குறிப்பு – புதியமாதவி
” தாம்பத்திய உறவுக்கான இடமோ வசதியோ இல்லாத இருப்பிடத்தில் வாழ்வதால் குழந்தைகள் பாதிக்கப்படுவதும்…….”.
ஊடறு பெண்கள் சந்திப்பு இந்தியாவின் பெருநகரமான மும்பையில் 2017 நவம்பர் மாதம் 25, 26 காரிக்கிழமை, ஞாயிற்றுகிழமை இருநாட்கள் நிகழ்வாக நடைபெற்றது. தமிழகம் அல்லாத அயல்மாநிலத்தில் இந்நிகழ்வை நடத்துவதில்இருந்த நடைமுறை சிக்கல்களையும் தாண்டி இந்நிகழ்வு நடைபெற்றது.முதல்நாள் நிகழ்வு : சனிக்கிழமை 25/11/17காலை 10.30 மணி அளவில் பாண்டூப் மேற்கு பகுதி பிரைட் உயர்நிலைப்பள்ளி திருவள்ளுவர் அரங்கில் சந்தித்தோம்.
நிகழ்வை எம் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுஸ்பேரோ பெண்கள் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் எழுத்தாளர் அம்பை அவர்கள் தொடங்கி வைத்து நிகழ்வை நடத்தினார்.மோனோபஸ் , பெண்ணுடல் அடையும்மாற்றங்கள், பெண் பூப்படையும் வயது, அதுசார்ந்த புரிதல்கள், நம்பிக்கைகள் மற்றும் குடும்பத்திலும் குடும்பத்தை சுற்றியும் பெண் அனுபவிக்கும் பாலியல் வன்கொடுமைகள், தொந்தரவுகள் என்று உரையாடல்கள் விரிந்தன உரையாடல்களின் தொடர்ச்சியாகஉரையாடல்களில் கலந்து கொண்டவர்களின் தனிப்பட்ட பெயர்களையோ அடையாளங்களையோ பதிவு செய்வதில்லை என்ற அறநிலையைக் கடைப்பிடிப்பதில் ஊடறு தெளிவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பதிவு செய்யும் காமிரக்கள் மவுனித்தன. கட்டுடைக்க முயன்ற உரையாடல்களின் மூலமாக சில உண்மைகள் வெளிவந்தன. அவை:
1) பூப்படைதல் குறித்து குடும்பத்தில் தாயோ மற்றவர்களொ பெண்ணுக்கு அறிவுறுத்துவது அரிதாக இருப்பது தெரிகிறது. அக்கா . சித்தி. அத்தை என்று குடும்பத்தில் மூத்த பெண்கள் இருந்தால் அவர்கள் மூலமே ஒவ்வொரு பெண்ணும் பூப்படைதல் குறித்த தகவலை அறிந்திருக்கிறாள்.
2) பூப்படைதல் நிகழ்வில் இலங்கை, தமிழகம் மற்றும் மராட்டிய மாநிலத்தின் சடங்குகளும் நம்பிக்கைகளும் பொதுவாகவே இருக்கின்றன.
3) இரத்தப்போக்கு குறித்து எதுவுமே அறியாமலும் உடலுறுப்புகளின் இயற்கையான செயல்பாடுகளை அறியாமலும் பெண்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
4) குழந்தைப் பேறடைந்தப் பெண்களுக்கும் கூட பிரசவத்திற்கு முன், வயிற்றிலிருக்கும் குழந்தை எப்படி வெளியில் வரும் என்ற அறிதலோ புரிதலோ இல்லை என்பதும் அதிர்ச்சியாக இருந்தது.
5) பள்ளிக்கூடங்களில் இதுகுறித்த உரையாடல்களோ ஆசிரியர்களின் அறிவுறுத்தல்களொ இல்லை , அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்கம், கீழ்த்தட்டு மக்களின் குழந்தைகள் கல்வி கற்கும் பள்ளிகளில் இவை எதுவுமே பேசுப்பொருளாக இருப்பதில்லை,
அதற்கான அவசியத்தையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதையும் அறியமுடிந்தது.
