யமுனா ராஜேந்திரன்-(நன்றி http://www.globaltamilnews.net)
விடுதலைப் புலிகளின்பால் கண்மூடித்தனமான வெறுப்புப் பாராட்டுபவர்களிடமிருந்தோ அல்லது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுளர்களாக விடுதலைப் புலிகள் அமைப்பை நிலைநாட்டுபவர்களிடமிருந்தோ, விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையது மட்டுமல்ல, பிற இயக்கங்களது பெண் போராளிகளது ஆன்மாவையும் அவர்தம் ஈகத்தையும் எம்மால் புரிந்து கொள்ள முடியாது. |
விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளைப் பற்றின கல்விப்புலம் சார்ந்த புகலிட மற்றும் புலத்திலுள்ள விடுதலைப் புலி எதிர்ப்பாளர்களின் பெண்ணியப்பார்வை, குறிப்பானதல்லாத, பொதுமைப்படுத்தப்பட்ட மேற்கத்திய பெண்நிலைவாத நோக்கிலிருந்தே எழுகிறது. அழிக்கும் வன்முறை, உயிர்தரும் தாய்மை போன்ற கருத்தாக்கங்களின் அடிப்படையில் போராளிகளைக் குரூரமாகப் பார்க்கும் எல்லைக்கும் இத்தகைய ‘பெண்நிலைவாதிகள்’ வந்து சேர்கிறார்கள்.
இத்தகைய விமர்சனங்களைக் கூட அடித்தட்டு வர்க்கப் பெண்களிடமிருந்தோ அல்லது உழைப்புவர்க்கப் பெண்களிடமிருந்தோ வருவதில்லை. ஈழ-இந்திய பார்ப்பனீய மரபை ஏற்ற அல்லது மேல்மத்தியதரவர்க்க கல்விப்புல மதிப்பீடுகளை ஏற்ற பெண்களிடமிருந்தே இத்தகைய கசந்த விமர்சனங்கள் வருகின்றன.
எதிர்திசையில் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளை இயல்பான பெண்களின் குணங்களிலிருந்தும், மரபிலிருந்தும் முற்றிலும் அகற்றி, அவர்களை இயந்திரவயமான, ஜடவயமான இயந்திர உயிரிகளாகச் சித்தரிக்கும் அடேல் பாலசிங்கம் போன்ற, பெண்புலிகளைக் கோட்பாட்டமைவுக்குள் கொணர்ந்த, விடுதலைப் புலிகளின் கோட்பாட்டாளர்களின் பார்வைகளையும் ஒருவர் ஏற்க முடியாது.இரண்டுவிதமான பார்வைகளும் பெண் போராளிகளைப் பற்றிய ஒரு முரட்டுத்தனமான, இயந்திரவயமான சித்திரத்தினையே வழங்க முயற்சிக்கின்றன என்பதனை ஆழ்ந்து பரிசீலிக்கிற ஒருவர் உணரமுடியும். பெண் போராளிகள் என்பவர்கள், தாய்மையுணர்வற்ற, உயிரின் மகத்துவம் அழிந்த, காதலுணர்வற்ற, உறவுகளைத் துறந்த, இயற்கையின் அழகுகளை மறுத்த, உறவுகளில் நெகிழ்ச்சியைக் கொண்டிருக்காத, கொல்லும் தொழில்வயமான உயிரிகள் என்கிற விதமான சித்திரத்தினையே வேறுவேறு விதங்களில் இவர்கள் கட்டமைத்திருக்கிறார்கள்.
தென் ஆப்ரிக்கா, எரித்ரியா, நிக்கரகுவா போன்ற புரட்சிக்குப் பிந்திய சமூகங்களிலும், போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த, போராட்டம் ராணுவரீதியில் அழிக்கப்பட்ட ஈழ சமூகத்திலும் இந்தவகையிலான பார்வைகள் நிலவிவந்தன, இன்றும் நிலவி வருகிறன்றன.
