பனிப்பாளங்கள் பிரிந்து எழுந்த கள்ளச் சூரியன் பனிவிலகிப்போன நாட்களில் கதிர்வீசி ஒளியை கொட்டிக்கொண்டிருந்தது. இருந்தும் புத்தகத்துடன் நாம் மண்டபத்துள் நடந்தோம். வாசிப்பும் உரையாடலும்-16 வது நிகழ்வில் அரவாணிகள் தொகுப்பு நூலும் வாடாமல்லி நாவலும் எம்மோடு உரையாட அழைத்த நாள் அது. வா.உ இன் செயற்குழுவினர் மூவரும் ஏலவே வந்து மண்டபத்தை புரட்டிப் போட்டிருந்தனர். அவர்களிடம் மண்டப திறப்பு மட்டுமல்ல நிகழ்ச்சியின் திறப்பும் இருந்ததை உணர முடிந்தது.
திட்டமிட்டபடியே 2 மணிக்கு கூட்டம் தொடங்கியது. எல்லாத் திசைகளையும் ஆங்காங்கே பராக்குப் பார்த்துக்கொண்டிருந்த கதிரைகளில் அப்படியே இருக்கச் சொன்னார்கள், இருந்தோம்;. ஒரு கதிரை ஆளின்றி இருந்தது. அதற்குரிய ஆள் தலையில் வாடாமல்லியை வைத்தபடி எட்ட நிற்கிறார். கைபிடிக்காமல் தலையில் வாடாமல்லி இருக்க அவர் அந்த கதிரையில் வந்து இருக்க வேண்டும். அதில் இருக்கவிடாமல் மற்றவர்கள் இருக்கை மாறிமாறி இயங்கிக்கொண்டிருக்க வேண்டும். தனது (கருத்து) நிலையை தனது பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு இலக்கை எட்டிவிட முடியாது. எல்லாவகை கருத்துநிலைக் குறுக்கீடுகளையும் எதிர்கொண்டு அவர் தன்னை தனது கருத்தை பன்முகத்தன்மையினூடு அடையவேண்டும். ஒருவாறு இருக்கையை பிடித்துவிடும்போது, கடைசியில் தவறிழைத்தவரின் தலையில் புத்தகம் போய் அமர்கிறது. அவர் தொடர்கிறார். அந்த வெளியை சிரிப்பும் உற்சாகமும் நிறைத்துவிடுகிறது.
பிறகு ஒருவர் பேசுகிறபோது மற்றவர் தவறுதலாகத்தன்னும் குறுக்கிட்டுவிடாதபடியான அளிக்கை வட்டவடிவத்துள் எல்லோரையும் நிற்பாட்டி வைக்கிறது. ஒருவர் பேச விழைவதை மற்றவர் உடல்மொழியினூடு அவதானிக்கவும் கவனக்குவிப்பு (Concentrate)பண்ணவும் அந்த அளிக்கை சுவாரசியாக எம்முடன் விளையாடியது. வென்றோம்.. தோற்றோம்.. மீண்டும்..மீண்டுமாய்..!
இப்போ வாடாமல்லி நூலின் பக்கங்களைப் பிரித்து ரூபா சென்றுகொண்டிருந்தார். புகலிடத்திலேயே பிறந்து வளர்ந்த இரண்டாம் சந்ததியைச் சேர்ந்த ரூபா தமிழிலேயே வாசித்து தமிழிலேயே உரையாடிக்கொண்டிருந்தார்.