6) குடும்பத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து இப்போதும் பெண்கள் வெளிப்படையாக பேசுவதற்கு தயக்கம் காட்டினார்கள். குடும்ப நிறுவனத்தின் கட்டமைப்பை வெளிப்படையான இம்மாதிரி உரையாடல்கள் சிதைவு படுத்தும்
என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது.
7) ஒரு சிலர் தனக்குத் தெரிந்தவர், உறவினர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் என்று மூன்றாமிடத்தில் படர்க்கை நிலையில் நின்று பேச முன்வந்ததார்கள்.
8) தந்தையால் பாலியல் வல்லாங்கு செய்யப்பட்ட பெண் தனிப்பட்ட முறையில் அதைப்பற்றி பேசியதும் அவளே எழுத்தில் தன் தந்தையைப் பற்றி பதிவு செய்யும் போது தந்தையின்
தலைமையைக் கொண்டாடும் வகையில் பதிவு செய்திருந்ததையும் எழுத்தாளர் அம்பை அவர்கள் குறிப்பிட்டார்.
9) பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகள் சிறுவர்களும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதைக் குறித்து சில தாய்மார்கள் வெளிப்படையாக பேசினார்கள்.
10) சிறுவன் ஒருவன் நடுத்தர வயது பெண்ணின் மார்பகங்களைத் தொடுவதும் கூட நிகழ்கிறது , இச்சிறுவர்களை எப்படி கையாளுவது என்பது குறித்து சமூக அக்கறையுடனும் எதிர்காலம்
குறித்த கவலையுடனும் அவர்கள் உரையாடினார்கள்.
11) பெரும்பாலும் இன்றைய இணையதள வசதிகள் காரணமாக அவர்கள் பார்க்கும் காட்சிகளும் தந்தைமார்களின் கைபேசிகளில் அவர்கள் கண்ட காட்சிகளும் கூட அவர்களின் இம்மாதிரியான வயதுக்கு மீறிய பாலியல் செயல்பாடுகளுக்கு பெரும்
காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.
12) மும்பை போன்ற பெருநகர வாழ்க்கையின் இருப்பிடமும் இதற்கான ஒரு காரணமாகவே இருக்கிறது. கணவன் மனைவியின் தாம்பத்ய உறவுக்கான இடமோ வசதியோ இல்லாத இருப்பிடத்தில் வாழ்வதால் குழந்தைகள் பாதிக்கப்படுவதும் இம்மாதிரி செயல்களைச் செய்யும் உணர்வுக்கு உந்தப்படுவதும் நடக்கிறது என்பதையும் பெண்கள் வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்கள்.
13) GST வரிவிதிப்புக்குப் பின் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நேப்கின்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரியைக் குறைகக்வோ / நீக்கவோ முடியாது என்பதற்கு ஆட்சியாளர்கள் சொன்ன காரணங்கள் : ஒரு பெண்ணுக்கு ஒரு மாதத்தில்
அந்த 3 நாட்களுக்கு 3 அல்லது 4 நேப்கின்கள் மட்டும் தானே தேவைப்படும்!” என்ற அவர்களின் மறுமொழி. இந்த மறுமொழியின் வாசிப்பில் குடும்பத்தில் ஒருவனாக இருக்கும் ஆணுக்கு பெண்ணுடல் சார்ந்த புரிதல் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைக்
காட்டுகிறதா அல்லது ஆட்சியாளர்கள் பெண்ணுடல் சார்ந்த அக்கறையின்மையை வெளிபப்டுத்துகிறதா என்ற கேள்வி எழுந்தது.
14) இந்தியப் பெண்களைக் குறித்து ஆய்வுசெய்த யுனிசெப் நிறுவனத்தின் ஆய்வறிக்கையை பெருநகரப் பெண்களின் இவ்வுரையாடல்கள் மீண்டும் மீண்டும் உறுதி செய்திருக்கின்றன.