போர்ச்சூழல் அற்ற சமூகவெளியில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண் போராளிகள் வாழத் தகுதியற்றவர்கள் என்கிற சித்திரம் இதனால் உருவாகிறது. அரசினாலும் வேட்டையாடப்பட்டு, பொதுசமூகத்தினாலும் துரத்தப்பட்டு, உறவுகளினாலும் நிராகரிக்கப்பட்டு, நிராதரவான நிலைமைக்குத் தள்ளப்பட்ட பெண்போராளிகளதும், வடகிழக்கு பெண் அமைப்புகளின் சமூகநல ஊழியர்களதும் வாக்குமூலங்கள் இதற்கு ஆதாரமாக இருக்கின்றன.
இத்தகையதொரு அரசியல் சமூகப் பின்புலத்தில்தான் பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் விடுதலைப்புலிப் பெண்போராளிகளின் கவிதைகள் தொகுப்பாக நமக்குக் கிடைத்திருக்கிறது.
ஈழப் பெண் கவிதைகள் என எடுத்துக் கொண்டால், எண்பதுகளின் இலட்சியக் கனவுகளையும், மனித உரிமைச் சீற்றங்களையும் வெளிப்படுத்திய சொல்லாத சேதிகள், அதனைத் தொடர்ந்து சித்திரலோக மௌனகுரு, தாமரைச் செல்வி பதிப்பகம் நிழல் திருநாவுக்கரசு போன்றோர் தொகுத்த செல்வி–சிவரமணி கவிதைகள் போன்றன நமக்கு முன் இருக்கின்றன. சொல்லாத சேதிகள் தொகுப்புக்கும் செல்வி–சிவரமணி கவிதைகளுக்கும் இடையில் ஒரு நுட்பமான வேறுபாட்டை எவரும் அனுமானிக்க முடியும்.
தமிழின அடையாள இருப்பையும், இலட்சியங்களையும், கனவுகளையும் வெளிப்படுத்திய சொல்லாத சேதிகள் கவிஞைகளோடு ஒப்பிட, செல்வியும் சிவரமணியும் விடுதலைப் போராட்டமும் பெண்களின் இருத்தலும் தொடர்பான பதட்டத்தையும் கசப்புணர்வையும், போராட்டத்தின் மானுட இலக்கு தொடர்பான சந்தேகங்களையும் விரக்தியையும் வெளிப்படுத்தினார்கள்.
இவர்களுக்குப் பின் தோன்றி இன்றும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிற புலத்தினதும் மற்றும் புகலிடத்தினதும்; பெண்கவிஞர்கள் பெரும்பாலும் செல்வியினதும் சிவரமணியினதும் பரப்பில்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாரகள் அல்லது அகலித்துக் கொண்டிருக்கிறார்கள் எனும் மதிப்பீட்டிற்கு வரமுடியும்.இந்தப் பொதுத்தளத்திலிருந்து மாறுபட்ட ஒரு தனித்த குரலாக தமிழ்நதியின் கவிதைகளை நாம் மதிப்பிடலாம். ஆக்கிரமிப்பின் வன்முறை குறித்த பெருங்கோபமும், விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கான இரங்கலாகவும் இருக்கும் அவரது கவிதைகளில் இன்னும் மனோவலிமையுடனான, விமர்சனம் கடந்த நம்பிக்கை தென்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள், விமர்சகர்கள், விமர்சனமற்றவர்கள் எனும் மாறுபாடுகளைத் தாண்டி, இவர்களிலும் இரண்டு பொதுத்தன்மைகள் இருக்கிறது : இவர்கள் அரசியல் ரீதியில் களத்தில் நின்ற பெண்போராளிகள் இல்லை. கவிதைப் பயிற்சி எனும் அளவில் இவர்களுக்கு பெண்போராளிகளுக்குக் கிட்டியிரமுடியாத கால அவகாசமும், இடமும், வாய்ப்புக்களும், கல்விப்புலமும் இருந்து வந்திருக்கின்றன.
இத்தகையதொரு ஈழப்பெண் கவிதைப்பின்புலத்தில்தான் பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் விடுதலைப்புலிப் பெண் போராளிகளின் கவிதைகள் தொகுப்பாக நமக்குக் கிடைத்திருக்கிறது.
26 போராளிக் கவிஞைகளின் 70 கவிதைகளைக் கொண்டதான பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பினை ஸ்விட்சர்லாந்திலிருந்து இயங்கும் ஊடறு பெண்ணிய இணையதளமும் தமிழகத்திலிருந்து விடியல் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டிருக்கின்றன.