தன்னை பெண்ணாகவே உணரும் சுயம்புவின் பாலினம் (gender) தனது வெளிப்படுத்தலை கைவளையல்கள், சேலை என்பவற்றை அணிவதினூடாக திருப்திகொள்ள துடிக்கிறது. அதை இந்த சமூகம் வன்முறையுடன் அணுகுகிறது. வாழத்துடிக்கும் பெண்தன்மையை ஆண் உடலுக்குள் திணித்துவைத்தபடி துவண்டு கிடந்தான் சுயம்பு. அவன் பெண்ணுடை அணிந்திருந்தான். வளையல்கள் அணிந்திருந்தான். பழமைவாத கருத்தியலை உள்ளடக்கிவைத்திருக்கிற கிழிசல்கொண்ட சூட்கேஸ் இன்மேல் சுயம்பு மேகலையாக வீழ்ந்து கிடக்கிறான். இது ஒரு பாத்திரம். மற்றப் பாத்திரமாக சுயம்புவின் ஆணுடல் அந்த சூட்கேசுக்குளிருந்து புடவையையை மெல்ல உருவிக்கொண்டிருக்கிறது. அது அவனின் கால்களை மெல்லமெல்ல சுற்றிப் படர்கிறது. அவன் சிறைப்பட்டுக் கொண்டிருக்கிறான். வெறித்த முகம். ஒடுங்கிப்போய்க் கொண்டிருக்கிற நிலை. அரங்கியலை கற்கைநெறியாகக் கொண்ட பாரதி சுயம்புவின் ஆணுடலாக நிற்கிறார். இரண்டாம் சந்ததியைச் சேர்ந்த நிதிலா சுயம்புவின் பெண்ணுடலாக கிழிசல் சூட்கேசின்மேல் வீழ்ந்து கிடக்கிறார். நீட்டப்பட்ட கையிலிருந்து கைவளையல்கள் ஒவ்வொன்றாக நழுவி வீழ்ந்துகொண்டிருக்கிறது.
இந்த சமூகத்தின் அரவாணிகளுக்கெதிரான வன்முறைக் கருத்தியலையும் உடல்வன்முறை அதிகாரத்தையும் தாங்கியபடி யூட் அருகில் தயாராகவே நிற்கிறார். கை ஏந்திவைத்திருக்கும் கம்பியை தீயின் நாக்கு சூடாக்கியபடி இருக்கிறது. ரூபா தனது உரையை தொடர்ந்துகொண்டிருக்கிறார். திரையில் தனது கருத்து மையங்களின் வார்த்தைகள் கோடிட்டபடி வந்துபோய்க் கொண்டிருக்கிறது.
பின் உரையாடல் எல்லா இருக்கைகளிலும் வாடமல்லி எழுதிய நோக்கம், எந்த வாசகர்களை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டது, நாவலின் மொழிநடை, கதையோட்டம், கதைமாந்தர் சிந்தரிப்பு, கதையின் முடிவு எதிர்பார்த்தா ஒன்றா? கதை எழுதப்பட்ட காலத்திற்கும் தற்போதுள்ள சூழலுக்குமான ஒப்பீடு எனப் பலகோணங்களில் முளைக்கத் தொடங்கிவிடுகிறது.
அதனையடுத்து யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது யேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட- தனுஜா நேரில் வருவதாக இருந்தார். இப்போ நிழலாக இணையத்தினூடாக (By Face Time) வந்தார். ஆண் உடலுள் பெண்ணாக தவித்த மனவுணர்வுகளையும், தான் குடும்பத்தில் அதை வன்முறையின்றியே எதிர்கொள்ள முடிந்தது என்பதையும் ஆனால் சமூகத்திடமிருந்து தனக்கு வந்த, வருகின்ற எதிர்வினைகளையும் சிக்கல்களையும், யேர்மனியில் தான் தனது வகுப்பாசிரியை இனூடாக அதை வெளிப்படுத்தி தன்னை உடல் ரீதியில் பெண்ணாக மாற்றிக் கொள்ள உத்தியோகபூர்வமாக சுமார் 9 ஆண்டுகள் பிடித்தன என்பதையும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்து அரவாணிகளையும் இந்திய அரவாணிகளையும் அவர் ஒப்பிட்டுப் பேசிய வெளிகளில் விமர்சனங்கள் விதைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனாலும் காலம் போதாமையினால் அவை முளைக்கவில்லை.
