊட்ட உட்டு ஓடிடுவேன்…”

”போங்க! எப்பிடியோ போங்க!” கத்தினேன்.

அங்கே நிற்கப் பிடிக்காமல் கோபமாக அறையை விட்டு வெளியேறினேன். அங்கேயே மௌனமாக உறைந்திருந்த உம்மா மீது என்றுமில்லாத பச்சாதாபம் உண்டானது.

அபின் தயாரிப்பதாகவோ விற்பதாகவோ சந்தேகித்துப் பாய்ந்து சுற்றி வளைத்துச் சில வீட்டுப் பெண்களைக்கூட பொலிஸ் கைது செய்து கொண்டுபோகும் சம்பவங்கள் ஊரில் அடிக்கடி நிகழும்போது இந்த வலையில் திட்டமிட்டுப் பெண்களை வீழ்த்திவைத்திருக்கும் ஆண்களில் அவ்வளவு ஆத்திரம் உண்டாகும். அவர்கள் மண்டையைப் பிளந்தால்கூடத் தவறில்லை என்று கொள்கைக்கு விரோதமான எண்ணங்கள் தோன்றும். வாப்பா இப்படியொரு பழக்கத்தில் ஆட்பட்டுக் கிடக்கின்றார் என்று தெரியாமல் இருந்துவிட்ட குற்றவுணர்வு நெஞ்சுக்குள் சுரீர் என்று வலியாகப் பரவியது. உம்மா இதெல்லாம் முன்பே அறிந்திருக்கக் கூடும் என்று தோன்றினாலும் அவரிடம் இதைப் பற்றிக் கேட்க விரும்பவில்லை.  போராடிக் களைத்துப்போனவரைப் போலத் தெரிந்தது அவர் உருவம். அவர் மட்டுமே அறிந்து பொத்தி வைத்திருந்த ரகசியம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்ட அவமான உணர்விலா, தான் மட்டுமே நிகழ்த்திவந்த ஒரு உள்மனப் போராட்டத்திலிருந்து தப்பித்துவிட்ட விடுதலை உணர்விலா அவர் மௌனித்திருக்கிறார் என்பதை ஊகிக்க முடியவில்லை.

முப்பது நாட்களுக்குப் போதுமான அபினை வாங்குவதற்கு குறைந்தது இருபதாயிரம் ரூபா வேண்டும் என்று வாப்பா சொல்லிக் கொண்டிருந்தபோது கால்களுக்குக் கீழே தரை நழுவிச் செல்வதுபோல இருந்தது.  தினமும் எடுத்துக் கொள்வதென்றால் அவர் எந்தளவு மூழ்கிவிட்டார் என்று புரிந்தது. உம்மா சொன்னதுபோல மீட்கமுடியாத ஆழத்திற்குத்தான் போய்விட்டாரா, வாப்பா?

குவைத்தில் இருக்கும் தம்பியை வாட்ஸ்அப்பில் அழைத்து இங்கு நடப்பதையெல்லாம்  ஒப்புவிக்கத் தொடங்கினார், உம்மா.

நிரம்பிய குளத்தில் விழும் தடித்த மழைத்தூளியைப் போல உம்மாவின் அழுகை என்னை இழுக்க மீண்டும் அவர் பக்கமாகச் சென்றேன்.

”இங்க எல்லார்ர ஜனாசாவையும் பத்த வைக்கிறாங்கப்பா… என்டைக்கி இருந்தாலும் எல்லாரும் மௌத்தாப் போற நாமதான்….. இந்தக் கொரோனா காலத்தில வேணாம்… பேரினவாதப் பிசாசுகள் வைக்கிற நரக நெருப்பில எரியக்கூடாது, யாருமே எரியக் கூடாது….”

பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தம்பி குவைத்தில் தொழிலில் இருக்கிறான். ஆண்டுக்கு ஒரு முறைதான் நாட்டுக்கு வந்து போவான். அவனுக்குப் பிள்ளைகள் குடும்பம் இருக்கிறது, அங்கென்ன காசு மரத்திலா காய்க்கும் என்றெல்லாம் சொல்லி மகனிடம் எந்தக் காரணத்திற்காகவும் பணம் கேட்காதவர் உம்மா. தம்பியே அனுப்புவதாகச் சொன்னாலும், ”ரெண்டு பொம்பிளைப் புள்ளைகள்ட வாப்பா மகன் நீங்க…” என்று ஞாபகம் ஊட்டுகிறவர்.  

வாப்பாவுக்கு அபின் வாங்கித் தருமாறு மகனை அவர் கேட்டுக் கொண்டிருப்பது கனவில் போல் தெரிந்தது. உம்மாவின் குரலில் வெளிப்பட்ட நோய்மை ஒருவித சித்திரவதை எண்ணங்களைக் கிளறியது. வாப்பாவின் மௌத்தை இந்தக் கொடிய காலத்திலிருந்து தள்ளிவைக்கும்  உத்தியின் நியாயங்கள் பற்றி உம்மா அக்கறையற்றிருந்தார்.

