ம்… ம்… இதோ இன்னொரு மார்ச் 8ம் திகதி வந்துவிட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து மணி நேரமாவது ஊடகங்களிலும், ஆங்காங்கே சில மேடைகளிலும், , சில ஊர் தெருக்களில், நாலைந்து மாதர் சங்கங்களின் தூண்டுதலில் பத்துப் பதினைந்து பெண்கள் கொடி பிடித்துக் கொண்டு போகும் ஊர்வலத்திலும் இன்று பெண்களுக்கான விழிப்புணர்வு பற்றிய கதைகள் பேசப்படலாம், பெண்ணியம் பற்றி ஆவேசமான கருத்து தர்க்கம் நடை பெறலாம், பெண் அடிமைத் தனம், பெண் சுதந்திரம் என்று கூச்சல் போடலாம். எல்லாம் அடங்கிப் போய் இன்றைக்கான கண்துடைப்பின் சரியான நிறைவேறலின் மகிழ்வில் தூங்கப் போகலாம்; நாளை மறந்து போகப்படலாம். அது தான் இன்றைய மகளிர் தினம். வழமையாக ஒவ்வொரு வருடமும் இப்படித் தானே நடந்து கொண்டிருக்கிறது எந்த வித்தியாசமும் இல்லாமல்??
ஆனால் சமூகத்தில் பெண்களின் நிலமையில் நாளுக்கு நாள் எத்தனை எத்தனை வித்தியாசமான ஏற்றத் தாழ்வுகள்??முரண்கள்? முடங்கல்கள்?முடக்கபடல்கள் என்று தெரிந்து கொள்கிறோமா?? அவற்றைப் பற்றி ஆர்வம் காட்டப் போகிறோமா என்றால் என்னுடைய பதில் இல்லை என்பது தான்.
பெண்ணியம் என்ற வார்த்தை இன்றைய காலகட்டத்தில் அநேகமானோரின் முகச்சுளிப்புக்கு இடமளித்துள்ளதே தவிர அதனுடைய தேவையைப் பற்றி பெண் இனத்தின் பெரும்பகுதியினரே புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விசயம். ஆணாதிக்கம், அடிமைப்படுத்தல் என்று கூச்சல் போடும் பெண்ணினத்தின் பெரும் பகுதி வெறும் கூச்சலுடன் தான் இதுவரை நிற்கிறது. தனக்கான பாதிப்பை புலம்பலில் மட்டும் வெளிப்படுத்துவதோடு அநேகமானோர் ஒதுங்கி, ஒடுங்கி விடுகிறார்கள். சூழல், குடும்பம், குழந்தைகள்,கலாச்சாரம் என்று பல காரணங்களால் முடக்கப்பட்டு யாரும் அந்த பாதிப்புகளிலிருந்து தம்மை விடுவிக்க முற்படுவதில்லை.
பெண் என்றால் பொறுமையின் சின்னம், தியாகத்தின் திருவுருவம் என்று சொல்லிச் சொல்லி மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு இயந்திர மனப்பான்மை பெரும்பாலான பெண்களிடம் ஆழமாக வேரூன்றி இருப்பதால் எந்த அடிமைத்தனத்தையும், அடக்குமுறையையும் தாங்குவதும், அதை சமூகத்திடமிருந்து மறைப்பதும் தனது சிறப்பியல்பாக இவர்கள் நினைக்கிறார்கள்.இப்படிப்பட்ட பெண்கள் தான் ஆண்களை விட பெண்ணியம் என்றால் என்னவென்று தெரியாத அறியாமையிலிருப்பவர்கள். பெண்ணியத்தின் தேவையை பரப்ப நினைக்கும் உண்மையான பெண்ணியவாதிகள் இவர்களைப் போன்றவர்களுக்கு தான் முதலில் புரியவைக்க முயல வேண்டும்.
http://mswathi-parinamam.blogspot.com/2013/03/blog-post.html