ஒவ்வொரு ஜாதிக்கும் என்னென்ன வடிவங்களில் உள்ளது என்பது பற்றிய கலாச்சார பண்பாட்டு ஆய்வோ அல்லது தாலி தோன்றிய வரலாறு குறித்த குறித்தோ பேசவில்லை. இன்றும் தாலியெனும் ஒரு அடையாளம் பெண்ணை எப்படி ஒரு அடிமை நிலையில் வைத்திருப்பது என்பது பற்றியே இந்நூலின் ஆசிரியர் பேசுகிறார். அவரது சிந்தனையும் எழுத்தும் அது குறித்துத் தெளிவாக விரிவாக விமர்சிக்கிறது. திருமணத்தின் அடையாளமாக ஏதோ ஒரு அணிகலன் எல்லாச் சமூகங்களிலும் எல்லா மதங்களிலும் இன்றளவும் இருந்து வருகிறது. ஆனால் இங்கு மட்டுமே திருமண அடையாளமான தாலியைப் போல் வேறெதுவும் வேறு எந்த மதத்திலும் சமூகத்திலும் கொண்டாடப்படவில்லை. தமிழ்ச்சமூகத்தின் பெண்ணடிமைத் தனத்திற்கு முதன்மை அடையாளமாக இருக்கக்கூடிய தாலியை மையப்படுத்தி தனது தெளிவான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் “தாலி ஒரு மாயை” நூலாசிரியர். அவருடைய வார்த்தைகளில் சொல்வதென்றால் தாலி இங்கு
அதுபோல குற்றவுணர்ச்சிக்கான காரணியாகவும் இருக்கவில்லை. கால சமூக மாற்றங்களுக்கு ஏற்ப திருமண அடையாளச் சின்னமாக இருந்தது மாறி தற்போது ஒரு அணிகலன் என்ற அளவில் மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்திய தமிழகச் சூழலில் தாலியின் பெருமையும் புனிதமும் முக்கியத்துவம் கூடிக்கொண்டே போகிறது. அதற்குக் காரரணமாக எண்பதுகளில் வந்த பல திரைப்படங்களைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கிறார். பெரும்பாலும் திரைப்படம் சமூகத்தைப் பிரதிபலிக்கும் தவிர திரைப்படத்தை சமூகம் வெகு குறைவாகவே பிரதிபலிக்கும். அன்றைய சமூக மனநிலையும் ஆணாதிக்கமும் பெண்களின் படிப்பறிவற்ற நிலைமையும் அத்தகைய கருத்தாக்கத்திற்குக் காரணமாக அமைந்திருந்தது. அதேபோல் திரைப்படத்திற்கு இணையாக அன்றைய சமய ஆன்மீக இலக்கியவாதிகளும் மதத்தை கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற திருமணத்தின் அருமை தாலியின் பெருமை என்றெல்லாம் பேசி சாதிக் கட்டுமானம் உடைபடாமல் சனாதான மதத்தைக் காப்பாற்றி வந்தார்கள். வெளிப்படையாக தாலி திருமணத்தின் குறியீடாக இருந்தாலும் மறை பொருளாக அது சாதியத்தைக் குறிக்கும் சாதியத்தை காப்பாற்றும் காரணியாகவே இருந்து வருகிறது.
சாதிக்கலப்பு ஏற்பட்டால் சனாதன மதம் ஏற்படுத்தி வைத்துள்ள நால் வருணக் கோட்டை உடைந்து சிதைந்து விடும். அதனால் தாலியெனும் சாதியச் சங்கிலியால் குடும்ப அமைப்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க இந்த மதவாதிகள் முனைப்பாக இருக்கிறார்கள். இதுநாள் வரை அவர்கள் கொண்டாடி வந்த தாலியின் புனிதப் பிம்பத்தை எல்லாம் பெரியார் என்ற ஒற்றை மனிதர் தனியொருவராகவே உடைத்தெறிந்தார். “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற ஒரு சிறு புத்தகம் நெருப்புப்பொறி போல் இன்றும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அவர் முன்னெடுத்த கருத்துகளை அவர் வழி வந்த அரசால் சட்டரீதியாக நடைமுறைப்படுத்தத் தொடங்கியதிலிருந்து தாலிக்கு ஏற்றிய புனிதப்பூச்சுகள் மெல்ல உதிரத் தொடங்கியது.