1991 ஆம் ஆண்டிலிருந்து 2004 ஆம் ஆண்டு ஈழத்தில் வெளியாகின 10 தனித் தொகுதிகளிலிருந்தும், தமிழகத்திலிருந்து வெளியான பெயல் மணக்கும் பொழுது (2007) எனும் தொகுப்பிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்டு பெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பு உருவாகியிருக்கிறது. வானதி கவிதைகள் மற்றும் கஸ்தூரியின் கவிதைகள் அவை வெளியிடப்பட்ட தொண்ணூறுகளிலேயே புகலிடத்தில் பரவலாகக் கிடைத்தன. பெயல் மணக்கும் பொழுது புகலிடத்திலும் தமிழகத்திலும் சுலபமாகக் கிடைத்தது. பிற தொகுதிகளில் வெளியான கவிதைகளை எழுதிய கவிஞைகள் அநேகமாகப் புகலிட நாடுகளிலும் தமிழகத்திலும், பரவலாக ஈழத்திலும் கூட அறியவராதவர்கள் என்றே சொல்லலாம்.
இந்த வகையில் இப்போது வெளியாகியிருக்கிற இந்தத் தொகுதி என்பது பல்வேறு விதங்களில் முக்கியமான தொகுதி எனலாம்.
கவிதையை முன்பாகவும் வாழ்வை அதற்குப் பின்பாகவும் வைத்துப் பார்க்கிறவர்களுக்கு ஆனதல்ல இக்கவிதைகள். வாழ்வை அனைத்திற்கும் முன்பாகவும் அதன் தொடர்ச்சியாகக் கவிதையையும் பிறவற்றையும் வைத்துப் பார்ப்பவர்களுக்கு ஆனது இக்கவிதைகள். கவித்துவம், கவிதைத்தேர்ச்சி போன்ற இதுவரைத்திய மரபான தமிழக-ஈழ, படித்த, மத்தியதரவர்க்க மதிப்பீடுகளைக் கவிழ்த்துக் கொட்டிவிட்டுத்தான் இந்த கவிதைகளுக்குள் நுழையவேண்டும் என்பதனை முன்நிபந்தனையாகவே நாம் கொள்ள வேண்டியிருக்கிறது.
நவீன தமிழகப் பெண்கவிதைகள், ஒரு சில விதிவிலக்கான கவிதைகள் அன்றி – குறிப்பாக மாலதி மைத்ரியும் குட்டி ரேவதியும் எழுதிய செங்கொடியின் தற்கொலை குறித்த கவிதைகள் – தலித் கவிஞைகளால் எழுதப்படும் கவிதைகள் உள்பட, அகவயமானகவிதைகள் தானேயன்றி, அவை ஆழ்ந்த அரசியல் விழிப்புணர்வு கொண்ட கடப்பாடுடைய கவிதைகள் என்று சொல்லிவிட முடியாது.
தமிழகப் பெண்கவிதைகள் சமூக-அரசியல் வயப்படாததற்கான வலிமையான காரணமாக தமிழகக் கவிதை விமர்சனமரபும் இருக்கிறது என நாம் சொலலமுடியும்.
பெயரிடாதநட்சத்திரங்கள் வரையிலான ஈழப் பெண் கவிகளால் எழுதப்பட்ட கவிதைகளும் தொடர்ச்சியான விடுதலை ஈடுபாடும் கடப்பாடும் கொண்ட கவிதைகள் என்றும் சொல்லிவிட முடியாது. சொல்லாத சேதிகளில் வெளிப்பட்ட கவிஞைகளில் பெரும்பாலுமானோர் இன்று கவிதைப் பரப்பில் இருந்து தொலைதூரம் காணாமலேயே தங்கிவிட்டார்கள் என்பதையும் நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இவையனைத்தையும் ஞாபகம் கொண்டுதான் நாம் பெயரிடாத நட்சத்திரங்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தான விமர்சன மதிப்பீட்டை உருவாக்கிக் கொள்ள முடியும்.