அடுத்து மூன்றாம் பாலினத்தினர் பற்றிய (நாங்களும் இருக்கிறம் என்ற) ஆவணப்படத்தை எடுத்திருக்கும் இலங்கையின் இளம் பெண் படைப்பாளி பிறைநிலா இணையத்தினூடாக (By Face Time) வந்தார். அந்தப் படத்தை வார்த்தைகளால் சுற்றிக்காட்டிய அவர் அதன்போதான அனுபவங்களை ஓர் உணர்வுப் பயணத்தினூடாக சொல்லிக்கொண்டிருந்தார். கொழும்பில் தனது முதலாவதான திரையிடல் அனுபவங்களையும் குறிப்பிட்டு இளைய சமுதாயத்தில் அந்தப் படம் ஏற்படுத்திய அறிதலையும், தாக்கத்தையும், உணர்வையும் அவர்களின் வார்த்தைகளினூடு எமக்கு கடத்தினார். இந்த இளம் வயது படைப்பாளியின்; அரவாணிகள் பற்றிய அறிதலும், மொழி அடுக்குகளும், தெளிவான கருத்துரைப்புகளும் எல்லோரிடமும் சற்று வியப்பைக் கொடுத்திருந்தது. யாழ்ப்பாண சமூக அமைப்பின் மூடுண்ட தன்மைக்குள் அரவாணிகளின் நிலையை ஒர் சமூகக் கண்ணோட்டத்துடன் விளக்கியிருந்தார்.
பிறகு, மகாராசன் தொகுத்த அரவாணிகள் நூல் பற்றி பாரதி தனது புரிதலை வெளிப்படுத்தினார்.அரவாணிகள், திருநங்கைகள்,திருநம்பிகள், மூன்றாம் பாலினம், பாலியல் திரிந்தவர்கள் என்ற சொல்லாடல்கள் அலி, பேடி போன்ற இழிசொல்லாடல்களுக்கு மாற்றாக முன்வைக்கும் நன்மதிப்பீடு கோரும் ஒரு குரல்கள் ஒருபுறம், சாதி, மத பேதமில்லை என்ற வட்டத்திற்குள் பயணிக்க விழையும் அரவாணிகள் அதற்கு மாற்றாக அவர்கள் உருவாக்கும் குடும்ப அமைப்பு, சடங்குகள் போன்ற ஏற்கனவே உள்ள மரபு வடிவங்களின் பதிலீடுகளுக்குள் அவர்கள் ஊடாடடுவதை ஒலிக்கும் குரல்கள் இடையிலும், குரோமோசோம்கள் மற்றும் ஹார்மோன்கள் கலவையின் அறிவியல் காரணத்தினை ஏற்கும் அறத்தினை வெளிப்படுத்தும் குரல்கள் மறுபுறம் என வெவ்வேறு வடிவங்களில்( கட்டுரை, சிறுகதை,நாடகம்,சினிமா மற்றும் அரவாணிகளின் அனுபவப் பகிர்வுகள்) உள்ள வெவ்வேறு காலகட்டங்களில் எழுத்துப்பட்ட பதிவுகளின் தொகுப்பாக இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது என்றார்.
இது ஒரு அரவாணிகள் குறித்த சிறந்த ஆவண நூலாக உள்ளது, ஆனால் ஒரு வாசகனுக்கு பேசுபொருளின் கருத்துகளை திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லாமல் செறிவாக சொல்ல விழைகிறதா என்ற கேள்வியும் எழுவதாக கூறினார். மேலும் சுவிஸ்சர்லாந்தில் உள்ள பாலியல் திரிந்தவர்களின் சமூக நிலையும், சட்ட அங்கீகாரமும் நாம் மேற்குலகை பொதுவாக மேம்பட்டதாக பார்ப்பதுபோல் மேம்பட்டதாக இல்லையென்ற என்ற சில புள்ளி விவரங்களோடு தனது அறிமுக உரையை முடித்துக் கொண்டார்.