, research by Unicef India in Bihar and Jharkhand found that while 85% of girls were using cloth as a menstrual absorbent, 65% knew what sanitary pads were, because they had seen ads for them on TV. Their reasons for avoiding them range from lack of money to not knowing how to use them. Ignorance about periods in general is definitely shocking: 83% of girls in the same Unicef study had no idea what to expect when they started bleeding, and nearly half missed school because of menstruation.(guardian may 2016)
15) . தொண்டு நிறுவனங்கள் எவ்வளவுதான் குடிசைப்பகுதிகளிலும் ஆதிவாசிகள் இருப்பிடங்களிலும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தாலும் குடிநீர் இணைப்பு, மின்சாரம் போன்ற வசதிகளைப் பெறுவதற்கு அரசின் உதவி கட்டாயம் தேவைப்படுவதை தன் களப்பணி அனுபவத்தின் ஊடாக தெளிவாக எடுத்துரைத்தார் நங்கை குமணன்.
16)மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேலாக இருக்கும் பெண்கள் சார்ந்த நலத்திட்டங்களில் அரசின் மெத்தனமும் கவனக்குறைவும் தொடர்வதையும் அரசு அதிகாரத்திலிருக்கும் எவருக்கும் பெண்கள் சார்ந்த இப்பிரச்சனைகள் குறித்து எந்த அளவுக்கு புரிதலும் விழிப்புணர்வும் இருக்கிறது என்பதையும் எழுத்தாளர் அம்பை நிகழ்வின் முடிவில் தன் முத்தாய்ப்பான கருத்தாக முன்வைத்தார்.
மதிய உணவுக்குப் பின் ஸ்பேரோவின் “தேகம் ” ஆவணப்படம் திரையிடப்பட்டது.
திருநங்கைகள் குறித்த இந்த ஆவணப்படம் திருநங்கைகளின் மனக்குமுறலை மட்டுமின்றி அவர்களின் போராட்டமே வாழ்க்கையாக தொடரும் கதையை அவர்களின் மொழியில் பேசியது. உடல் வேறு, உணர்வுகள் வேறாக இருக்கும் தங்கள் வாழ்க்கையில் தம் உணர்வுகளுக்கான உடலைப் பெற அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அதை அவர்கள் எவ்வாறுகடந்து வந்தார்கள் என்பதையும் இந்த ஆவணப்படம் முன்வைத்தது. மேலும் அவர்களில் சிலர் பெண்கள் செய்யும் வேலைகளான பாத்திரம் துலக்குவது, கோலம் போடுவது, துணி துவைப்பது, தண்ணீர் எடுப்பது இத்தியாதி வேலைகள் தமக்கு விருப்பமானதாக இருந்ததால் தாங்கள் பெண்ணாக உணர்ந்ததாக தெரிவித்தது சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஆண் பெண் என்ற பால்வேறுபாடு இச்சமூகம் சுமத்தி இருக்கும் அவர்களின் அன்றாட வேலை சார்ந்ததல்ல, எந்த வேலையையும் எவரும் செய்யலாம், செய்ய வேண்டும் என்ற புரிதல் இல்லாமலிருப்பதைக் கவனிக்க முடிந்தது.
ஆணுடலைப் பெண்ணுடலாக்க அவர்கள் மேற்கொள்ளும் அறுவைச்சிகிச்சைக் குறித்தும் பேசிய ஆவணப்படம் அதையும் தாண்டி அர்த்தநாரீஸ்வரர் தத்துவத்திற்குள் தன்னுடலைப் புகுத்தி தன்னையும் தன்னுடலையும் கொண்டாடும் இன்னொரு திருநங்கைகள் முகத்தையும் காட்டியது மிகவும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் ஊடறு சந்திப்புக்காக வந்திருந்த பெண்களுடன் இந்த உரையாடலில் கலந்து கொண்ட மகிழ்ச்சி மகளிர் பேரவை, பிரைட் இளநிலைக்கல்லூரி மாணவியர், அம்பேத்கர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை மற்றும் மாணவியர், மராத்திய எழுத்தாளர் ஆஷா காம்ப்ளே, மராத்திய பேராசிரியர் மாதவி குல்கர்னி, வழக்குரைஞர் செல்வகுமாரி, ஆசிரியை ஹேமாமாலினி, சுசிலா அய்யாபிள்ளை , திருமதி ஜெயா ஆசீர், நங்கை குமணன், செல்வி, புனிதா மற்றும் அனைவருக்கும் ஊடறு சார்பாக நன்றியும் அன்பும்.