அறுபதுகளில் முதன்முதலாக எதிர்ப்பு இலக்கியம் (resistence literture) எனும் சொற்றொடரை பாலஸ்தீன நாவலாசிரியரான காசன் கனாபானி உருவாக்கினார் என்று குறிப்பிடுகிறார், எதிர்ப்பு இலக்கியம் குறித்து ஆய்வு செய்த அமெரிக்கக் கல்வியாளரான பார்பரா ஹார்லோ. எதிர்ப்பு இலக்கியம் என்பதனை தேசிய விடுதலை இலக்கியம் எனக் குறிப்பிடும் கனாபானி, ஆக்கிரமிப்புக்கு எதிரான, தமது நிலத்திற்கான, காலனியாதிக்கத்திற்கு எதிரான, தமது கலாச்சார இருத்தலுக்கான இலக்கியம் இதுவெனவும் வரையறை செய்கிறார். தேசியக் கலாச்சாரம் குறித்துப்பேசிய ஆப்ரிக்கப் புரட்சியாளரான அமில்கார் கேப்ரியலும், காலனியாதிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரானதும், தேசியப் பெருமிதத்திற்குமானதாக, வரலாறற்ற மக்களின் வரலாறாக தேசியக் கலாச்சாரம் எனும் கருத்தாக்கத்தை முன்வைக்கிறார்.
இன்று தலித் இலக்கியம் என்பதனை, ஆப்ரோ-அமெரிக்க நிறவெறிக்கு எதிரான கறுப்பு இலக்கியம் என்பதனை, பயங்கரவாத அழிப்பு என்பதனைக் காரணம் காட்டி குன்டனாமோ சிறையில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய நிரபராதிகள் எழுதும் இலக்கியம் என்பதனை நாம் எதிர்ப்பிலக்கியம் என வகைப்படுத்த முடியும்.
விடுதலைப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் பயங்கரவாத இயக்கங்களாக முத்திரை குத்தப்படும் இந்நாட்களில், விடுதலைப் போராட்ட இயக்கங்களின் தவறுகளை மட்டுமே முன்வைத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களையே முழுமையாகக் குற்றம் சுமத்தும் ‘விமர்சகர்கள்’ தோன்றிவிட்ட இந்நாட்களில், விடுதலை அரசியலில் வன்முறையின் பாத்திரம் மிகப்பெரும் கேள்விகளுக்கு உட்படுத்தப்படடுவிட்ட இந்நாட்களில், எதிர்ப்பு இலக்கியம் எனும் வகைக்ககுள் வைத்து, பெண் போராளிகளின் கவிதைகள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதே வியர்த்தமானது என, இயக்க அரசியலுக்கு எதிரான ‘ஜனநாயகவாதிகளும்’, அரசு சார்பை மனிதாபிமானத்துடன் நோக்கும் ‘எழுத்துப் போராளிகளும்’ வாதிடக் கூடிய சூழல் நமக்கு முன் இருக்கிறது.
இத்தகையதொரு அரசியல்-கவிதைப் பின்புலத்தில்தான் பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் விடுதலைப்புலிப் பெண் போராளிகளின் கவிதைகள் தொகுப்பாக நமக்குக் கிடைத்திருக்கிறது.
விடுதலைப் போராட்டத்திற்கு வெளியிலிருந்து, விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக, விடுதலைப் போராட்டத்தில் நேரடியிலாக ஈடுபடாதவர்களால் எழுதப்பட்ட பெண்கவிதைகள் அதிகதிகமாக ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் எமது நாடுகளிலும் வெளியாகி இருக்கின்றன. ஆயத விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கவிதைகள், ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் அனுபவங்கள், சொற்பமாகவே தொகுதிகளாக வெளியாகி இருக்கின்றன.
தென் ஆப்ரிக்க விடுதலை இயக்கமான ஏஎன்சியின் பெண்கள் பிரிவு தொகுத்து, தென் ஆப்ரிக்க கெரில்லா பெண்கவிகளின் தொகுதி எண்பதுகளில்; இறுதியில் வெளியாகி (malibangwe : poetry is also their weapons : 1980 ) உலகெங்கிலும் விநியோகிக்கப்பட்டது. அதிலிருந்து சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து மூன்றாம் உலகப் பெண்கவிதைகள் எனும் குறுநூலை எமது நண்பர்களுடன் இணைந்து எண்பதுகளின் ஆரம்பத்தில் கொணர்ந்தது இன்னும் எனது ஞாபகத்தில் நிழலாடுகிறது.