லிவ்விங் ஸ்மைல் வித்யா நேரில் வந்திருந்தார். அவர் இந்திய அரவாணிகள் குறித்தான விளக்கங்களையும், கடவுச் சீட்டில் பால் எதுவென பதியப்படுவதில் எழுந்த பாரபட்சத்துக்கு எதிராக நீதிமன்றம் வரை தான் போய்ப் போராடியதையும் குறிப்பிட்டார். பெண்களை ரோஜாப் பூவுக்கு ஒப்பிடும் இந்தச் சமூகம் அரவாணிகளை வாடாமல்லிக்கு ஒப்பிடும் மனநிலை பற்றி சுவாரசியம் ததும்ப பாடல் வரிகளுடன் சொன்னார்.
பிறகு உரையாடல் அறைக்குள் உலாவத் தொடங்கியது. அரவாணிகள் குறித்து உயிரியல் அடிப்படையில், சமூக அடிப்படையில் மட்டுமன்றி, தன்னுடலை தானே நேசிக்க முடியாத முரண்நிலை உள்ளுணர்வின் தவிப்புகள் பற்றியும், ஆண் பெண் என்ற இருமை பால்நிலைகளுக்கு இடையில் இடைப்பாலினங்கள் பற்றியும் அதற்குள் ஓரினச் சேர்க்கையாளர்கள் (கே, லெஸ்பியன்) அடங்குவதையும், அவர்களும் ஒருபடித்தானவர்களாக இல்லாத பாலினங்கள் கொண்டவர்கள் என்பதையும், உடலியல் ரீதியில் (ஆண்குறி பெண்குறியை நியமமாகக் கொண்டு) பால்நிலை (sex)வகைப்படுத்தப்படுவதையும், பாலினம் (gender) சமூகத்தால் பெருமளவுக்கு கட்டமைக்கப்படுவதையும், அதற்குவெளியில் பால்நிலை உருவாக்கத்தில் (உயிரியல் ரீதியில்) குரோமோசோம்களை முன்வைத்து விளக்கமளிக்கப்படுவதையும், அது இப்போ கேள்விக்கு உள்ளாகிக் கொண்டிருப்பதையும், கரு உண்டாகி முதல் 5 வாரங்களில் எந்தச் சிசுவும் பெண்ணாகவே இருப்பதாகவும் பிறகுதான் மாற்றமடைகிறது என்பதையும், அதை நிராகரித்து அந்த 5வாரத்துள் சிசு ஒரு பால்நிலையையும் கொண்டிருப்பதில்லை என்ற புது விளக்கங்களையும் பற்றியெல்லாம் உரையாடப்பட்டது. தொன்மங்களிலிருந்து நவீன சமூகம் வரை அரவாணிகளின் பயணம் குறித்தான கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.
சுமார் 5 மணித்தியாலங்களாக நீண்ட இந்தப் பொழுது ஒரு மறக்கவியலா சந்திப்பாக எல்லோரிடமும் -குறிப்பாக முதன்முதலாக வந்தவர்களிடம்- நினைவில் பதிய வைத்திருக்கிறது.
அடுத்த சந்திப்பை சோபியின் உலகம் நூல் சுவிசின் ஒரு காட்டுப் பகுதி குடிசைக்கு அழைத்துச் செல்ல இருக்கிறது. தத்துவ அறிமுகங்களை ஒரு 14 வயது சிறுமிக்கு புகவைக்கிற நாவல் அது. இளசுகளிலிருந்து கிழடுகள் வரை காட்டை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்வதாக இருக்கிறோம்.
தொகுப்பு: ரவி (வா.உ. சார்பில்)
நிழற்படங்கள் & காணொளி : ஜெயந்தன் ,
நிகழ்வில் கலந்துகொண்டு பங்காற்றிய அனைவருக்கும் நன்றிகள்!