சீர்திருத்தத் திருமணங்கள் பெருமளவில் தாலி இன்றியே நடைபெறுகின்றன. அதுமட்டுமன்றி இன்றைய பெண்களின் கல்வி வேலைவாய்ப்புகளும் அவர்களின் மனநிலையைப் பெரிதளவில் மாற்றியிருக்கிறது. எப்போது மஞ்சள் கயிறு மாறி தங்கச் சரடு வந்ததோ அப்போதே மதவாதிகள் ஏற்றிவைத்த புனிதம் மங்கத் தொடங்கிவிட்டது. நூலாசிரியர் தாலிக்கான முக்கியத்துவம் தொடர்வதற்கான இரண்டு காரணங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று கண்மூடித்தனமான மத நம்பிக்கை. இது தொடர்வதற்கான காரணம் சமூகம் தாலியின் அவசியம் குறித்துச் சிந்திப்பதும் விமர்சிப்பதும் இல்லை. அது வழிவழியாக வரும் ஒரு சடங்கு ஒரு சம்பிரதாய செயல் என்ற அளவிலே அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதைக் குறித்து நாம் அதைக் குறித்த விமர்சனங்களை தொடர்ந்து எழுப்பி வந்தால் அவர்கள் சிந்திக்கத் தொடங்குவார்கள். பின்னர் மாற்றம் மெல்ல மெல்ல நிகழும். அந்த நம்பிக்கையில் தான் ஆசிரியர் இச்சிறு தீப்பொறியைப் பற்ற வைத்திருக்கிறார்.நூலாசிரியர் குறிப்பிடும் இரண்டாவது காரணம் சமூகத்தில் மத ஆன்மீக சொற் பொழிவாளர்களால் பரப்பப்படும் போலியான சமூக விஞ்ஞானம். சமீப காலங்களில் இப்படி பலதரப்பட்ட தீடீர் விஞ்சானிகள் தோற்றி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லை என்கிற கோஷத்தோடு நடைமுறையில் சாதாரணமாக உள்ள செயல்களுக்கு எல்லாம் நவீன விஞ்ஞான விளக்கங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். சுயமாகச் சிந்திக்காத சமூகத்தில் இத்தகைய பொய்ப் பிரச்சாரங்கள் பின்னாளில் மோசமான விளைவுகளையே உண்டாக்கும். உதிரிச் செய்திகளையே ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்று நம்பும் மூளைச் சோம்பேறிகள் நிறைந்த சமூகமாகிவிட்டது தமிழ்ச் சமூகம். பிற்போக்கு சாதி மதவாதிகளின் பொய்களை உடனடியாகக் கட்டுடைக்க வேண்டியது மார்க்சிய, பெரியாரிய சிந்தனையாளர்களின் கடமை. அதனைத்தான் நூலாசிரியர் செய்யத் தொடங்கியுள்ளார்.
மஞ்சள் கயிறு கழுத்தில் உரசினால் தைராய்டு வராது. நெஞ்சில் உரசினால் காச நோய் வராது என்கிற கதைதான் மதவாதிகள் பரப்பும் நவீன விஞ்ஞானம். இதைவிடக் கொடுமை தாலி மார்பில் உரசினால் கணவனுக்கு துரோகம் செய்யும் நினைவே வராது என்பது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே வள்ளுவர் சொன்ன “சிறைகாக்கும் காப்பு என் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை” எனும் வார்த்தைகளை மறந்து விட்டார்கள் போலும். கற்பெனில் அதை இரு பாலருக்கும் பொதுவில் வைப்போம் எனும் பிரகடனும் நிறை வேறாமலே இருக்கிறது.பெண்ணுக்கு நினைவூட்டுவதைப் போல் ஆணுக்கும் மனைவியைக் குறித்து நினைவூட்ட எங்கேனும் ஒரு ஆபரணத்தை அடையாளத்தை கட்டி வைக்கலாமே என ஆசிரியர் கேள்வி எழுப்புவது நியாயமானதே. ஆக மொத்தம் தாலி என்பது பெண் தனி ஒருவரின் சுகபோக உடமை சாதிய பெருமையை சுமக்கும் வளர்த்தெடுக்கும் அடிமை. இந்த மானுட சமூகத்தில் ஆணுக்கு இணையாக பெண்ணும் வாழ வேண்டுமே தவிர ஆணுக்கு அடிமையாகவோ அண்டிப் பிழைப்பவராகவோ கண்டிப்பாக வாழக் கூடாது எனும் கருத்தையே நூலாசிரியர் தனது நூலின் மையமாக வைத்து உள்ளார்.
தாலி அடையாளச் சின்னமா? அவமானச் சின்னமா? என்பதை இன்றைய இளைய தலைமுறை யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு ஆணுடன் இணைந்து வாழ காதலும் ஒத்த சிந்தனைகள் மட்டுமே போதும். இத்தகைய சமய சடங்குகள் தேவையில்லை என என்னால் உறுதிபட கூற முடியும். ஏனெனில் எனது இணையருடன் எனது மணவாழ்க்கை தாலி இன்றியே தொடங்கி இன்று வரை இனிய இல்லறமாகத் தொடர்கிறது. அதனால் இதைச் சொல்லும் தகுதி எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். தோழர் தொடர்ந்து இதுபோல் சமூக சமய அழுக்குகளை களையும் மார்க்சிய பெரியாரியச் சிந்தனைகளைத் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.ம.ஆ. சிநேகாவழக்கறிஞர் வேலூர்