இலத்தினமெரிக்காவில் எல்ஸால்வடார், நிகரகுவா போன்ற நாடுகளிலிருந்து பெண் கெரில்லாக்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் முக்கியமான இரு தொகுதிகள் எல்ஸால்வடார் பெண்கவியான கிளாரிபல் அலக்ரியா (on the front line : guerilla poems of elsalvadore : curbstone : 1989 ) மற்றும் இங்கிலாந்து மொழிபெயர்ப்பாளரான டினா லிவிங்க்ஸ்டன் (poets of nicaraguan revolution : katabasis : 1993) போன்றவர்களால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த அரிதான உலகக் கவிதை வகையினத்தில் வைத்து நோக்கத்தக்கதான தொகுதியாக பெயரிடாத நட்சத்திரங்கள் இருக்கிறது என்பதுவே இந்தக் கவிதைத் தொகுதியின் முக்கியத்துவத்தினை நிலைநாட்டிவிடப் போதுமானதாகும்.
ஆயுதப்போராட்டத்தினிடையில் வெளியுலகில் அதிகமும் சஞ்சாரம் செய்திருக்க வாயப்பில்லாத, சின்னச் சுற்றுக்குள் மட்டுமே படிக்கப்பட்ட, பேரழிவின் போது அழிந்ததில் மீந்த இந்தக் கவிதைகளை விரிந்த வாசகப் பரப்பினுள் வைப்பது என்பதும் ஒரு அரிதான, முக்கியமான நிகழ்வாகும். அவ்வகையில் இந்தத் தொகுப்பினை தொகுக்கும் பணியில் ஈடுபட்ட ஊடறு பெண்ணிய இணைய சஞ்சிகை-விடியல் பதிப்பகம் சார்ந்தவர்கள் நிச்சயமாகவே பாராட்டுக்குரியவர்கள்.
உலக அளவிலான கெரில்லாக் கவிதைகளைத் தொகுத்தவன், தமிழில் அவற்றில் கணிசமானவற்றை மொழிபெயர்த்தவன் எனும் அளவில், கெரில்லாக்களிடம் கவிதை எனும் அனுபவம் குறித்து வெளிப்படும் புரிதல் ஒத்ததன்மையிலானவை என அறிந்தபோது அது எனக்கு எந்தவிதத்திலும் ஆச்சர்யத்தைத் தரவில்லை. மரணமும் கவிதையும் உலகின் அனைத்துக் கெரில்லாப் போராளிகளிடமும் பிரபஞ்ச மீட்சியாகத்தான் இருக்கிறது.
தாம் நேசித்த மக்களுக்காகப் போராடி மடிதல் எனும் இந்த மனநிலையை நாம் முக்தி என்றோ விடுதலை என்றோ கடவுள்நிலை எய்துதல் என்றோ எப்படியும் பெயரிட்டுக் கொள்ளலாம். இந்த ஆன்ம தரிசனத்தில் கெரில்லாக்களிடம் ஆண் பெண்ணென்னும் பேதம் கடந்த மானுடஈடேற்றம் எனும் ஓருணர்வை மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.
எல்ஸால்வடோர் நாட்டின் கெரில்லாக் கவிஞன் ரோக் டால்டன் கவிதை பற்றி இப்படிச் சொல்கிறான் :
வார்த்தைகளால் மட்டும் ஆனதல்ல கவிதை
என
நீ அறிந்து கொள்ள உதவியதற்குக் கவிதையே-
என்னை மன்னித்துவிடு
குர்திஸ் கவிஞன் ஸெர்கே பேகஸ் கவிதை பற்றி இவ்வாறு குறிப்பிட்டுச் செல்கிறான்:
கவிதைகளை விடுதலை செய்யும் பொருட்டு
போராளிகளின் துப்பாக்கிகளிடம் நிலம் கேட்டுக் கொண்டது
இந்த அடர்ந்த இரவிற்குத் தீயிட்டு
சூரியனின் கரங்களில் விழுந்து மரணிக்கும்படி
எல் ஸால்வடார் நாட்டின் பெண் கெரில்லாவான ஹைடி கவிதையென்பது என்ன என்று சொல்கிறார் பாருங்கள்:
யாம் வாகைசூடும் வரை
எமது முயற்சிகளை நெய்து நிற்கும்
மலைக்குன்றுகளின் காவலாள்
மீளத் திரும்பும்போது
செவியிலிருந்து செவிக்கு விரியும்
உனது புன்னகை
வெற்றிக்கான எமது உத்திரவாதம்
ஏனெனில்
வீரனே
நாம் சாதிக்கிற அனைத்திலும்
எதிரியினது சுடு வரம்பின் எல்லை நீ
ஈழப் பெண்போராளி வானதி தனது எழுதி முடிக்கப்பெறாமல் போகிற கவிதைகள் குறித்து இப்படிச் சொல்கிறார் :
எழுதுங்களேன்!
நான் எழுதாது செல்லும்
என் கவிதையை
எழுதுங்களேன்
வானதி எழுதி முடிக்காத கவிதையைத் தாம் எழுதிவிட்டதாக நாதினி சொல்கிறார் :
‘எழதாத என்கவிதை எழுதுங்களேன்’
எனும் உன் கவிதை
எழுதப்பட்டுவிட்டது
உப்புவெளியில் உருகிய உங்கள்
உடல்கள் மீது
எமது வீரர்கள்
எழுதாத உன் கவிதையை
எழுதி முடித்தனர்
ரோக் டால்டன் முதல் நாதினி வரை கவிதை என்பது இங்கு சொற்களால் உருவாக்கப்படும் பிரதிகள் அல்ல, செயல் ஒன்றே சிறந்தசொல் என்று சொன்ன சே குவேரா போல, கவிதை என்பது இங்கு செயல். கவித்துவம் என்பது அவர்தம் மரணம். தமது மக்களின் மீட்சிக்கான விதையாகும், இறுதிக் கனவான வாகைசூடலின் இடைநிலையில் முடிவுறும், தமது மரணம் எனும் செயல். அவர்கள் ஒரு போதும் தமது கனவைத்தாம் காணப்போதில்லை என்பதை அறிந்த நிலையில், மரணத்தைச் சதா எதிர்நோக்கியபடி செயல்படும் தருணம்தான், இந்த அனைத்துக் கெரில்லாப் போராளிகளினதும் கவிதைத் தருணம்.
இதற்கு அப்பாலான கவித்துவ முயக்கத்திற்காக மட்டுமே கவிதைகளை வாசிக்க நினைப்பவர்கள் இத்தொகுதியைப் புரட்டாமல் விலகி விடுவது நன்ற
.இந்தக் கவிதைகள் ஈழப் பெண்களின் போராட்ட வாழ்வில் மிகப்பெரும் ஆவண மதிப்பைக் கொண்டிருக்கிறது என்பதனை எவரும் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். கவிதைகளின் தொகுப்பாளர்கள் தமது தொகுப்புரையில் இதனைத் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள் :
ஓரு பெட்டைக்கு இந்தச் சமூகம் எப்போதும்போலக் கீறி வைத்திருக்கும், வழமையான,சலிப்பான வாழக்கைப் பாதையின் வரைபடத்தைப் பொருட்படுத்தாது, இந்தப் பெண்கள் சாகச மனத்தோடு பயணித்து, வெளிச்சத்துணுக்ககள் நிறைந்த பல பத்துப் புதிய வழிகளை எமக்காகச் செப்பனிட்டுத் தந்திருக்கிறார்கள். இன்று நம் தமிழ் சமூகத்தில் பெண்களின் சாகசம் (adventure) குறித்துப் பேசப்படவில்லை. சாகசங்களுக்கு என எந்த ஒரு இடமுமில்லை. நமது சராசரி தமிழ்க் குடும்பங்களிலிருந்து இளம்பெண்கள் வருடக்கணக்கில், மேற்படிப்பு, வேலை, திருமணம் போன்ற காரணைங்களைத் தவிர்த்து, வீட்டுத் தொடர்புகளற்று, வீட்டைத் துறந்து போவது என்பது சாதாரணமான நிகழ்வல்ல. தமிழ்ப் பெண்ணின் வரலாற்றில் இவர்கள் அம்மைல்கல்லை அடைந்திருக்கிறார்கள். அத்தோடு அதை நமக்காக ஆவணப்படுத்தியும் இருக்கிறார்கள்.
பெண்களுக்காக விதிக்கப்பட்ட பல கலாச்சாரத் தடைகளைத் மீறி, போர்க்களம் காணல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், உளவு பார்த்தல், பல்வேறு நவீன இயந்திரங்களை இயக்குதல், அவற்றைப் பழுது பார்த்தல், சிக்கலான விடயங்களைத் தீர ஆராய்தல், முடிவுகளை எடுத்தல், இரவுக் காவல்களிலும் பணிகளிலும் ஈடுபடுதல், எல்லைக் காவல், தீவிர உடற்பயிற்சி, இரகசியங்களைப் பேணுதல், வரைபட வாசிப்பில் தேர்ச்சி எனப் பல புதிய பரிமாணங்களை எட்டியிருக்கிறார்கள். இதனால் பல தமிழ்ப் பெண்களின் அறிதல்களமும், தெரிவுகளும் அதிகரித்திருப்பதுடன், நம் பெண்கள் தேர்ச்சி பெற்றுக் கொள்வதற்கான துறைகளும் அவை குறித்து இன்றுவரை நிலவும் தமிழ்ச் சமூக மனதின் மௌனங்களும் சுக்கு நாறாக உடைக்கப்பட்டிருக்கின்றன.
செயலுக்கும் சொற்களுக்கும் இடையிலான போராட்டத்தில் இந்தப் பெண் போராளிகள் மரணித்த தமது தோழனின் புன்னகையை நினைவு கூர்கிறார்கள், காதலனை நினைவுகூர்கிறார்கள், மழலை இன்பத்தை நினைவு கூர்கிறார்கள், விட்டு வந்த அன்னையின் அன்பை நினைவு கூர்கிறார்கள், அமைதியான கடல்பரப்பில் புதையுண்ட தமது சகபோராளிகளை நினைவுகூர்கிறார்கள், உயிர் வாழ்தலின் மேலான தமது தீராத வேட்கையை வெளியிடுகிறார்கள். மழையும் கூட அவர்களுக்குப் பிடித்துத்தான் இருக்கிறது. எனினும் சில வேளைகளில்தான் அவர்களால் மழையை ரசிக்க முடியும்.
சூரியநிலா தனது மனவோட்டத்தை இப்படிப் பதிகிறார் :
காற்றுக் கட்டுப்படுத்தப்பட்ட அறைகளும்
கண்ணாடிச் சாளரங்களும்
பூமரங்களைத் தழுவும் காட்சியும்
அனைவருக்கும் கிடைக்கும் பொழுது
நாங்களும்
மழையை ரசிக்கக் கூடும்
உதடுகளில் பொருத்தப்பட்ட
தேநீர்க்கோப்பையை மறந்து
மழைத் துளிகளில் ஒளிரும்
தோழர்களின் நினைவில் தோய்ந்தபடி!
அந்த நாள் வராமலேயே இந்தப் பெண் போராளிகள் மரணத்திருக்கிறார்கள். இன்றிருக்கும் நாம், குற்றவுணர்வுடன் இந்தப் போராளிப் பெண்களை சதா நினைவுகூர்ந்தபடி, இறுக மூடப்பட்ட கண்ணாடி ஜன்னலருகில் நின்று, சடசடத்து வழியும் மழையைப் பார்த்தபடி, தொலைதூரத்தில் விழிவெறித்து, எமது கோப்பைத் தேநீரை அருந்தமுடியாது கையில் பிடித்தபடி நிற்கிறோம். இந்த நூல் அத்தனை கனத்துடன் எமது மனதை அழுத்திக் கொண்டிருக்கிறது.
———————————————————–
பெயரிடாத நட்சத்திரங்கள் :
ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்
160 பக்கங்கள்
ஊடறு-விடியல் வெளியீடு
ஐரோப்பாவில் கிடைக்குமிடம் :
Ranjani@bluewin.ch —udaru@bluewin.ch