கடைசித் தரிப்பிடம்-றஞ்சி (சுவிஸ்)
புலம்பெயர்ந்த தமிழ் பெண் ஒருவர் குறுகிய காலத்தில் அவர் எதிர்நோக்கும் ஒரு சில பிரச்சினைகளை கோடிட்டு காட்டுகின்றது. கடைசித் தரிப்பிடம். இலங்கையிலிருந்து லண்டனுக்கு படிப்பதற்காக வரும் ஒரு இளம் பெண் எதிர்நோக்கும் பிரச்சினை களையும் சவால்களையும் மிக அழகாக கோடிட்டு காட்டி யுள்ளார் இயக்குநர் – சுஜித் ஜி
இப் படத்தில் 1989 ஆம் ஆண்டு நான் லண்டன் வந்து தனியாக கஸ்டப்பட்ட என் நிஜ வாழ்வையே கண்டேன். என் பழைய நினைவுகளை மீட்டு பார்க்க வைத்த அழகான படம். நிலானியைப்போல் பல்லாயிரக் கணக்கான புலம்பெயர் பெண்க ளிடம் இப்படி பல கதைகள் உண்டு. அதை ஒரு 60 நிமிட படமாக புலம்பெயர் பெண்களின் வாழ்வியலை கோடிட்டு காட்ட முடியாது தான் ஆனாலும் ஒரு சில கருவை எடுத்து படமாக் கியது சிறப்பும் பாராட்டுக் குரியதும்.
இலங்கையில் இருந்து தனியாளாக மேற்படிப்புக்காக பணம் செலுத்தி லண்டனுக்கு வரும் நிலானி தான் கல்வி கற்கப்போகும் கல்லூரி நிலையமே காலாவதியாகி விட்டதை அறியாமல் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் காசு,வேலை செய்ய அனுமதியின்மை அதன் பொருட்டு அவள் சந்திக்கும் ஒவ்வொரு முரண் தரும் அனுபவங்களும் இப்படத்தில் மையங்கொண்டுள்ளன. புலம் பெயர் வாழ்வியல் சிக்கல்கள் பெண் என்பதால் அவள் எதிர்நோக்கும் பாலியல் பிரச்சினைகள் அவள் மனதில் இருக்கும் வேதனைகளை புரிந்துகொள்ளாத காதல், இருக்க இடமில்லாமல் படும் கஸ்டம் கடைசியில் அப்பா இறந்த செய்தி என அவளது உணர்வுகளை கொல்லும் அந்த வாழ்வியல்… மிக அழகாகவும் அலட்டிக் கொள்ளாமலும் சோர்வு இல்லாமல் படம் நகர்வதில் புலம்பெயர் பெண்களாகிய எம்மை அதில் காண்கின்றோம். நிலானியைப் போலவே இன்னொரு புலம்பெயர் நாட்டில் அபலைப் பெண்ணொருத்தி லண்டனிலோ, ஐரோப்பியத் தெருவொன்றிலோ தன் வாழ்க்கையை தேடிக் கொண்டிருப்பாள் என்பதில் சந்தேகமில்லை.
இப்படத்தில் நிலானிக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்யும் அன்ரன் (மன்மதன் பாஸ்கி). 14 வருடாமாக விசாவுக்காக காசு பிடுங்கும் தமிழ் வழக்கறிஞரிடம் அலைகிறார். இந்த அலைச்சல் அன்றைய, இன்றைய யதார்த்தம் தமிழர்களையே தமிழர்கள் ஏமாற்றி செய்யும் பிழைப்புவாதம். நிலானி என்ற மூலப் பாத்திரம், மிக அழகாக உணர்வுபூர்வமாக நடித்துள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலுமே தன்னை தன் உணர்வுகளை மிக தத்ரூபமாக வெளிக்காட்டியுள்ளார் வாழ்த்துகள் பிரியாஷா ஜெயநாயகம். புலம்பெயர் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினையின் ஒரு கருவை எழுதி இயக்கியிருக்கும் சுஜித் ஜி அவர்களுக்கு நன்றிகள் இன்னும் இப்படியான நல்ல கருக்கொண்ட படைப்புகளை கொண்டு வர வாழ்த்துகள்.
புலம் பெயர் பெண்களின் வாழ்வியலில் சொல்லப் படாத கதைகள் இன்னும் நிறையவே இருக்கின்றன. அவைகளையும் முடிந்தால் திரைவடிவில் கொண்டு வர முயற்சிக்கலாம்.. என்பது என் அன்பான வேண்டுகோள்.நான் கேட்டவுடன் படத்தை அனுப்பித் தந்தமைக்கு மிக்க நன்றிகள் சுஜித் ஜி ..புலம்பெயர்ந்த பெண்கள் பார்க்க வேண்டிய படம்