உம்மாவின் கையிலிருந்த போனைப் பிடுங்கி வாப்பாவும் பேசினார்.

”போக விடுறாங்களில்லை மகன்… கொரோனா போய்ட்டென்றால் நாலு காசு தேட எனக்குத் தெரியும்… என்ட உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் உழைப்பேன்….  இப்ப மட்டும் உதவு மகன்…”

மகனுடன் பேசி முடித்தபிறகு ஒரு வெற்றியாளனின் பார்வையை என் பக்கமாக வீசினார் வாப்பா.

”அவன் ஆம்பிளப் புள்ள… அவனுக்குத்தான் விளங்கும்…”

மிகவும் தெம்பான குரலில் சொல்லிக் கொண்டு போனார்.

கொரோனாவில் குவைத்தும் தான் முடங்கிக் கிடக்கின்றது. அவனுக்கு அங்கு என்னென்ன கஸ்டமோ. நினைத்தபடி அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் அவன் தான் உடன்பட்டிருக்கிறானே! பயங்கரமாக அச்சுறுத்தும் எண்ணங்களால் மூளை உறைந்துவிட்டிருந்தது. உம்மாவைப் பார்த்தேன்.  பழுத்த முடி நிரம்பிய தலையைக் கவிழ்த்துக் கொண்டு தரையை வெறித்தபடி இருந்தார்.

எனது எல்லைக்குள் நடக்கும் இந்த வெளிப்படையான முரண்பாடான ஒரு நிகழ்ச்சியைக்கூட மாற்றியமைக்க முடியாத அவமானத்துடன் வாசலுக்கு வந்தேன்.

ஜனாசா – பூதவுடல்

மௌத்து – மரணம்

மையத்து – பூதவுடல்

கல்பு – மனம்/ இதயம்

யாரப்பே – உலகத்தை ஆளும் இறைவன்

2 Comments on “தகனம் -ஸர்மிளா ஸெய்யித்”

  1. வாழ்த்துகள், ஸர்மிளா !  நேரில் பார்ப்பது போன்ற, இயல்பான பரிவர்த்தனைகளுடன் , ஒவ்வொருவரின் உள்மனப் போக்குகளைப்  பற்றிய விவரங்களும் பொதிந்துள்ள மிக அருமையான கதை,  

    ”இங்க எல்லார்ர ஜனாசாவையும் பத்த வைக்கிறாங்கப்பா… என்டைக்கி இருந்தாலும் எல்லாரும் மௌத்தாப் போற நாமதான்….. இந்தக் கொரோனா காலத்தில வேணாம்… பேரினவாதப் பிசாசுகள் வைக்கிற நரக நெருப்பில எரியக்கூடாது, யாருமே எரியக் கூடாது….”    மறக்க முடியாத வரிகள்.

  2. கதை குறித்து உரையாடநிறைய இருக்கிறதாக உணர்கிறேன். சர்மிளாவின் இயல்பான கதைநோட்டம் அருமை. உம்மாவோடு சேர்ந்து பயணிக்காத பயணங்கள் கலுநாணம் கந்தூருகள் உம்மாவுக்கும் கிட்டாமல் போன சந்தர்ப்பங்கள் வாப்பாவின் திமிர் போன்றன இயல்பான குடும்ப வாழ்வில் இழையோடும் விரிசல்களாகவே எண்ணத் தோன்றுகின்றது.
    அனேகமான குடும்பங்களில் ஆணைவிட பெருத்தசெலவில் அலங்கருத்துக் கொண்டு கலியாணம் காட்சிகளில் பங்குபற்றும் பெட்களை அதிகமாகக் கணலாம் ஆண் உழைக்கும் மெசினாகவும் பெண் அனுபவிக்கும் வரம் பெற்றவளாகவும் திகழும் சந்தர்ப்பங்களே அதிகம்.
    அதற்குளளும் சர்மிளா சொல்லும் சில திமிர் பிடித்தவர்கள் இரிக்கத்தான் செய்வார்கள். ஆனால் பொது வாழ்வில் இது மறுபடுகின்றது.
    உழைக்காத ஆணை தாழ்த்துவது
    வருமானம் உள்ள போது மாப்பிள்ளையை உறிஞ்சுவதும் வருமானம் இல்லாத போது கணவரை தாழ்த்துவதும் இந்த மனிசனால என்ன இன்பத்தக் கண்டேன் எனத் தூற்றுவதும் குடும்ப அலகில் இயல்பான விடயம். இக்கதையில் உம்மாவின் செயற்பாடுகள் பெண் வஞ்சனையை தூக்கலாக் காட்டுகின்றது.

    பொதுவில் குடும்ஆப அலகில் ஆண் திமிர். பெண் வஞ்சணை என்பன இயல்பான விடயங்கள் ஒருத்தரை ஒருத்தர் பாதிக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *